உலகின் தென்துருவமான அண்டார்டிகா பனிக் கண்டத்துக்குச் செல்லும் சாகசப் பயணங்கள் 1910-களில் பெரும் புகழ்பெற்றிருந்தன. 1911-ம் ஆண்டில் தென் துருவத்தில் மனிதக் காலடி பட்ட பிறகு, அண்டார்டிகாவை தரைவழியாகக் கடக்கும் எண்ணத்துடன் 1914-ல் ஒரு பிரிட்டிஷ் சாகசப் பயணம் திட்டமிடப்பட்டது.
தரைவழித் திட்டம்
அந்தக் காலத்தின் கடைசி சாகசப் பயணமாக இது கருதப்படுகிறது. இந்தப் பயணத்துக்குத் தலைமை வகித்தவர் சர் ஏர்னெஸ்ட் ஷாக்கிள்டன். பனிப்பாறைகளின் மீது தரை வழியாக அண்டார்டிகா கண்டத்தின் மறுமுனையை அடைய வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முதன்மைக் குறிக்கோள் என்று ஷாக்கிள்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் பயணம் அதைச் சாதிப்பதற்கு மாறாக, எண்ட்யூரன்ஸ் (நீடித்து நிலைக்கும் என்று அர்த்தம்) கப்பலின் மிகப் பெரிய காவியப் பயணமாக மாறியது.
ஷாக்கிள்டனின் அனுபவம்
1911 டிசம்பரில் நார்வே குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றிருந்த ரால்ட் அமுண்ட்சென் தென் துருவத்தை முதன்முதலாக அடைந்திருந்தார். அமுண்ட்சென் சென்று 33 நாட்களுக்குப் பின்னர் பிரிட்டிஷ் குழுவுடன் கேப்டன் ஸ்காட் தென் துருவத்தைச் சென்றடைந்தார். இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றதும் இதில் குறிப்பிடத்தக்கது.
தென் துருவத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே கேப்டன் ஸ்காட் 1901 04-ல் ஒரு பயணத்தை மேற்கொண்டார். அந்தக் குழுவில் ஷாக்கிள்டன் இடம்பெற்றிருந்தார், அத்துடன் பிரிட்டிஷ் அண்டார்டிகா சாகசப் பயணம் (1907 09) ஒன்றுக்கும் ஷாக்கிள்டன் தலைமை வகித்து சென்றிருந்தார். இந்த அனுபவங்களின் அடிப்படையில் அண்டார்டிகா கண்டத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை தரைவழியாகச் சென்றடையும் சாகசப் பயணத்துக்குத் தலைமை வகிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு கப்பல்கள்
அண்டார்டிகாவின் வெண்டல் கடற்பகுதி வழியாக தென் துருவத்தை அடைந்து, அங்கிருந்து தரைவழியாகவே கண்டத்தின் மறுமுனையான ராஸ் கடல் பகுதியைச் சென்றடைவதுதான் இந்தப் பயணத்தின் அடிப்படை நோக்கம்.
திட்டமிட்டபடி அண்டார்டிகாவுக்கு மேலே அட்லாண்டிக் கடலில் உள்ள சாண்ட்விச் தீவுகளில் ஒன்றான தெற்கு ஜார்ஜியாவில் இருந்து பயணம் தொடங்கியது. புறப்பட்ட நாள் 1914 டிசம்பர் 5-ம் தேதி. ஷாக்கிள்டன் தலைமையில் வெண்டல் கடல் பகுதியை நோக்கி எண்ட்யூரன்ஸ் கப்பலும், கேப்டன் ஏனியாஸ் மேக்கிண்டாஷ் தலைமையில் ராஸ் கடல் பகுதியை நோக்கி அரோரா கப்பலும் புறப்பட்டன.
எண்ட்யூரன்ஸுடன் மற்றொரு கப்பல் எதற்காகப் புறப்பட்டது?