மங்கள்யானுக்கு ஆயுள் அதிகரிப்பு
செவ்வாய்க் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாகச் சென்றது இந்தியா. ஆறுமாதமாக செவ்வாய்கிரகத்தை சுற்றி வந்த மங்கள்யான் விண்கலத்தை மேலும் ஆறுமாதம் சுற்றுமாறு அதன் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்.
1340 கிலோ எடையுள்ள விண்கலத்தில் 37 கிலோ எரிபொருள் உள்ளது. தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது, இந்தியாவே தயாரித்த ஐந்து வகையான ஆய்வுக்கருவிகள் அதில் செயல்பட்டு வருகின்றன. செவ்வாயில் உயிர் வாழ முடியுமா என்பது பற்றிய ஆய்வை அவை செய்கின்றன.
நட்சத்திரங்களில் சப்தம்
பிரபஞ்சத்தில் உள்ள பிளாஸ்மா எனும் வாயு போன்ற ஒரு பொருளில் ஒலி அலைகள் உருவாவதாக விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். ஆனால் அந்த ஒலி அலைகள் பாலூட்டிகளால் கேட்க முடியாதபடி கோடிக்கணக்கான ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்டவை. நம்மைப் போன்றவர்கள் கேட்கக்கூடிய ஒலி அளவை விட 60 லட்சம் மடங்கு அதிகமானவை.
ஒலி அலைகள் பிரபஞ்சத்தில் பரவாது. ஆனாலும் இத்தகைய நிகழ்வுகள் பிரபஞ்சத்தில் நிகழ்கின்றன என்பது நமது எதிர்பார்ப்புகள் யூகங்களுக்கு மீறியதாக உள்ளது. மும்பையில் இந்திய விஞ்ஞானிகளும் இத்தகைய ஆய்வை செய்துள்ளனர். இத்தகைய பிரபஞ்ச ஒலிகளை நீங்கள் நாசா இணையதளத்தில் கேட்க
வியாழன் ஒரு ரவுடியா?
நமது சூரியக் குடும்பம் பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்ட பல கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவற்றோடு ஒப்பிட முடியாத அளவுக்கு நமது சூரியக் குடும்பம் தனித்தன்மையோடு இருக்கிறது. உயிர்கள் வாழக்கூடிய ஒரு சூழல் பூமியில் உருவாகியிருப்பதுதான் அது. அத்தகைய நிலை வருவதற்கு வியாழன்கிரகம் காரணமாக இருக்கலாம் என ஒரு ஆய்வு வெளியாகி உள்ளது.
வியாழனும் சனிக் கிரகமும் சூரியக் குடும்பத்தில் மூத்தவையாக இருக்ககூடும். தற்போது வியாழன் கிரகம் சூரியனைச்சுற்றுகிற சுற்றுவட்டத்தில் பழங்காலத்தில் சுற்றவில்லை.
சூரியனுக்கு நெருக்கமாகப் போய் சுற்றிவிட்டுப் பிறகு நான்கு மடங்கு அதிகமான தொலைவுக்கு நகர்ந்து வந்துள்ளது. அதன் இந்த அடாவடியால் மற்ற கிரகங்களும் பாதிக்கப்பட்டன. இதேபோலதான் சனிக் கிரகமும் தனது முந்தைய சுற்றுப்பாதையை சூரியனைவிடத் தொலைவாகத் தள்ளிக்கொண்டுள்ளது.
இந்த சிக்கலான நிகழ்ச்சிப் போக்கின் விளைவாகத்தான் நமது பூமியைப் போன்ற ஆனால் அதைவிட பெரியதாக இருந்த கிரகங்கள் நிலை தடுமாறி ஈர்ப்புவிசை குழப்பங்களால் சூரியனில் விழுந்து அழிந்துவிட்டன. இன்றைய பூமி தற்போதைய நிலையில் உருவாகியிருப்பது இந்த அரிய நிகழ்வால்தான். என்கிறார் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் கிரிகோரி லாப்லின்.
வியாழனின் நிலாவில் கடல்
வியாழன் கிரகத்துக்கு 67 நிலாக்கள் உள்ளன. அவற்றில் கானிமீடு [Ganymede] என்கிற நிலாவும் ஒன்று. அது சூரிய மண்டலத்தில் உள்ள நிலாக்களில் மிகப் பெரியது. ஐஸ் பாறைகளால் ஆன, அதன் தரைப்பகுதிக்கு அடியில் ஒரு பெரும் கடல் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி கடந்த மார்ச் 12ந்தேதி அனுப்பி யுள்ள தகவல்கள் அதன் பனிக்கட்டியால் ஆன தரைப்பகுதிக்கு அடியில் ஒரு கடல் இருப்பதற்கு சான்றுகளை அளித்துள்ளன. அந்தக் கடல் நீரில் உயிரினம் இருக்கிறதா என தற்போது எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
(மேலும் தகவல்களை அறிய: >http://goo.gl/nLVIsN)