பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு (ஜனவரி 13) இதே நாளில் பிறந்தது அந்தக் குழந்தை. அந்தக் குழந்தைதான் பின்னர் உலக அளவில் விண்வெளித் துறையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தது. அந்தக் குழந்தைதான் விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா.
பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஹைதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில்தான் ராகேஷ் முடித்தார். அதன் பின்னர் 1966-ல் அவர் தேசிய ராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவின் மாணவராகச் சேர்ந்தார். விமான ஓட்டும் பயிற்சியைக் கண்ணும் கருத்துமாக முடித்த அவர், 1970-ல் இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார்.
வானில் பறப்பதில் முழு ஆசை கொண்ட அவருக்கு இந்தியா பாகிஸ்தான் போர் வானில் பறப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது. அப்போது அவர் ஒரு விமான ஓட்டியாக பலமுறை ஆகாயத்தில் பறந்துள்ளார். 1971- ம் ஆண்டு முதல் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் ரஷ்யாவுக்காகத் தயாரிக்கப்பட்ட மிக் ரக விமானங்களில் பைலட்டாக இருந்துள்ளார். சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984-ம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பைலட்டாக இருந்தபோது அவர் தொழிலில் காட்டிய பக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும் விண்வெளிப் பயணத்தில் ஈடுபடக்கூடிய ஒருவராக அவரை மாற்றியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்துக்கென விண்ணப்பித்ததில் ராகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே அவரது தொழில்நேர்த்திக்குச் சான்று.
அவரது பணியின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமும் இணைந்த பல விண்வெளிப் பயணத் திட்டங்களில் அவர் பங்குகொள்ள நேர்ந்தது. ஒரு விண்வெளி வீரராகும் அவரது பயணம் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் விளைவாக ராகேஷ், 1984-ம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். அன்றுதான் அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் அவர் எட்டு நாள்கள் தங்கியிருந்தார். அங்கே பல அறிவியல் ஆராய்ச்சிகளை இந்தக் குழு மேற்கொண்டது. இமாலயத்துக்கருகே நீர்மின் நிலையம் அமைக்கத் தேவையான விண்வெளிப் படங்களை எடுப்பது உள்ளிட்ட பொறுப்புகள் அவரிடம் விடப்பட்டிருந்தன.
தனது பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய ராகேஷ் ஷர்மாவுக்குக் அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன் என்னும் விருதையும் அவர் பெற்றுள்ளார்.