மாணவன்: கடவுள் என்பவர் யார்?
தத்துவ ஆசிரியர்: முதலில் நீ யார்?
மாணவன்: நான் பாலு.
தத்துவ ஆசிரியர்: அது உனது பெயர். உண்மையில் நீ யார்?
மாணவன்: நான் மாணவன்.
தத்துவ ஆசிரியர்: அது நீ கல்லூரியில் உள்ளவரை. அதன் பின்?
மாணவன்: என் பெற்றோரின் மகன்.
தத்துவ ஆசிரியர்: அது வீட்டில். அதைத் தவிர்த்து நீ யார்?
மாணவன்: நான் ஒரு கிரிக்கெட் வீரன்.
தத்துவ ஆசிரியர்: அது விளையாடும்போது. அதைத் தவிர்த்து நீ யார்?
மாணவன்: ம்… இப்போது சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன். நான் ஒரு மனிதன்.
தத்துவ ஆசிரியர்: அது உனது மனித உடம்பு. நீ யார்?
மாணவன்: எனக்குக் குழப்பமாக உள்ளது. நான் யார் என்று தெரியவில்லை.
தத்துவ ஆசிரியர்: முதலில் உன்னை நீ அறிந்துகொள். பிறகு கடவுள் யார் என்பதைப் பற்றி யோசிக்கலாம்.
இது ஒரு பிரபலமான தத்துவ உரையாடல். முதல் பார்வைக்கு ஆன்மிகத் தேடலைக் குறித்த விவாதமாகத் தோன்றலாம். என்னை அறியும்போது உலகம் கடந்தும் என்னுள் இருக்கும் கடவுளை உணர்கிறேன் எனும் பொருள் ஒருபுறம் இருக்கிறது. மற்றொரு புறம், முதலில் என்னை நான் அறிய வேண்டும், அதன்பின்தான் மற்றவை எல்லாம் எனும் அர்த்தமும் உள்ளது. இந்தத் தத்துவக் கேள்விகளுக்குள் எதார்த்த வாழ்வுக்கு அவசியமானக் கருத்துகள் பொதிந்துள்ளன. அவற்றை ஆராய்வதுதான் நம் நோக்கம்.
இது யாருக்காக?
இந்தக் கட்டுரையைப் படிக்கும் நீங்கள் ஒரு மாணவர் எனும் பட்சத்தில் சில விஷயங் களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் இந்தப் படிப்புத் துறையில் ஏன் சேர்ந்தீர்கள்? உங்கள் திறனை, விருப்பத்தை, கனவை நீங்களே உள்ளார்ந்து ஆராய்ந்து “இதுதான் நான்” என முடிவெடுத்தீர்களா? அல்லது உங்களுடன் இருக்கும் நண்பர்கள், சக மாணவர்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்ததால் நீங்களும் அதே படிப்பைத் தேர்ந்தெடுத்தீர்களா? அல்லது பெற்றோர், அக்கம் பக்கத்தார் “இதைப் படித்தால் எதிர்காலத்தில் நல்ல வேலைக்கு உத்தரவாதம் உண்டு” எனச் சொல்லக் கேட்டுச் சேர்ந்தீர்களா? அல்லது எதையுமே யோசிக்காமல் போகிற போக்கில் சேர்ந்தீர்களா?
இந்தக் கேள்விகளுக்கான பதிலை உடனடியாகக் கண்டறிந்து நீங்கள் யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. முதலில் இந்தக் கேள்விகளை உங்களுக்குள் அசை போடுங்கள். உங்கள் கல்வியோடு மட்டும் தொடர்புபடுத்திப் பார்த்துவிட்டு நின்றுவிடாதீர்கள். ஒட்டுமொத்தமாக நீங்கள் யார் என்பதைச் சிந்திக்கத் தொடங்குங்கள். “வாழ்வில் மிக முக்கியமான விஷயம் எது? என்றால், மிக முக்கியமான விஷயம் எது என்பதைக் கண்டறிவதே!” என்றார் ஒரு ஜென் தத்துவ அறிஞர்.
உங்கள் சிற்பி யார்?
பெற்றோர், உறவினர், நண்பர்கள், அக்கம் பக்கத்தார், படிக்கும் கல்விக்கூடம், வேலை பார்க்கும் அலுவலகம் இப்படி உடன் இருப்பவர்களோடு இணங்கித்தான் பெரும்பான்மையான நேரங்களில் நாம் நம் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையைப் பின்பற்றுவது தவறா என்றால், அவர்கள் அக்கறையோடுதான் உங்களைச் செதுக்க முயல்கிறார்கள். ஆனால் மனிதன் எனும் சிலையை வேறொரு சிற்பி செதுக்கும்போது அச்சிலை முழுமை பெறாது.
மனிதன் தன்னைத் தானே வடிக்கும் சிற்பி. நீங்களே சிற்பி! நீங்களே சிலை! உங்களுடன் இருப்பவர்களும் இதே போன்ற கற்பிதங்களின் அடிப்படையில்தான் உங்களுக்கான பாதையைக் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பாதையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு முதலில் உண்மையாக நீங்கள் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதைச் செய்வதுதான் தன்னிலை அறியும் திறன்.
அமைதிப் புரட்சி
இயல்பாகவே இத்திறன் கொண்டவர்கள் தங்களுடைய பலம், பலவீனம் இரண்டையும் சரியாகக் கணித்து வைத்திருப் பார்கள் என்று சென்ற வாரம் பார்த்தோம். பிறர் சொல்வதைக் கண்மூடித்தனமாகக் கேளாமல் தங்கள் மனம் சொல்வதைக் கேட்பார்கள், அதன்படி செயல்படுவார்கள். தங்களுக்கான இலக்கைக் கண்டறிந்து அதை அடையத் தன்னம்பிக்கையோடும், நேர்மறையாகவும் பயணிப்பார்கள்.
அதே சமயம் விழுமியங்களுக்கு மதிப்பளிப்பார்கள். இத்திறனுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாகத் தத்துவ ஞானி சாக்ரடீஸையும், அன்பின் திருவுருவம் அன்னை தெரசாவையும் குறிப்பிடலாம். இருவரும் வெவ்வேறு விதமான ஆளுமைகளாக இருந்தபோதிலும், அமைதியாக அதே சமயமாக ஆழமாகத் தாங்கள் யார் என்பதை உணர்ந்து, இந்த உலகுக்குச் செய்ய நினைத்த பங்களிப்பை அளித்துவிட்டுக் கண்டம், காலம், கடந்தும் வரலாற்றில் நிலையான இடம் பிடித்திருப்பவர்கள்.
குழப்பம் வேண்டாம்
ஆனால் தன்னிலை அறியும் திறன் உடையவர்கள் அதிகமாகப் பேசமாட்டார்கள், தனிமை விரும்பியாக இருப்பார்கள், குழு மனப்பான்மை குறைவாக இருக்கும். அப்படியானால் தன்னைத்தானே ஒரு கூட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் இண்ட்ரோவர்ட் (introvert) மனோபாவம் உடையவர்களோ எனும் சந்தேகம் எழலாம். சர்வாதிகார மனப்பான்மை கொண்டவராகச் செயல்படுவார்களோ எனவும் தோன்றலாம்.
Intrapersonal Intelligence (தன்னிலை அறியும் திறன்) வேறு introvert வேறு என்று உளவியல் நிபுணர் கார்டனர் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். தன்னை அறியும் திறன் கொண்டவர்கள் தன்னைப் பற்றிய ஆழமான புரிதல் உடையவர்கள் என்பதால் பிறரைப் பற்றிய அக்கறை அற்றவர்கள் எனும் பார்வை மிகத் தவறானது. அமைதியாக இருப்பதால் அவர்கள் பிறரோடு பழகத் தெரியாதவர்கள் அல்ல. தன் பாதையைக் கண்டறிய முடியாதவர் எவர் ஒருவரும் பிறருக்கும் வழிகாட்ட முடியாது என விளக்குகிறார் கார்டனர். மாற்றத்துக்காக காத்திருக்காமல் மாற்றமாகி வாழ்பவர்களே தன்னிலை அறியும் திறனாளிகள்.