கலிங்கம், மகாகாந்தாரா, கமலமண்டலா, தெற்கு கோசலம், திரிகலிங்கம், மற்றும் ஒரிஸ்ஸா எனப் பல பெயர்களில் இன்றைய ஒடிசா அழைக்கப்பட்டது.
ஆதிவரலாறு
மகாபாரதத்தில் கலிங்கம் குறித்த பதிவுகள் உள்ளன. நந்தவம்சத்தில் இருந்து தொடங்குகிறது கலிங்கம். கி.மு. 261-ல் நடந்த கலிங்கப் போர் அசோகரைப் புத்த மதத்தைத் தழுவச் செய்தது. கரவேலாவின் புகழ்மிக்க ஆட்சி, சாதவாகனர்கள், சமுத்திர குப்தர், மராத்தியர்கள், சசாங்கா, ஹர்ஷவர்தன், சோமவம்சி வம்சம், கங்கா வம்சம், சூர்யவம்சி கஜபதி அரசர்கள், சாளுக்கிய வம்சம், சோழப் பேரரசு என முக்கியமான அரசுகளின் தடம் ஒடிசாவில் ஆழமாகவே பதிந்துள்ளது.
4 மற்றும் 5-ம் நூற்றாண்டுகளில் கடல் மூலம் வாணிகம் சிறப்பாக நடந்தது. இதன் மூலம் குடியேற்றமும் பண்பாடும் அயல்நாடுகளுக்குப் பரவியது. இலங்கையின் முதல் மன்னன் விஜயா ஒரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற தகவல் இதனைச் சொல்லும்.
7-வது நூற்றாண்டில் சீனப் பயணி யுவான்சுவாங் வருகை நிகழ்ந்தது.
வங்கச் சுல்தான் சுலைமான் கார்னி கி.பி. 1568-ல் படையெடுத்து நுழைந்தார். பின்னர் மொகலாயர்களும் மராட்டியர்களும் அதிகாரத்துக்கு வந்தனர். 1803-ல் ஆங்கிலேயர்கள் ஒரிஸ்ஸாவில் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
உதயமான மாநிலம்
ஆங்கிலேய அரசின் நிலக் கொள் கையை எதிர்த்து 1817-ல் பிகா புரட்சி என்ற விவசாயிகள் எழுச்சி நடந்தது. புரட்சிக் குழுவின் தலைவர் பாகா ஜாட்டினும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டனர்.
1911-ல் வங்க மாகாணத்தில் இருந்து பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா தனிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. 1920-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, ஒரிய மொழி பேசும் மக்களை இணைத்துத் தனி மாநிலக் கோரிக்கையை முன்வைத்தது.
இதையடுத்து 24 சமஸ்தானங்களை உள்ளடக்கி 1936 ஏப்ரல் 1-ம் தேதி ஒரிஸ்ஸாவை ஆங்கிலேய அரசு அமைத்தது. 1947-ல் இந்தியா விடுதலையடைந்தது. சாரய்கேலா மற்றும் கார்ச்சவான் சமஸ்தானங்கள் பிஹாருடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி 1950-ல் ஒரிஸ்ஸா முழுமைபெற்ற மாநிலமாக உதயமானது.
வடக்கில் ஜார்க்கண்ட், வடகிழக்கே மேற்கு வங்கம், கிழக்கு மற்றும் தென்கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கில் ஆந்திரப் பிரதேசம், மேற்கில் சத்தீஸ்கர் மாநிலங்கள் தற்போதைய எல்லைகள்.
ஒரிய மொழி அதிகாரபூர்வ அலுவல் மொழி. சாந்தல், சாரவா, கோன்ட், ஓரயான், வங்கம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. 2014-ல் ஒரிய மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
மக்களும் மதங்களும்
இந்துக்கள் 94.35 சதவீதமும், இஸ்லாமி யர்கள் 2.07 சதவீதமும் கிறிஸ்தவர்கள் 2.44 சதவீதமும் ஏனையவர்கள் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களும் வசிக்கின்றனர்.
மக்கள் தொகை: 4 கோடியே 20 லட்சம் பேர். ஆயிரம் ஆண்களுக்கு 978 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதாச்சாரம் உள்ளது. எழுத்தறிவு 73.45 சதவீதம்.
வேளாண்மை
மூன்றில் ஒரு பங்கு மக்கள் விவசாயிகள். நெல் முதன்மைப் பயிர். பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கோதுமை, மக்காச்சோளம், கரும்பு, தேங்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் விளைகின்றன. குறைவான சூரிய ஒளி, மாறுபட்ட மழைப்பொழிவு, குறைவான உரம் பயன்பாடு போன்றவற்றால் வேளாண்மையில் பெருமளவில் சாதிக்க முடியவில்லை.
தாது வளம்
குரோமைட், மாங்கனீஸ், கிராபைட் நிக்கல் மற்றும் இரும்பு போன்ற தாது வளத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலம். நிலக்கரியும் வெட்டி எடுக்கப்படுகிறது.
மணல் சிற்பங்கள்
பட்டை சித்திரம் என்ற ஓவிய வடிவம் ஒடிசாவில் மட்டுமே காணக்கூடியது. கைவினைக் கலைப்பொருட்களை வடிவமைப்பதில் ஒடியர்கள் வல்லவர்கள்.
தற்போதைய ஒடிசாவின் மணல் சிற்பம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்தப் பகுதியில் இந்தக் கலை செழித்தோங்கக் காரணமாகக் கதை ஒன்று கூறப்படுகிறது: தண்டி ராமாயணத்தை எழுதியவர் புலவர் பலராம் தாஸ் தீவிர ஜெகநாதர் பக்தர். தேரோட்டத்தின்போது இறைவனைத் தரிசிக்க முயன்ற அவர் தடுத்து விரட்டப்பட்டார்.
அவமானமடைந்த அவர் நேராக மகோதாதி கடற்கரைக்கு வந்தார். தங்க நிற மணலைக் குவித்து ஜெகநாதரையும் தேவி சுபத்திராவையும் சிற்பமாகப் படைத்து வழிபட்டார். அப்போது தேரில் இருந்த இறைவன், தேவியுடன் மறைந்து மணல் சிற்பம் முன்பு தோன்றினார்கள். பலராம் அவர்களை வணங்கி மகிழ்ந்தார் என்கிறது கதை. இதன் தொடர்ச்சியாகவே இங்கு மணல் சிற்பக் கலை தழைத்தோங்கியதாகக் கூறப்படுகிறது.
சுற்றுலா
கோனார்க் சூரியக் கோவில், பூரி ஜெகநாதர் ஆலயம், ராஜாராணி கோயில், உதயகிரி மற்றும் காந்தகிரி குகைகள், சிலிக்கா ஏரி, பூரி கடற்கரை, பிதர்காணிகா தேசியப் பூங்கா, நந்தன்கனன் உயிரியல் பூங்கா, ஏவுகணை சோதனை தளமான வீலர் தீவு ஆகியவை முக்கிய இடங்கள்.
அரசியலமைப்புச் சட்டம் 113-வது திருத்தத்தின்படி நவம்பர் 2010-ல் ஒரிஸ்ஸாவின் பெயர் ஒடிசா என மாறியது. பெயர் மாறினாலும் செறிவான கலாச்சாரத்தில் மாறாத தேசமாகவே திகழ்கிறது ஒடிசா.