இணைப்பிதழ்கள்

பிளஸ் 2-வுக்கு பிறகு: பொறியியல் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி?

எஸ்.எஸ்.லெனின்

பொறியியல் மேற்கல்வியை கனவாகக் கொண்ட மாணவரும், அவர்களின் பெற்றோரும், சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில் கடைசிச் சுற்று பரிசீலனையில் மும்முரமாக இருப்பார்கள். உயர் கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் குழப்பம் இருக்காது.

அவர்களுக்கு அடுத்த நிலையில், தனியார் கல்லூரிகளில் தங்களுக்கானதைத் தெரிவு செய்வதில் பல சுற்று யோசனைகள், பரிசீலனைகள் மேற்கொள்ள வேண்டிய பெரும்பான்மையானோரின் பாடு திண்டாட்டமாகிறது.

கல்லூரி, பாடத் தேர்வு

மாணவருக்கு உகந்த பாடப்பிரிவு அடங்கிய கடைசிப் பரிசீலனைக்குரிய கல்லூரிகள் சிலவற்றை முன்கூட்டியே தேர்வு செய்திருப்பது நல்லது. அவற்றுக்கும் முன்னுரிமை வழங்கிக் கல்லூரிக்கான ‘கோட்’ எண்ணுடன் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சரியான கல்லூரிகளை அடையாளம் காண அவற்றின் தர மதிப்பீடுகள், கடந்த காலச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைச் சீர்தூக்கி இறுதிப் பரிசீலனையில் சில கல்லூரிகளைக் கொண்டுவர, ஏப்ரல் 28 நாளிட்ட ‘தி இந்து- வெற்றிக்கொடி’ பக். 4-ல் வெளியான ’பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்வது எப்படி?’ என்ற கட்டுரை உதவும்.

வழிகாட்டும் அண்ணா பல்கலைக்கழகம்

கல்லூரிகளின் பெயர்களில் பலருக்கும் குழப்பம் வரலாம். இதைத் தவிர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் ஒரே மாதிரியான பெயர்கள் உடைய கல்லூரிகளைப் பட்டியலிட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, உங்கள் பகுதியில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளையும் மாவட்ட வாரியாகப் பட்டியலிட்டிருப்பதை, இந்தத் தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2015, மாணவர்களுக்கான தகவல் மற்றும் வழிமுறைகள்’ என்ற தலைப்பில் விண்ணப்பப் படிவம் நிரப்புவதற்கான வழிகாட்டிக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவையே கலந்தாய்வுக்கான பல்வேறு சரிபார்த்தல்களை மேற்கொள்ள உதவும். குறிப்பிட்ட ஒரு அசல் சான்றிதழைக் கலந்தாய்வு கூடத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போவது, கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்ட நாளில் பங்கேற்க இயலாமல் போவது போன்ற அசாதாரணமான சூழ்நிலையில் உரிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை எதிர்கொள்வது குறித்தும் அறிந்துகொள்ள அண்ணா பல்கலைக்கழகம் தளத்தில் (>https://www.annauniv.edu/tnea2015/) சுட்டியிருக்கும் தகவல்கள் உதவும்.

கலந்தாய்வுக்குத் தயாராகலாம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை முன்னிட்டு விண்ணப்பித்துள்ள 1,54,238 மாணவ, மாணவியருக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு ஜூன் 15 அன்றும் தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூன் 19 அன்றும் நடந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 28 அன்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூன் 29 அன்றும் கலந்தாய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 31-க்குள் கலந்தாய்வு நிறைவடையும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் இன்னொருவர் என இருவருக்கு 50 சதவீதக் கட்டணச் சலுகையை அரசுப் பேருந்துகளில் பெறலாம். இதற்குப் பேருந்து நடத்துநரிடம் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தைக் காண்பித்தால் போதும்.

கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்பாக அங்கே சென்றுவிடுவது நல்லது. அப்போதுதான் கலந்தாய்வின் போக்கு மற்றும் காலியிடங்களின் இருப்பை உணர்ந்து, நமது கணிப்புகளைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவும்.

அதே நேரம் ஆளாளுக்குத் தெரிவிக்கும் கருத்துகள், ஆலோசனைகளுக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பது குழப்பத்தையே அதிகரிக்கும். வளாகத்தைச் சுற்றி மொய்க்கும் தனியார் கல்லூரிகளின் தரகர்களைத் தயவு தாட்சண்யமின்றித் தவிர்த்துவிடலாம்.

சான்றிதழ்களை முறைப்படி அடுக்கி வைத்துக்கொள்வதும், அசல் சாதிச் சான்றிதழ் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ் போன்றவற்றைச் சரிபார்த்து எடுத்துச் செல்வதும் நமது முன்னுரிமைகளை இழக்காதிருக்க உதவும்.

கலந்தாய்வுக் கூடத்தில்..

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களில் டெபாசிட் கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ. ஆயிரமும் ஏனையவர்கள் ரூ. ஐந்து ஆயிரமும் செலுத்த வேண்டும். இவர்களுக்காகக் கலந்தாய்வு வளாகத்தில் செயல்படும் 5 வங்கி கவுண்டர்களில் கட்டணத்தைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அமர்வுக்கு 500 முதல் 800 பேர் எனத் தினசரி 8 அமர்வுகளாகக் கலந்தாய்வை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

அமர்வில் பங்கேற்பவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து முதலில் விளக்கமளிப்பார்கள். தொடர்ந்து மாணவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை எனத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு வெளி மாநிலத்தில் படித்தவர்களாக இருந்தால், அவர்களுடைய நிரந்தர இருப்பிடச் சான்றைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியும்.

விண்ணப்பத்தில் சாதிச் சான்றிதழை மாற்றி வைத்தவர்கள், பொதுப்பிரிவின் கீழ் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். கலந்தாய்வின்போது உரிய சாதிச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் உரிய இட ஒதுக்கீட்டைப் பெற வழியுண்டு.

சுமார் ஆயிரம் பேர் அமர்வதற்கான தேவைகளுடன் கூடிய கலந்தாய்வுக் கூடத்தில், கல்லூரிகள் - அவற்றில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றைப் பாடப்பிரிவு, இட ஒதுக்கீடு வாரியாக அறிந்துகொள்ள ஏதுவாகப் பெரிய கணினித் திரை வைக்கப்பட்டிருக்கும். கலந்தாய்வின்போது மாணவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். கைபேசி எடுத்துச்செல்லத் தடை கிடையாது. ஆனால், அதைப் பயன்படுத்த அனுமதியில்லை.

முடிவெடுக்கும் நேரம்

கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள். கல்லூரிகள், பாடப் பிரிவுகளை, அதன் காலியிடங்கள் வாரியாகக் காட்டும் கணினி, ஒரு கணினிப் பணியாளர் உதவியுடன் ஆன்லைனில் நமது தேர்வைத் தீர்மானிக்கலாம். கைபேசி மூலமோ இடையில் எழுந்து சென்றோ வெளியில் காத்திருக்கும் நபர்களிடம் ஆலோசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேபோல உதவிக்காக அமர்த்தப்பட்டிருக்கும் கணினிப் பணியாளரிடம் ஆலோசனை கேட்கக்கூடாது. கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்துப் பரவலாகப் பரிந்துரைகளை வழங்கும் அளவுக்கு அவர் அறிந்திருக்கவும் மாட்டார்.

பதற்றமின்றித் தனக்கான கல்லூரியை மாணவர் தெரிவு செய்துகொள்ளலாம். இதற்கென நேர வரையறை எதுவும் கிடையாது என்றாலும் அதிகம் நேரம் எடுத்துக்கொள்வது குழப்பத்தையே அதிகரிக்கச் செய்யும். எனவே பரிசீலனைக்குரிய கல்லூரிகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகச் சுருக்கி, கடைசியாக 3 கல்லூரிகளில் ஒன்றைச் சற்று நேரம் எடுத்துக்கொண்டு முடிவெடுக்கலாம்.

இறுதியாக ஒரு கல்லூரியைக் கணினியில் சொடுக்கித் தேர்வு செய்த பிறகு மாற்ற இயலாது. இந்த நடைமுறைகள் முடிந்த கையோடு ஒதுக்கீட்டு ஆணையையை நீங்கள் பெற்றுவிடலாம்.

SCROLL FOR NEXT