இணைப்பிதழ்கள்

மன்னிப்பு கேட்க மறுத்த வீரர்

செய்திப்பிரிவு

பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் 1916-ம் ஆண்டு பிப்ரவரி 10 அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 33 வயதே பூர்த்தியாயிருந்த அவர் செய்த குற்றம் தாய் நாட்டை நேசித்ததும், அதன் விடுதலைக்காகப் பாடுபட்டதுமே அன்றி வேறல்ல.

அந்த இளைஞர் 1883-ம் ஆண்டு ஜனவரி 7 அன்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் பட்டி என்னும் ஊரில் பிறந்தார். அவரது பெயர் ஷோகன் லால் பதக். பிறந்தபோது மிகவும் ஒல்லியாக இருந்த அந்தக் குழந்தையைக் கையாள அதன் தாய் மிகவும் பயந்தாள்.

5 அடி ஒன்பது அங்குலம் வளர்ந்த பிறகும்கூட வெறும் 37 கிலோ எடையுடன் தான் இருந்தான் ஷோகன். உடல் பலவீனமாக இருந்தபோதும் அந்த இளைஞனின் உள்ளம் பலம் பொருந்தியது. அதனால்தான் அவனது கவனம் தேச விடுதலையின் பக்கம் சாய்ந்தது.

படிப்பதற்காக 1909-ல் தாய்லாந்தின் சியாம் பகுதிக்குச் சென்றான் ஷோகன் லால் பதக். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு வந்துசேர்ந்தான். அப்போது தேச விடுதலைக்காகப் பாடுபடும் பொருட்டு துடித்துக்கொண்டிருந்த தேசப் பற்றாளர்கள் இணைந்து செயல்பட்ட கதர் கட்சி பற்றி அறிந்துகொண்ட அவனை அது ஈர்த்தது.

படிப்பைத் துறந்தான். சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு வந்தான். மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்களையும் ஆட்களையும் நிதியையும் திரட்ட அனுப்பப்பட்டான்.

அவன் சென்ற இடங்களில் எல்லாம் ராணுவ வீரர்களிடையே தேச விடுதலை தொடர்பான உணர்ச்சிமிக்க பரப்புரையை மேற்கொண்டான். சிங்கப்பூர் ராணுவத் தலைமையகத்தில் இருந்த ராணுவ வீரர்கள் கதர் கட்சியின் கொள்கைப் பிரச்சாரத்தால் உந்தப்பட்டு கலகத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைத் தடுக்க 5,000க்கும் மேற்பட்ட ரஷ்ய, சீன, பிரெஞ்சு ராணுவ வீரர்கள் முற்பட்டனர். ஆனால் அத்தனை தடுப்பையும் மீறி கலகக்காரர்கள் அருகிலிருந்து காட்டுக்குள் புகுந்து தப்பிவிட்டனர். மலேசியப் பகுதியான ஜோகூர் சுல்தானிடம் உதவி கேட்டுத் தஞ்சமடைந்தனர். அதை ஏற்ற சுல்தான் அவர்களை சியாமுக்கு ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

ஆனால் ரயில் சிங்கப்பூருக்குச் சென்றபோதுதான் சுல்தான் தங்களை ஏமாற்றிவிட்டதை ராணுவ வீரர்கள் உணர்ந்தனர். அங்கே துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் இந்தக் கலகக்காரர்களை எதிர்கொண்டனர். இரு தரப்பினருக்கும் சண்டை மூண்டது. இது மூன்று நாட்கள் நீண்டது.

பர்மிய வீரர்களிடம் மாட்டிக்கொண்ட அவர் தன்னை தப்பவிடும்படி அல்லது கொன்றுவிடும்படி வாதாடினார். ஆனால் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரைச் சிறையில் வந்து பார்த்த பர்மாவின் ஆளுநர் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்தால் அவரை விடுவிக்க முயல்வதாகத் தெரிவித்தார்.

ஆனால் ஷோகன் மறுத்துவிட்டார். ஆங்கிலேயர் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டுமே தவிர தான் அல்ல என்று துணிச்சலுடன் கூறினார். விளைவு பர்மாவிலிருந்த இந்திய ராணுவ வீரர்களைக் கலகத்தில் ஈடுபடும்படி தூண்டிய குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார். இவருடன் நரெயின் சிங், ஹர்ணம் சிங் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர்.

SCROLL FOR NEXT