இணைப்பிதழ்கள்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு வரவேற்பு

ரிஷி

1. மகாத்மா காந்தி பிரவசி சுரக்‌ஷா யோஜனா என்னும் வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கான ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தை இந்தியா சமீபத்தில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தியது?

அ) மலேசியா

ஆ) சிங்கப்பூர்

இ) இலங்கை

ஈ) ஐக்கிய அரபு நாடுகள்

2. சமீபத்தில் இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தனது அதிபர் தேர்தலுக்காக விலைக்கு வாங்கியுள்ள ஆப்பிரிக்க நாடு எது?

அ) கென்யா

ஆ) நமீபியா

இ) நைஜீரியா

ஈ) மொராக்கோ

3. லிபியாவின் பிரதமராகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்?

அ) அப்துல்லா அல் திண்ணி

ஆ) அலி ஸெய்தான்

இ) அஹமது மைடீப்

ஈ) ஓமர் அல் ஹஸ்ஸி

4. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட போர்ப் பயிற்சியின் பெயர் என்ன?

அ) விஜயீ பவா

ஆ) சுதர்ஸன் சக்தி

இ) ஷூர்வீர்

ஈ) சர்வடா விஜய்

விடைகள்: 1. ஈ) ஐக்கிய அரபு நாடுகள். வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகம் அலங்கிட் அஸைன்மெண்ட்ஸ் என்னும் இந்திய வியாபார நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு இந்த மகாத்மா காந்தி பிரவசி சுரக்‌ஷா யோஜனா என்னும் ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை யூஏஇ எக்ஸ்சேஞ்ச் கவனித்துக்கொள்ளும். எமிகிரேஷன் செக்கிங் தேவைப்படும் பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் இணைவோரின் பங்களிப்புடன் அரசின் பங்களிப்பும் இணையும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு வாழ்க்கை அமைத்துக்கொள்ள உதவுதல், அவர்களது அந்திமக் காலத்தில் உதவுதல், விபத்தால் இறக்க நேரிட்டால் உதவுதல் ஆகியவையே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

2. ஆ) நமீபியா. இந்த நாடு தனது அதிபர் தேர்தலுக்காக இந்தியாவிலிருந்து 3,400 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விலைக்குப் பெற்றுள்ளது நமீபியா. இத்தகைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு நமீபியாதான். நேர்மையான, எளிதான தேர்தல் வாக்குப்பதிவுக்காக நேபாளம், பூடான், கென்யா போன்ற நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்தியாவிலிருந்து ஏற்கனவே வாங்கியுள்ளன.

3. இ) அஹமது மைடீப் (Ahmed Maiteeq). 42 வயதாகும் அஹமது மைடீப் லிபியாவின் மிக இள வயது பிரதமர். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதவிக்கு வந்திருக்கும் 5-ம் பிரதமர் இவர். 2011-ல் சர்வாதிகாரி கடாபியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான போராட்டம் வெடித்து அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்; அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய லிபியப் பிரதமரான அஹமது மைடீப் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

4. ஈ) சர்வடா விஜய். சுமார் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் வெம்மையான சூழலில் போரிடுவது தொடர்பான பயிற்சி இது. வழக்கமாக ராணுவம் மேற்கொள்ளும் பயிற்சிதான் இது. தரைப்படை, வான்படை ஆகியவற்றின் போர்த் திறத்தைச் செழுமைப்படுத்துதல், போர்க்கருவிகளைப் பயன்படுத்திப் பார்த்தல் போன்றவற்றை இந்திய ராணுவம் இந்தப் பயிற்சியில் மேற்கொண்டது.

SCROLL FOR NEXT