ஐ.டி. என்று சொல்லப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை தற்போது உறைந்த நிலையில் உள்ளதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தற்போதைய பின்னடைவிலிருந்து ஐ.டி. துறையில் 20 சதவீதம் முன்னேற்றம் இருக்கும் என்று இந்தியாவின் தொழில் முனைவோர் அமைப்பான, சிஐஐயின் ‘இந்தியா ஸ்கில் ரிப்போர்ட்-2015’ நம்பிக்கை தெரிவிக்கிறது.
கேம்பஸ் குறையும்?
இருப்பினும், கல்லூரிகளுக்குச் சென்று இறுதியாண்டு முடித்த மாணவர்களை வேலைக்கு எடுப்பதில் ஐ.டி. நிறுவனங்கள் தற்போது ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் கேம்பஸ் நேர்காணல் முறையில் நேரடியாகப் புதியவர்களை வேலைக்கு எடுப்பது மேலும் குறையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2014-ம் ஆண்டைப் பொறுத்தவரை காம்பஸ் தேர்வு மூலம் பணியமர்த்துவது 11.9 சதவீதம் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டிலோ 16.8 சதவீதமாக இருந்தது. இந்த சதவீதம் மேலும் குறையும் என்பதே இப்போதைய யதார்த்தம்.இந்த அறிக்கையின் விவரங்களைக் கண்டு பொறியியல் படித்தவர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று இந்தியன் ஸ்டாஃபிங் ஃபெடரேசன் அமைப்பின் தலைவரான ரிதுபர்ணா சக்ரவர்த்தி தெரிவிக்கிறார்.
புதிய வாய்ப்புகள்
“ஐ.டி. துறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கேம்பஸ் நேர்காணல் முறை பிரபலமாக இருந்தது. அந்தத் தேர்வு முறையில் ஐ-டி நிறுவனங்களுக்கு ஆர்வம் குறைந்துபோனது. ஆனால், பொறியியல் பட்டதாரிகளைப் பொறுத்தவரை இதுவே முடிவல்ல. தற்போது, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன” என்கிறார் அவர்.
கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் அணுகுமுறையை நிறுவனங்கள் மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கிறார் சக்கரவர்த்தி. “உற்பத்தித் துறை, ஆட்டோமொபைல், கட்டுமானத் துறை சார்ந்த அத்தனை நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான திறமைசாலிகளை இதுவரை ஐ.டி. துறையினரிடம் இழந்திருந்தனர். தற்போது ஐ.டி. துறை தேக்கத்தை அடைந்துள்ள நிலையில் புதிய திறனாளிகளை வேறு துறையினரும் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
நம்பகமான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கு, கல்லூரிக்கு நேரடியாகச் சென்று தேர்வு செய்வதைவிட, வேறு வழிகளைத் தற்போது ஐ.டி. நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன. கேம்பஸ் நேர்காணல் முறையை ஐ.டி. நிறுவனங்கள் தவிர்ப்பதற்கு, முன் அனுபவம் உள்ளவர்களை விரும்புவதும் ஒரு காரணம்.
“தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வாயிலாக 30 சதவீத புதுமுக மாணவர்கள் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர். அவர்களிலும் ஓரளவு அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. அப்போதுதான் அதிகமான திறனுள்ள, அறிவு வளம் மிக்க பட்டதாரிகள் கிடைப்பார்கள். வேலைச் சந்தையிலும் அவர்களுக்கு மதிப்பு வரும்” என்கிறார் ரிதுபர்ணா.
ஆங்கில இந்துவிலிருந்து தமிழாக்கம்: ஷங்கர்