அம்பேத்கரின் லண்டன் வீடு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கர் 1920களில் லண்டனில் மூன்றடுக்கு வீட்டில் வசித்து வந்தார். 2050 சதுர அடி பரப்புக் கொண்ட அந்த வீட்டை மகாராஷ்டிர அரசு 35 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கவுள்ளது.
இதை அம்பேத்கர் நினைவு இல்லமாக மாற்ற மகாராஷ்டிர அரசு முடிவுசெய்துள்ளது. அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று இந்த இல்லம் பார்வையாளர்களுக்குத் திறந்துவிடப்படும்.
புதிய வெளியுறவுச் செயலர்
இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக ஜனவரி 28 அன்று சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 1955, ஜனவரி 9 அன்று பிறந்த இவர் 1977-ல் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஆனார்.
இந்தியா அமெரிக்காவுடன் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார் இவர், வெளியுறவுத் துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இந்தியாவின் முந்தைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கே.சுப்ரமணியத்தின் புதல்வன் இவர்.
ஜாம்பியாவின் புதிய அதிபர்
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் அதிபராகப் பதவி வகித்த மிக்கேயில் சதா கடந்த அக்டோபரில் காலமானார். இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஜனவரி 24-ல் நடைபெற்றது.
இதில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சதாவின் அமைச்சரவையில் பாதுகாப்பு மற்றும் நிதித் துறை அமைச்சராக இருந்த 58 வயதான எட்கர் லுங்கு (Edgar Lungu) அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அடுத்த பொதுத் தேர்தல் 2016, செப்டம்பரில் நடைபெறும்வரை அதிபராகச் செயல்படுவார்.
இங்கிலாந்தின் அரசி
உலகில் வாழும் மன்னர்களில் அதிக வயதானவர் என்ற பெருமையைத் தக்க வைத்திருந்தவர் சமீபத்தில் காலமான சௌதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல்லாஜிஸ். இவரது மறைவை அடுத்து இங்கிலாந்தின் அரசி இரண்டாம் எலிஸபெத்துக்கு இந்தப் பெருமை வந்துசேர்ந்துள்ளது. இவரது வயது 88.
தாய்லாந்தின் மன்னரும், ஜப்பானியப் பேரரசரும் இதைப் போல் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். இங்கிலாந்து வரலாற்றில் நீண்ட நாள் அரசாளும் இரண்டாவது அரசி இவர். முதல் அரசி விக்டோரியா மகாராணி.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருது
தொழிலதிபரும், கொடை வள்ளலுமான அமெரிக்க இந்தியர் ஃப்ராங் இஸ்லம் இந்த ஆண்டுக்கான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் குடிமைச் சமூகத்துக்குத் தங்கள் பங்களிப்பைத் தந்தவர்களை ஊக்கப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் இந்த விருது 1991-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
ஃப்ராங் இஸ்லம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது 15-ம் வயதில் அமெரிக்காவுச் சென்றார். குடிமைச் சமூகத்துக்கு அவர் செய்துவரும் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது இவருக்கு வழங்கப்படுகிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகித்த வி.எஸ்.சம்பத் ஜனவரி 15 அன்று ஓய்வுபெற்றார். இதையடுத்து இந்தியாவின் 19-ம் தலைமைத் தேர்தல் ஆணையராக ஹரிசங்கர் பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1975-ல் இந்திய ஆட்சித் துறைத் தேர்வில் வெற்றிபெற்றவர். வட கிழக்கு மாநிலங்களிலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையராகும் இரண்டாம் நபர் இவர். முதல் ஆணையர் ஜே.எம்.லிங்டோக்.