எண்டவர் என்ற கப்பல் ஜேம்ஸ் குக்கைத் தலைவராகக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து 1768, ஆகஸ்ட் மாதத்தில் புறப்பட்டது. 'இலக்கை எட்ட இறுதிவரை போராடு' என்பதே எண்டவர் என்பதற்கான அர்த்தம். 80 பேர் கப்பல் குழுவினர், 11 விஞ்ஞானிகள் கொண்ட குழுவுக்குத் தலைவராக ஜேம்ஸ் குக் இருந்தார். அந்த விஞ்ஞானிகளில் குறிப்பிடத் தக்கவர் ஜோசப் பேங்க்ஸ்.
அந்தக் கப்பலில் 15 மாதங்களுக்குத் தேவையான உணவு சேமிக்கப்பட்டிருந்தது. கப்பல் பெரிதாக இருந்ததால், மிதமான வேகத்திலேயே சென்றது. 1769 ஏப்ரல் மாதம் தஹிட்டி தீவுகளை அவர்கள் சென்றடைந்தனர்.
நியூஸிலாந்து
அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டி, அவர்களது முதன்மைக் குறிக்கோளான வானியல் ஆய்வுக்குத் தயாராகினர். அந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி கடந்து சென்ற வெள்ளிக் கோளைக் கண்காணித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்தப் பயணத்தின் இரண்டாவது நோக்கத்தைப் பற்றி குக் அறிவித்தார். அவர்களுடைய குழு முழு மனதில்லாமல், அந்த அழகான தீவைத் துறந்து தெற்கு நோக்கி நகர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி குக் புதிய தெற்கு நிலத்தைக் கண்டறியவில்லை.
அதற்குப் பதிலாக, நியூஸிலாந்தை நோக்கி நகர்ந்தார். அங்கே மாவோரி பூர்வகுடியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு வடக்கு, தெற்குத் தீவுகள் வழியாகப் பயணித்து, அந்தக் கடற்கரையைக் குக் வரைபடமாகத் தயாரித்தார்.
புதிய பரிமாணம்
1770, ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவின் மேற்கு நோக்கி ஜேம்ஸ் குக் பயணித்தார். மின்சாரத்திருக்கை குடாவில் அவருடைய கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. அந்தக் குடா பகுதியில் ஜோசப் பேங்க்ஸ் நிறைய புதிய தாவர வகைகளைக் கண்டறிந்ததால், அந்தக் குடாவுக்குத் ‘தாவரவியல் குடா' என்றே பெயர் வைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கங்காருகளைப் பார்த்து அவர்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். அது ஒரு வகை மான் என்றே அவர்கள் நினைத்தனர். இப்படி ஜேம்ஸ் குக்கின் பயணத்தில் அறிவியலாளர்களும் இடம்பெற்றது, பயணத்துக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.
பவழத்தீவுத் தடை
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் முன்னேற ஆரம்பித்தார் குக். 1770, ஜூன் மாதம் கிரேட் பாரியர் ரீஃப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவழத்திட்டுத் தீவின் மீது எண்டவர் கப்பல் மோதியது. அதைப் பழுது பார்க்கப் பல வாரங்கள் ஆயின. கடைசியாகப் பழுது பார்க்கப்பட்ட பின், வடக்கு நோக்கி ஜேம்ஸ் குக் பயணத்தைத் தொடர்ந்தார்.
கடைசியாக 1770-ல் கிழக்கு ஆஸ்திரேலியாவை ஜேம்ஸ் குக் பிரிட்டன் வசமாக்கினார். இப்பகுதியே நியூ சவுத் வேல்ஸ். அதன் பிறகு எண்டவர் கப்பல் நன்னம்பிக்கை முனை வழியாக நாடு திரும்பியது. 1771 ஜூலை மாதம் ஜேம்ஸ் குக்கின் குழு இங்கிலாந்தை அடைந்தது.
இப்பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். கல்வி, தொழில் வாழ்க்கை, ஆளுமை வளர்ச்சி, இளைஞர் உலகம், இளம் சாதனையாளர் உள்ளிட்ட விஷயங்களைக் குறித்து எங்களுக்கு எழுதலாம்.
மின்னஞ்சல் முகவரி: vetrikodi@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
வெற்றிக்கொடி, தி இந்து,
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002.