நமஉடலில் தோன்றும் முதல் உள்ளுறுப்பு எது? இதயம். அதனால்தான் உலகில் மூளையைவிடவும் இதயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, போலிருக்கிறது.
ஒரு குழந்தையின் கரு உருவாகி நான்கு வாரங்களில் அல்லது கரு உருவான 24வது நாளில் இதயத் துடிப்பைக் கேட்கலாம். மனிதக் கருவில் மட்டுமல்லாமல் முதுகெலும்புள்ள எல்லா உயிரினங்களிலும் முதலில் வேலை செய்ய ஆரம்பிக்கும் உள்ளுறுப்பு இதயம்தான்.
கழிவை அகற்றும்
இதயம் உருவான பிறகு ஊட்டச்சத்துகள், ஆக்சிஜனை மற்ற செல்களுக்கு அது அனுப்புகிறது. அதன் மூலம்தான் தோல், எலும்புகள், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக உருவாகின்றன. உடலில் உருவாகும் கழிவு, கார்பன் டை ஆக்சைடையும் இதயம் வெளியேற்றுகிறது, காலாகாலத்துக்கும்.
உண்மையில் கருவில் உருவாகும் இந்த அமைப்பை குழந்தையின் இதயம் என்று உறுதியாகக் கூற முடியாது என்றொரு கூற்று இருக்கிறது. ஏனென்றால், ரத்தத்தை கரு முழுவதும் செலுத்துவதற்கு சில ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் வேலையை அப்போது செய்கின்றன. இந்த ரத்த நாளங்களே கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து, 8 வாரங்களுக்குப் பிறகு நான்கு அறைகளையும் இரண்டு பம்ப்களையும் கொண்ட இதயமாகின்றன.
இப்படியாக உருக்கொண்ட மனித இதயம், சராசரியாக விநாடிக்கு ஒரு முறை என்ற வகையில் 70-80 ஆண்டுகளுக்கு தொடர்ந்து துடித்துக்கொண்டே இருக்கிறது.
தன்னிச்சை
நமது மணிக்கட்டில் உள்ள ரத்த நாளங்களை சிறிது நேரம் இறுக்கிப் பிடித்து நிறுத்திவைத்தால், கை விரல்களுக்கு ரத்தம் பாயாமல் கை விரல்கள் துவண்டுவிடும். இதுதான் வழக்கமான தசைகளின் கட்டமைப்பு.
அதேநேரம் இதயத் தசை வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அதில் ஆக்சிஜனை சுமந்து செல்வதற்காக ஹீமோகுளோபின் நிறைந்துள்ளது. அத்துடன் அதிக சக்தியை உருவாக்க, கூடுதல் மைட்டோகாண்ட்ரியாவையும் கொண்டுள்ளது.
இதயம் துடிக்கும் அளவை பேஸ்மேக்கர் செல்கள் கட்டுப்படுத்துகின்றன. அதன் மூலம் இதயம் தன்னிச்சையாகத் துடிக்கிறது, மூளையின் கட்டளைகள் இதயத்துக்குத் தேவையில்லை. அதனால்தான் ஒருவர் மூளைச்சாவு அடைந்தபோதும்கூட, இதயம் துடிப்பதை நிறுத்துவதில்லை.