இணைப்பிதழ்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு அறிவியல் சாகசம்

ஆதி

பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி 1768-ல் ஜேம்ஸ் குக் தலைமையில் தெற்கு பசிஃபிக் தீவுகளில் உள்ள தஹிட்டி தீவுகளுக்கு அறிவியல் சாகசப் பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.

சூரியனை வெள்ளிக் கோள் 1769 ஜூன் மாதம் கடந்து செல்லும் என்று வானியலாளர்கள் கணித்து இருந்தனர். உலகின் பல்வேறு புள்ளிகளில் இருந்து இதைப் பதிவு செய்வதன் மூலம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவை அளவிட முடியும் என்று நம்பப்பட்டது. அந்தப் பயணத்துக்குப் பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்ததற்கு அதுவே காரணம்.

பழுத்த அனுபவம்

அந்தப் பயணத்துக்கு ஜேம்ஸ் குக் தலைமை வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், கடல் பயணங்கள் மீது அவருக்கு இருந்த பேரார்வம். அவர் இரண்டு முறை கப்பலில் உலகை வலம் வந்திருந்தார்.

1755-ல் பிரிட்டனின் கடற்படையான ராயல் நேவியில் சேர்வதற்கு முன்னதாக வர்த்தகக் கப்பல்களில் 9 ஆண்டுகளுக்கு ஜேம்ஸ் குக் வேலை பார்த்திருந்தார். வழி கண்டறிவதில் தேர்ந்தவராகவும் இருந்ததால், ஜேம்ஸ் குக்குக்கு வேகமாகப் பதவி உயர்வு கிடைத்தது.

புதிய நிலம்

இவ்வளவு அனுபவம் இருந்தும் ஜேம்ஸ் குக் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்று சில விஷயங்கள் சீல் இடப்பட்ட ஒரு பையில் வைத்துப் பயணத்துக்கு முன் கொடுக்கப்பட்டன. தஹிட்டி போனவுடன் அவற்றைப் படிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த விதிமுறைகளில் ஒன்று இதுவரை அறியப்படாத தெற்கு நிலத்தை ஜேம்ஸ் குக் கண்டறிந்து, அதை பிரிட்டனின் உடைமையாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

வித்தியாசக் கப்பல்

ஜேம்ஸ் குக் தன் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்த கப்பல் வித்தியாசமானது. அது, எண்டவர் என்ற பழைய நிலக்கரி கப்பல். இளம் வயதில் அவர் வேலை பார்த்த கப்பலைப் போன்றது அது. மிகவும் உறுதியான கப்பல், ஆனால் மெதுவாகவே நகரும். ஆனால், அதிகமானவர்களை ஏற்றிச் செல்லலாம்.

குறிப்பாக அந்தப் பயணத்துக்குத் தேவைப்படும் அறிவியல் கருவிகளை வைத்துக்கொள்வதற்கான இடமும் அதில் இருந்தது. இறைச்சி, காய்கறி, பழச்சாறு போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கான இடமும் இருந்தது.

இவ்வளவு முன் ஏற்பாடுகளுடன் புறப்பட்ட ஜேம்ஸ் குக் அந்த மாபெரும் தெற்குக் கண்டத்தைக் கண்டறிந்தாரா?

SCROLL FOR NEXT