இணைப்பிதழ்கள்

பிளஸ் 2-க்குப் பிறகு: உயர்கல்விக்குக் கைகொடுக்கும் விடுமுறை கணினி பயிற்சி

எஸ்.எஸ்.லெனின்

பள்ளி மாணவர்களின் கோடை விடுமுறையையும் கம்ப்யூட்டர் சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் பிரிக்க முடியாது. அந்த அளவுக்கு நகரங்களில் கோடை காலம் வந்தாலே காளானாய்க் கணினி பயிற்சி வகுப்புகள் பெருகிவிடும். ஏனைய வகுப்பு மாணவர்களைவிட, கல்லூரியில் காலடி வைக்க ஆயத்தமாகும் மாணவர்களுக்குக் கணினி பயிற்சி தவிர்க்க முடியாதது.

அவற்றில் எதைப் படிப்பது, எப்படிப் படிப்பது என்ற சந்தேகங்களுக்குச் சென்னையைச் சேர்ந்த கணினி பயிற்சி வல்லுநர் மோகன்ராஜ் விஜயன் ஆலோசனை வழங்குகிறார்:

அடிப்படை, அத்தியாவசியப் படிப்புகள்

எந்தத் துறை படிப்பானாலும் அடிப்படை கணினி பயிற்சி தவிர்க்க இயலாதது. அறிவியல் மற்றும் பொறியியல் பாட மாணவர்கள் சற்று முன்கூட்டியே தயாராக வேண்டுமென்றால், மற்றவர்கள் அனைத்து அடிப்படை கூறுகளிலும் தேர்ச்சிபெற வேண்டும்.

கணினி பரிச்சயமே இல்லாதவர்கள் அல்லது அதற்கான வாய்ப்பு கிடைக்காத கிராமப்புற மாணவர்கள் கம்ப்யூட்டரின் அடிப்படை பயன்பாடு, எம்.எஸ். ஆபிஸ் ஆகியவற்றை உடனடியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றுடன் கூகுள் போன்ற தேடுபொறி மற்றும் இமெயில் உள்ளடக்கிய இணையதளப் பயன்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றைக் கற்றுக்கொள்ள அதற்கான பயிற்சி மையம் செல்லலாம் அல்லது கணினி துறை மாணவர்கள், நூலகப் புத்தகங்கள், இணைய உதவி ஆகியவற்றைக் கொண்டும் சுயமாகவே கற்றுக்கொள்ளலாம்.

அடுத்த கட்டப் பயிற்சிகள்

அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் சி, சி++, ஜாவா, டாட் நெட் ஆகிய புரோகிராமிங் மற்றும் அப்ளிகேஷன் படிப்புகளைக் கற்கலாம். இதன் தொடர்ச்சியாக வேலை சார்ந்த படிப்புக்கு உதவும் சாப்ட்வேர் டெஸ்டிங் தொடர்பான கணினி படிப்புகள், மல்டிமீடியா கோர்ஸ்கள் ஆகியவற்றைப் பயிலலாம்.

போட்டோஷாப், கிராஃபிக் டிசைனிங், அனிமேஷன் தொடர்பான படிப்புகள் கணினி பரிச்சயமுள்ள மாணவர்களுக்குக் கூடுதல் பயனையும், அதேநேரம் கோடை விடுமுறையை அலுப்பின்றிக் கழிக்கவும் கைகொடுக்கும். சான்றிதழ் மற்றும் பட்டயங்களுடன் இவை தொகுப்புப் படிப்புகளாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்பவர்கள், தாங்கள் சேரவுள்ள உத்தேசக் கல்லூரி படிப்புக்கு உதவும் மேம்பட்ட கணினி அறிவியல் படிப்புகளில் ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு பி.காம். மாணவர்கள் Tally படிப்பது, பொறியியல் மாணவர்கள் Auto CAD படிப்பது ஆகியவற்றைச் சொல்லலாம்.

உறுதுணையாகும் படிப்புகள்

பள்ளி விடுமுறையிலும் படிப்பா என அலுத்துக்கொள்ளும் மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த சவால் தரும் கணினி படிப்புகளை மேற்கொள்ளலாம். சதா இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன் எனச் சரணடைந்திருப்பவர்கள், அவை தொடர்பான படிப்புகளைப் பொழுதுபோக்காகவும் மேற்கொள்ளலாம்.

இணையதளங்களை வடிவமைப்பது, கணினி மற்றும் மொபைல் போன் அப்ளிகேஷன்களை உருவாக்குவது போன்றவை பொழுதுபோக்காகவும், அதே சமயம் சுவாரஸ்யமூட்டும் சவாலாகவும் அமைந்திருக்கும். அதிகப்படி மொபைல் போன்களின் இயங்குதளமாக உள்ள ஆண்ட்ராய்டு அடிப்படையில், அப்ளிகேஷன்கள் மற்றும் கேம் டிசைனிங், டெவலப்பிங் போன்றவை மாணவர்களுக்கு ஆர்வம் விதைக்கும் படிப்புகள். குறுகிய காலப் படிப்புகளாகக் கிடைக்கும் இவை, கல்லூரிப் படிப்பினூடே புராஜெக்ட் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மைக்கு அடித்தளமிடும். பின்னாளில் தங்கள் எதிர்காலத்தைச் செதுக்கிக்கொள்ளவும் இந்த ஆர்வம் ஒரு உந்துசக்தியாக உருவெடுக்கும்.

செலவின்றிப் படிக்கலாம்

கல்லூரிச் சேர்க்கைக்கு முழுதாக 3 மாதங்கள் இருப்பதால் நல்ல கணினி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, மேற்கண்டவற்றில் தேவையானதைக் கற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே, கணினி பயன்பாட்டை அறிந்தவர்கள் ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணினியைக்கொண்டு, தாமாகவே கற்றுக்கொள்ளலாம். அந்த அளவுக்கு இணையத்தில் பயிற்சிக் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

பெரும்பாலான கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள், தங்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக ’கிராஷ் கோர்ஸ்’ என்ற பெயரில் கணினி பயிற்சி வகுப்புகளைச் சகாயக் கட்டணத்தில் வழங்குவார்கள். அருகில் உள்ள மையத்தை அடையாளம் கண்டு அவற்றில் மாணவர்கள் சேரலாம். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், சேவை அமைப்புகள் கட்டணமின்றிப் பயிற்சி வழங்குவதும் உண்டு.

அரசு சார்ந்த கணினி பயிற்சி மையங்கள் 50% வரை எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குகின்றன. தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையுடன் கணினி பயிற்சிகளை வழங்கும். ஒரு சில கணினி பயிற்சி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வு என்ற பெயரில் சேர்க்கையை அதிகரிக்கக் கணிசமான மாணவர்களுக்குக் கட்டணத் தள்ளுபடி வழங்குவதுண்டு.

பயிற்சி மையம் தேர்ந்தெடுப்பு

கணினி பயிற்சி மையத்தைத் தேர்ந்தெடுப்பதில் இருப்பிடத்துக்கு அருகில் இருப்பது, நியாயமானக் கட்டணம், கற்பித்தல் மற்றும் கணினி செய்முறை வகுப்புகள் குறித்துப் பயிற்சி, குறிப்பிட்ட மையத்தின் முன்னாள் மாணவர்களிடம் ஆலோசனை ஆகியவற்றைப் பரிசீலித்து முடிவுக்கு வரலாம். அருகில் மையம் அமையப் பெறாதவர்கள் அநாவசியமாக அக்னி வெயிலில் அலைவதைத் தவிர்த்து, ஆன்லைன் வகுப்புகள் வாயிலாகவும் பயிற்சி பெறலாம்.

இவையெல்லாம் கணினி பயன்பாட்டில் மென்பொருள் சார்ந்தவை. இது மட்டுமல்லாது கணினி உள்ளிட்டப் பல்வேறு ஹார்டுவேர் பயிற்சிகள் பெறுவதன் மூலமாகக் கல்லூரி படிப்புக்குச் சிறப்பாக அடித்தளம் இடுவதோடு, படித்துக்கொண்டே கணிசமாகச் சம்பாதிக்கவும் செய்யலாம். அது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

SCROLL FOR NEXT