தாய்மொழியில் உள்ள சொற்களின் உண்மையான அர்த்தத்தை அதே மொழியிலேயே புரிந்து கொள்ள வசதியாக உருவானவைதான் நிகண்டுகள். இன்றைய அகராதிகளின் முன்னோடி அவைதான்.
ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்று மூன்று பிரிவுகளாய் நிகண்டுகள் இருக்கும். அவை பெரும்பாலும் நூற்பா எனும் பாட்டுவகையில் அமைந்தவை.
16 -ம் நூற்றாண்டில் இரேவண சித்தர் என்பவர் முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்து அகராதி நிகண்டை உருவாக்கினார்.
ஐரோப்பியர் சிலர் தமிழ்-போர்த்துக்கீசியம், தமிழ்-இலத்தீன் இரு மொழிகளில் அமைந்த அகராதிகளை உருவாக்கினர். அன்டேம் டி புரவென்சா என்பவர் எழுதி, ஜூலை 30, 1679- ல் அம்பலக்காடு இயேசு சபை குருக்களால் பதிக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி வந்தது. அதற்கு முன்னரே யென்றிக்கே யென்றீக்ஸ் என்பவர் (1520-1600) தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியை இயற்றியிருந்தார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அந்நூல் கிடைக்கவில்லை.
மேற்கத்திய முறையிலான முதல் தமிழ் அகராதியைச் சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் தொகுத்தார். 1732 -ம் ஆண்டு நவம்பர் 21-ல் இதை அவர் எழுதி முடித்தார். இதன் இரண்டாம் பகுதியை 1819-ல் எல்லீஸ் என்பவர் திருச்சிற்றம்பல ஐயர் என்பவரின் உதவியுடன் அச்சுக்குக் கொண்டு வந்தார்.
19-ம் நூற்றாண்டுதான் அகராதிகளின் பொற்காலம். ஆங்கிலம் மட்டுமல்லாது பிரெஞ்சு, பர்மா, இலத்தீன் உள்ளிட்ட வேறு மொழிகளுக்கும் தமிழில் அர்த்தம் தரும் அகராதிகள் வந்தன. சொற்களுக்கு மட்டுமல்லாமல் பழமொழிகளுக்கான அர்த்தங்களும் வெளி வந்தன என்கிறார் முனைவர் ஆ.மணி.
ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் அர்த்தமுள்ள தமிழ் வார்த்தைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அகராதியில் வரும் தமிழ்ச்சொற்கள் வடமொழிக் கலப்போடு உள்ளன.
தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம் வெளியிட்டுள்ள ‘ஆங்கிலம்- ஆங்கிலம்- அழகு தமிழ் அகராதி’ நேரடியாகத் தமிழில் மட்டும் விளக்கம் தருகிறது.
நவநாகரிகப் பண்பாட்டால் ஆங்கில ஆதிக்கம் வலுப்பட்டுள்ள நிலையில் தமிழை முன்னெடுத்துச் செல்வது இன்றைய தேவை. இதற்கு இந்த அர்த்தமுள்ள அகராதி பேருதவி புரியும். மாணவர்களை இலக்காகக் கொண்டு, நல்ல தமிழை முன்னிறுத்தி, இந்த அகராதியை எழுதியதற்காக யோகி என்ற பொறியாளர் யோ.கில்பட்டை நாம் பாராட்டலாம்.
ஆங்கிலம் – ஆங்கிலம் – அழகுதமிழ் அகராதி
தொகுப்பு ஆசிரியர்: யோகி
பக்கம்: 1000 விலை: ரூ.280 (காகித அட்டை), ரூ.330 (கெட்டி அட்டை)
வெளியீடு: தெய்வப்புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக்கூடம்
1/519, வடக்கு தெரு, நாட்கோ காலனி,
கொட்டிவாக்கம், சென்னை-600041.
தொடர்புக்கு: 9444117088.