இணைப்பிதழ்கள்

தெரியவில்லை குருவே!- ஆசிரியர் குரல்

செய்திப்பிரிவு

தேர்வுகள் நடக்கும் காலகட்டத்தில் ஒரு பகுதி மாணவர்களுக்குப் பயமும் பதற்றமும் வந்துவிடுகின்றன. மன அழுத்தம் அடைகின்றனர். இதனால் தற்கொலைகளும் நடக்கின்றன. சில ஆசிரியர்களும், சில பெற்றோர்களும்கூட மாணவர்களின் மன அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும், அதையெல்லாம் தாண்டி முன்னேறுகிற திறமையைத்தான் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள்ளே போவதற்கு முன்னால் மனதில் பயம் இருந்தால் அறைக்கு வெளியிலேயே அதைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும்.

பயத்தோடு தேர்வை அணுக வேண்டாம். புரிந்து கொண்டு அணுகினால் வெற்றி நிச்சயம். சரி எப்போது புரியும்? விருப்பம் இருந்தால் புரியும். கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்தால் படிப்பதும் எளிதாகிவிடும்.

தேர்வுக்காகப் படித்துவிட்டு எழுதப் போகிறவர்கள்கூடப் பயத்தால் படித்ததை மறந்து தடுமாறுகின்றனர். அத்தகைய சூழலில் எவ்வாறு நடந்து கொள்ளலாம்? ஒரு கதை இருக்கிறது.

மகாபாரத்தில் வரும் கவுரவர்கள் 100 பேருக்கும் பாண்டர்கள் ஐந்து பேருக்கும் துரோணர்தான் ஆசிரியர். அவர் ஒரு தேர்வு நடத்தினார். ஒரு மரத்தின் கிளையில் வைக்கப்பட்டுள்ள ஆந்தையின் வலது கண்ணில் அம்பை எய்ய வேண்டும் என்பதே தேர்வு. ஒவ்வொரு மாணவரிடம் மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? ஆந்தை தெரிகிறதா? அதன் வலது கண் தெரிகிறதா? என ஒரே மாதிரி கேள்விகளை துரோணர் கேட்டார். 104 மாணவர்களும் “தெரிகிறது குருவே” என ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தந்தனர். ஆனால் அனைவருக்கும் குறி தப்பியது.

கடைசியாக அர்ஜுனன் வந்தான். மரம் தெரிகிறதா? என்ற கேள்விக்குத் “தெரியவில்லை குருவே!” என அர்ஜுனன் பதில் தந்தான். கிளையும் தெரியவில்லை என்றான். ஆந்தையும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றான். பொறுமையிழந்த துரோணர் “என்னதான் தெரிகிறது?” என்றார்.

“ஆந்தையின் வலது கண் மட்டும் தெரிகிறது குருவே” என்றான் அர்ஜுனன். “அம்பை விடு” என்றதும் அம்பு வலது கண்ணைச் சரியாகக் குத்தியது.

இந்தக் கதை நமக்கு என்ன தெரிவிக்கிறது? அர்ஜுனனுக்கு மரமோ, கிளையோ, ஆந்தையோ தெரியாததுபோல, தேர்வு அறையில் உள்ள மற்ற எதுவும் உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

தேர்வு அறைக்குள்ளே நீங்களும் உங்களின் தன்னம்பிக்கையும் மட்டுமே இருக்கிறீர்கள் என்ற மனநிலையில் இருந்தீர்கள் என்றால் படித்த எதுவும் மறக்காது. உங்களின் தன்னம்பிக்கைதான் மனத்திரையில் தெளிவாக விடைகளைக் காட்டும். மனதில் பயம் இருந்தால் மனத்திரையில் விடைகள் வராது.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், இலக்கு நோக்கிய கவனமும் இருந்தால் பொதுத் தேர்வு என்ன, வாழ்க்கையின் எந்தத் தேர்வையும் சுலபமாகக் கடந்துவிடலாம். பத்தாம் வகுப்பு தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு திருப்பு முனைதான். ஆனால் அதுவே ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. ஒரு வேளை தோல்வியே ஏற்பட்டாலும்கூடத் துளியளவும் கவலை வேண்டாம்.

வேறு ஒரு துறையில் சாதிப்பதற்காகத்தான் இந்தத் தேர்வில் தோல்வி ஏற்பட்டுள்ளது எனக் கருதுங்கள். மற்றவர்களின் கருத்துகளை உதாசீனப்படுத்துங்கள். முன்னேறிச் செல்லுங்கள். தன்னம்பிக்கையை எந்தக் காரணம் கொண்டும் கைவிடாதீர்கள். பரந்த உலகில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன.

- கே.சொர்ணவல்லி, ஆசிரியர், சென்னை

SCROLL FOR NEXT