இந்தியாவில் தற்போதுள்ள பிபிஓ, ஐடி, மற்றும் அவுட்சோர்ஸிங் பணிகளை வைத்துக் கணக்கிட்டாலும் ஆங்கிலம் இல்லாமல் மற்ற வெளிநாட்டு மொழிகள் தெரிந்தவர்கள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் மேல் தேவை என்று எவாலுசர்வ் எனும் ஆராய்ச்சி அமைப்பு கணிக்கிறது. இந்தத் தேவை மேலும் மேலும் வளர்ந்து செல்லும் என்றும் தெரிவிக்கிறது.
பொதுவாக, ஒரு நாடு பொருளாதார ரீதியாக வளரும்போது அதன் மொழியைக் கற்பவர்களும் அதிகரிக்கின்றனர். அந்த நாடு பொருளாதாரத்தில் நலிவடையும்போது இந்த நிலை தலைகீழாக மாறுகிறது. ஒருவர் எந்த மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுக்கும்போது இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
வெளிமொழியில் வேலை
இன்றைய சூழலில் சீன, ஜப்பானிய, கொரிய மொழிகள் தெரிந்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அரபி, ஹீப்ரு மொழிகள் தெரிந்தவர்களுக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக, ஜப்பானிய மொழிக்கான இன்டர் பிரட்டராகப் பணிபுரிபவர், ஒரு நாளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஒரு பக்கத்தை மொழிபெயர்க்க குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை கிடைக்கிறது. இதற்கு அந்த மொழியை மூன்று ஆண்டுகளாவது கற்க வேண்டியது அவசியம்.
டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மத்தியப் பல்கலைக்கழகங்களும், ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ்முல்லர் பவன் உள்படப் பல வெளிநாட்டு அமைப்புகளும் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்கின்றன. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இத்தகைய மொழி களைக் கற்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகளையும் வழங்குகிறது.
வாய்ப்புகள்
வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்குச் சுற்றுலா, தூதரகங்கள், நாடுகளுக்கு இடையேயான பணிகள், மக்கள் தொடர்பு, அச்சுப் பணி, மொழியாக்கம், உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்கள் பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்யன், சீனம், ஜப்பானியம், கொரியன், போர்ச்சுகீஸ் உள்ளிட்ட மொழிகளில் திறன் பெற்றவர்களைத் தற்போது தேடுகின்றன.
ஐ.நா. சபையின் சர்வதேச அமைப்புகள், இந்திய அரசின் வெளியுறவுத் துறை, ரிசர்வ் வங்கி, ஆகியவையும் வெளிநாட்டு மொழியறிவு கொண்டவர்களை வரவேற்று வேலை அளிக்கும் இடங்கள் ஆகும்.
இணையம் துணை
பெரும்பாலும் இந்தியாவின் பெரிய நகரங்களில்தான் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இது ஒரு குறைபாடாக இருந்தாலும் இந்த நிலை மாறிவருகிறது. இணையம் வழியாகக் கற்பது என்பது இன்று அன்றாடக் கல்விப் பணியாக மாறியிருக்கிறது. தொலைதூரக் கிராமங்களில் வசிப்பவர்கூட இணையத்தின் மூலமாக இன்று வெளிநாட்டு மொழிகளைக் கற்பதற்கு என்ன தடை?