இணைப்பிதழ்கள்

அலைபாயும் அறிவுச் சுடர் - ஆய்வு

ரிஷி

கிராமப்புறக் குழந்தைகளின் தொடக்கக் கல்வி தேசத்தின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. கிராமப்புறக் கல்வி மேம்பாடு அடையாமல் ஒரு தேசத்தின் வளர்ச்சி சாத்தியப்படாது. ஆகவே அகில இந்திய அளவில் தொடக்கக் கல்வி குறித்த விவரங்களை ஆண்டுதோறும் அறிந்துகொள்வது அந்தக் கல்வியை மேம்படுத்த உதவும்.

எனவே இது குறித்த அறிக்கையைப் பத்து ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது ப்ரதம் கல்வி அறக்கட்டளை என்னும் அரசு சாரா அமைப்பு. சமீபத்தில் 2014-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்த தனது விவாதத்தை மத்திய அரசு தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 577 மாவட்டங்களின் 16,497 கிராமங்களிலுள்ள 5,70,000 குழந்தைகளிடம் ஆய்வை நடத்தியுள்ளனர், 15,206 கிராமப்புறப் பள்ளிகளுக்குச் சென்று இந்த அறிக்கைக்கான ஆதாரத் தகவல்களைப் பெற்றுள்ளார்கள். எளிய வாசகங்களை வாசிக்கிறார்களா, எழுத்துகள் முறையே தெரிகின்றனவா, அடிப்படையான கணிதங்களை குழந்தைகள் அறிந்துவைத்துள்ளனரா என்பவற்றையே அவர்கள் சோதித்தறிகிறார்கள்.

அதன் அடிப்படையிலேயே தங்கள் அறிக்கையைத் தயாரிக்கிறார்கள். 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேரும் சதவீதம் சர்வதேச அளவோடு மிக நெருங்கிய நிலையிலேயே உள்ளது என்பது ஆறுதலே. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த சதவீதம் 96 அல்லது அதற்கும் அதிகமாகவே உள்ளது.

குறைவான வாசிப்புத் திறன்

கிராமப்புறக் குழந்தைகளின் வாசிக்கும் திறன் கவலை தருவதாகவே உள்ளது. மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் கால்வாசிப் பேரே இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைத் தட்டுத் தடங்கலின்றி வாசிக்கின்றனர். ஐந்தாம் வகுப்பு படிப்பவர்களில் சுமார் 50 சதவீதத்தினரும், ஏழாம் வகுப்பு படிப்பவர்களில் 75 சதவீதத்தினரும் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்கின்றனர் என்பதே யதார்த்த நிலை.

ஏழாம் வகுப்பு படிக்கும் போது கூட 25 சதவீதத்தினரால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க இயலவில்லை என்னும் நிலையை உணரும்போது மனம் திடுக்கிடுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஐந்தாம் வகுப்பு பயிலும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பிரகாசமாகியுள்ளது.

கவலை தரும் கணிதம்

அடிப்படையான கணிதம் கிராமப் புறக் குழந்தைகளுக்குச் சோதனையாகவே இன்னும் உள்ளது என்பதையும் அந்த அறிக்கை உணர்த்துகிறது. இரண்டு இலக்க கழித்தலைச் செய்யத் தெரியாத, மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளின் சதவீதம் கடந்த ஆண்டில் முந்தைய ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளது. ஆனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இவ்விஷயத்தில் சற்றே மேம்பட்டுள்ளனர்.

ஒன்பது வரையான எண்ணை அடையாளம் காட்டத் தெரியாத இரண்டாம் வகுப்புக் குழந்தைகளின் சதவீதம் உயர்ந்துள்ளது என்பது வருத்தம் தருகிறது. ஏழாம் வகுப்புக் குழந்தைகள், மூன்று இலக்கத்தை ஓரிலக்கத்தால் வகுப்பதிலும் தொடர்ந்து பின்னடைந்துவருகிறார்கள். கணிதம் விஷயத்தில் தமிழ்நாட்டில் முன்னேற்றம் தெரிகிறது ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமை தடுமாற்றமே.

ஆங்கிலத்தில் வளர்ச்சி இல்லை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தனியார் பள்ளியில் சேருவோரின் சதவீதம் சற்றே அதிகரித்துள்ளது. 2013-ம் ஆண்டில் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 29 சதவீதமானோரே தனியார் பள்ளியில் சேர்ந்தனர். ஆனால் இது 2014-ம் ஆண்டில் 30.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் ஆங்கில வாசிப்புத் திறனில் கீழ் வகுப்புகளில் பெரிய முன்னேற்றமில்லை. கடந்த கால நிலைமையே தொடர்கிறது. ஆனால் உயர் வகுப்புகளில் நிலைமை மோசமடைந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்தும் கல்வியின் நிலைமை பலவீனமடைந்துள்ளதையும், பொதுக்கல்வியின் அவசியத்தையும் இங்கே பொருத்திப் பார்ப்பது அவசியமாகிறது.

SCROLL FOR NEXT