விடுமுறை நாளன்று தெருவோரமாக நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அலுவலக சகஊழியர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்தார். தெரிந்த ஒருவரைக் கண்டவுடன் வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த வார்த்தைகளைக் கேட்டார். “ஹலோ சார், எப்படி இருக்கீங்க?”
உடனே அந்த நபர் “நான் எப்படி இருக்கிறேனா அல்லது நான் எப்படி உணர்கிறேனா? இதில் எதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?” என எதிர்க் கேள்வி எழுப்பினார். அலுவலக நண்பர் கேட்கும் கேள்வியின் உள் அர்த்தம் புரியாமல் “ஓகே சார்…ஃபைன்” எனச் சொல்லிவிட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் முதலாவது ஆசாமி. இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் நலம் விசாரித்தல் என்பது உதட்டளவில் மட்டுமே நடைபெறுகிறது.
உண்மையான உணர்ச்சி
“எப்படி இருக்கீங்க?” எனக் கேட்கும்போது ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக “நல்லா இருக்கேன்” என்கிற வழக்கமான பதில்தான் வரும். ஆனால், “எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேட்கும்போது உண்மையான மனநிலை அங்கு வெளிப்படும் என விளக்குகிறார் அமெரிக்க நிறுவனமான தி எனர்ஜி ப்ராஜெக்டின் தலைமை நிர்வாகி டோனி ஷ்வார்ட்ஸ். அலுவலகத்தில் கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் புதிய பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும்போதும் தானும் தன் சக ஊழியர்களும் எடுத்த எடுப்பில் உச்சரிக்கும் முதல் இரண்டு வார்த்தைகள் “எப்படி உணர்கிறீர்கள்?” என்பவைதான் என்கிறார் டோனி.
இயந்திரங்கள் அல்ல மனிதர்கள்
பணிபுரியும் இடத்தில் உணர்வுக்கு இடம் உண்டா எனும் கேள்வி எழலாம். குறிப்பாக, நிர்வாகிகளும் முதலாளிகளும் இதை ஏற்க மறுப்பார்கள். ஆனால் சந்தேகத்துக்கு இடமின்றி ஒருவருடைய மனநிலை அவருடைய வேலையின் தரத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்கிறார் டோனி. “ஊழியர்கள் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறியவர்கள்தான் அவ்வாறு சொல்லுபவர்கள் ” என்றும் விமர்சிக்கிறார்.
மிக எளிமையான வடிவில் ஒன்றை யோசித்துப் பார்ப்போம். நீங்கள் மிகச் சிறப்பான முறையில் செயல்படும்போது எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பீர்கள்? அப்போது உங்கள் மனதை வர்ணிக்கும் ஒற்றை வார்த்தைகள் என்னென்ன? நேர்மறை, மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, அமைதி, கவனம், உற்சாகம், புத்துணர்ச்சி, ஒருமுகம் இவைதானே! இதற்கு நேர்மாறானச் சூழலை அனுபவிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது நீங்கள் உதிர்க்கும் சொற்கள் என்னவாக இருக்கும்? எதிர்மறை, சோகம், சந்தேகம், வெறுப்பு, பதற்றம், தாழ்வு மனப்பான்மை, சோர்வு, பயம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் அல்லவா! ஆக, நம் செயலுடன் நம் மனநிலை மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது. நம்மைச் சுற்றி நிகழும் விஷயங்களைப் பொருத்து ஒரு நாள் என்பது பிரகாசமான மனநிலைக்கும், மிக மோசமான மனநிலைக்கும் இடையேயான சுழற்சியாக உள்ளது.
கண்டுபிடி… கண்டுபிடி
இன்றைய பணிச் சூழலில் பெரும்பாலோர் அனுபவிக்கும் ஆனால் வெளிக்காட்டத் தயங்கும் ஒரு உணர்ச்சி ‘வேதனை’ என்பதாகும். காலங்காலமாக பணியிடத்தில் இத்தகைய உணர்ச்சி நிலவினாலும் இன்று அதன் அளவு தீவிரமடைந்து வருவதைக் காணமுடிகிறது. காரணம், வாழ்க்கை குறித்தும் வேலைக் குறித்தும் நிரந்தரமற்ற, பாதுகாப்பற்ற, பதற்றமான நிலை. அதே போன்று அதிகப்படியான எதிர்பார்ப்பு. இத்தகைய நிலையில் ஒருவர் எவ்வாறு உணர்கின்றார் என்பதைச் சொல்லி என்னப் பயன்? “உணர்ச்சியை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர அதற்குப் பெயரிடுங்கள்” என்கிறது உளவியல்.
நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நம்மை, நம் உணர்வை அடையாளம் காண வேண்டும். மாறாக, நம் உணர்ச்சிகளை மறுதலிக்கும்போது அதை மீறி நடப்பது கடினமாகிவிடும். முதலில் உணர்ச்சி என்பது ஒருவகை ஆற்றல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த ஆற்றலை நம் சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அதைக் கையாள்வது எளிதாகிவிடும்.
உதாரணமாக, அலுவலகக் குழு சந்திப்பு ஒன்றில் அந்தக் குழுவின் தலைவர் அவர் குழு உறுப்பினர்களிடம் “இன்று எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கூட்டம் தொடங்கியதும் கேட்டார். அதற்கு உறுப்பினர்களில் ஒருவர், “ஒருவிதமான பதற்றத்தோடும், தடுமாற்றத்தோடும் இருக்கிறேன்” என ஆரம்பித்தார். “நேற்றிரவு ஊரில் இருக்கும் என் வீட்டில் என் மனைவியும், குழந்தையும் தூங்கிக் கொண்டிருக்கும்போது கூரையின் ஒரு பகுதி பழுதடைந்து நொறுங்கி விழுந்தது.
நல்ல வேளை இருவரும் காயமின்றித் தப்பினார்கள்” என்றார். இதைக் கேட்ட மற்றொரு குழு உறுப்பினர், “இத்தனை நாட்களாக இது போன்ற உணர்வுகளை யாரோடும் நான் பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால் இன்று நம்மிடையே சொல்லப்படாது எத்தனையோ உணர்ச்சிகள் உள்ளன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டேன். நாம் குழுவாக இணைந்து இனி நம் உணர்வுகளோடு பயணிப்போம்” என நெகிழ்ந்து சொன்னார்.
காரணம், காரியம்
பொதுவாக, தொழில் நேர்த்தியுடன் தொடர்புடைய எந்தச் செயல்பாட்டையும் விளக்கும்போது உணர்ச்சிகளை விலக்கி வைக்கும்படிதான் இத்தனை காலமும் சொல்லப்பட்டது. “நான் சோர்வாக உணர்ந்ததால் என்னால் இந்த வேலையைச் சரியாக முடிக்க முடியவில்லை” என ஒருவர் சொன்னால், “எனக்குக் காரணம் வேண்டாம், காரியம்தான் வேண்டும்” என்ற பதிலைத்தான் அனைவரும் சொல்லிவருகிறோம்.
நாம் தடுமாறும்போது உணர்ச்சியும், காரணமும் மேலோங்குகிறது. ஆனால் எதிரில் இருக்கும் மனிதர் அதைச் சொல்லும்போது மறுதலிக்கிறோம். ஆனால், உண்மையில் நாம் அனைவரும் எப்படி உணர்கிறோம் என்பதை ஆழமாக உணர்ந்து, அதைச் சக ஊழியரோடு பகிர்ந்துகொள்ளும்போது ஆக்கப்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் சிக்கலை வென்றெடுக்கலாம். இப்போது சொல்லுங்கள், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
ஆங்கில ‘தி இந்து’ நாளிதழின் இணைப்பிதழான ‘எம்பவரில்’ வெளியான கட்டுரையைத் தழுவி எழுதியவர் ம. சுசித்ரா