கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிரேட்லேக்ஸ் மேலாண்மை கல்லூரியின் நிறுவனர்,தாளாளர், பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை சுமந்துகொண்டு அந்த கனம் ஒரு துளியும் இல்லாமல் தற்போது கிரேட்லேக்ஸ் பல்கலைகழகத்தை ஆந்திராவில் ஆரம்பிக்கும் முயற்சியில் சுழன்று வரும் 77 வயது இளைஞர் பாலா பாலச்சந்திரன்.
சுதந்திரத்துக்காக போராடிய தியாகி சத்தியமூர்த்தியின் உறவினர். புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் எளிமையான வாழ்க்கைச் சூழலில் தன் இளவயதை கடந்தவர் பாலச்சந்திரன். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியை துவங்கியபோது அவருக்கு வயது 20.
இடைப்பட்ட நாட்களில் அவர் ஒரு சராசரி மனிதனைப்போல வேலைக்கு போவதும் சம்பாதித்து குடும்பத்துக்கு பொருளீட்டித் தருவதும் தான் தன் கடமை என்று வாழ்ந்தார்.
ஒரு வேலை, குடும்பம், வீடு,சொத்து அவ்வளவுதான் இந்தப் பிறவியின் சந்தோஷம் என்ற வட்டத்தை உடைத்துவிட்டு வெளியே வரும்போது அவருடைய வயது 66. அப்போதுதான் சைதாப்பேட்டையில் ஒரு வாடகை கட்டிடத்தில் கிரேட்லேக்ஸ் கல்லூரியை அவர் ஆரம்பித்தார்.
கடந்து வந்த பாதை
சிறு வயதில் கணக்கு சுட்டு போட்டாலும் வராது. இப்போதோ தலைசிறந்த பத்து புள்ளியியல் குருக்களில் இவரும் ஒருவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்தாலும் தமிழ் நேசம் மாறாத இந்தியர். அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆசிரியராகத் தனது பணியைத் துவங்கினார் அங்கிருந்து ராணுவத்துக்குச் சென்றார்.
ராணுவப் பயிற்சியின் கால முடிவில் கேப்டன் என்ற அங்கீகாரமுடன் கிடைத்த அரசாங்கப் பதவி போதுமென்று நின்று விடாமல் 1960களிலேயே அமெரிக்கா சென்றார். டேய்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியருக்கு அசிஸ்டென்ட்டாக பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே முனைவர் பட்டம் பெறும் முனைப்பில் ஈடுபட்டார். குறுகிய காலத்திலேயே பி. எச்டி முடித்து தங்கப்பதக்கத்துடன் வந்தார். கெலாக் மேலாண்மை பள்ளியின் முழுநேர விரிவுரையாளர் ஆனார். கணிதம் என்றால் பாலா எனும் அளவுக்கு பெயர்பெற்றார்.
பணி ஓய்வுக்கு பிறகும்
பணி ஓய்வு பெற்ற பிறகும் போதும் என்று ஓய்வெடுக்காமல் தாயகம் திரும்பி வந்து அமெரிக்க பல்கலைகழகங்கள் கொடுக்கும் கல்வியை இந்தியாவில் கொடுக்க வேண்டும் என்ற ஒரு சிறு புள்ளி அவரது மனதில் உதயமாகியது. அந்த துணிவு இரண்டு இதய அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவரை ஓட வைத்தது.இந்திய மேலாண்மை பள்ளியை(ISB) ஹைதராபாத்தில் துவங்கினார்.
கிரேட்லேக்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ் மெண்ட் ஒரு வருடத்தில் எம். பி. ஏ பட்ட படிப்பை கற்றுக்கொடுக்கும் பயிலகம்.இரண்டே முழு நேர பேராசிரியர்கள்,சைதாப்பேட்டையில் வாடகை கட்டிடம்,சொற்ப மாணவர்கள் என சாதாரணமாக ஒரு கல்லூரியை ஆரம்பித்தார். கல்லூரி கட்டுவதற்கு அரசாங்கம் சலுகையில் கொடுத்த 15 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தவிடாமல் அலைக்கழிக்கப்பட்டார்.
சென்னையில் தனக்கென இருந்த ஒரே வீட்டை விற்று பணத்தை புரட்டி அதிலிருந்து பயிலகத்தை நடத்தினார்.கடன் வாங்கி மணமை என்ற இடத்தில் இடம் வாங்கினார். 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமெரிக்கத் தரத்தில் கட்டிடத்தை கலைநுட்பத்துடன் வடிவமைத்தார்.
கடந்த 2014 - ல் பத்து வருட நிறைவு விழாவில் இவரின் வெற்றிக்கு தோள்கொடுத்த அத்தனை பேரையும் அங்கீகரித்திருக்கிறார்.
இந்தியாவின் தலை சிறந்த பத்து மேலாண்மை பயிலகத்தில் இவரின் கல்லூரியும் ஒன்று. எம். பி. ஏ. வில் விவசாயத்தை கற்பிக்க வேண்டும் என்ற பசுமை கணக்கை ஆரம்பித்திருக்கிறார். கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் படிப்பையும் சேர்க்க வேண்டுமென்ற திட்டமும் அவருக்கு உள்ளது.