இணைப்பிதழ்கள்

புரட்சிக்கு உயிர் தந்த இளம் வீரன்

ரிஷி

பகத்சிங் நினைவுதினம்: மார்ச் 23

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்து கொண்டவர்களில் பகத் சிங் முதன்மையானவர். 23 ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்திய வரலாறு உள்ளவரை மக்கள் மனங்களில் வாழும் மகத்துவத்தைப் பெற்ற விடுதலை வீரன் பகத் சிங். இப்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப் மாநிலத்தின் லயல்பூர் மாவட்டத்தில் உள்ள பேங்கா என்னும் ஊரில் 1907-ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார் பகத்சிங்.

பருவம் பூக்கத் தொடங்கிய வயதில் பிரிட்ஷாருக்கு எதிரான புரட்சியில் ஈடுபடலானார் அவர். விரைவிலேயே தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். அமிர்தசரஸில் இருந்து வெளிவந்த கீர்த்தி என்னும் உருது நாளிதழிலும் அகாலி என்னும் பஞ்சாபி நாளிதழிலும் ஆசிரியராக இருந்துள்ளார்.

மார்க்சியச் சித்தாந்தம் தொடர்பான கருத்துகளை எழுதிவந்த பகத் அர்ஜுன், ப்ரதாப் ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார். இன்குலாப் ஜிந்தாபாத் என்னும் எழுச்சிமிகு முழக்கம் இவரிடமிருந்தே புறப்பட்டு வந்தது.

இந்திய விடுதலைக்குத் தீரத்துடன் போராடிய தலைவர் லாலா லஜபதி ராய் மரணத்துக்குக் காரணமான காவல் துறை அதிகாரியைக் கொல்வதற்கு 1928-ல் திட்டம் தீட்டினார் பகத்சிங். இதற்கு அவருடைய தோழர் ராஜகுரு உறுதுணையாக இருந்தார்.

பகத் படித்த தேசியக் கல்லூரியின் நிறுவனர் லாலா லஜபதி ராய் என்பதாலும் விடுதலை வேட்கையாலும் இந்த முடிவைப் பகத் எடுத்தார். அப்போது இந்தியாவுக்கு வந்த சைமன் குழுவுக்கு எதிரான அமைதிப் பேரணியின் போது காவல் துறை அதிகாரியைக் கொல்லலாம் என்று நினைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1929, ஏப்ரல் 8 அன்று இந்தியப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில், தோழர் பி.கே.தத்தாவுடன் வெடிகுண்டுகளை வீசி எறிந்தார் பகத். 1931 மார்ச் 23 அன்று லாகூரில் அவரும் அவருடைய தோழர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர். வாசிப்பின் மீது தீராத பற்றுக்கொண்ட பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்புவரை புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT