இணைப்பிதழ்கள்

நாடு கடந்தும் அறிவைத் தேடியவர்

ஆதி

இந்தியாவுக்கு வந்த முக்கியமான யாத்ரீகர்களுள் முக்கியமான மற்றொருவர் அல் பெருனி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் இந்தியா வந்தார். அவரது உண்மையான பெயர் அபு ரெய்ஹான். ஆனால், அல் பெருனி என்றே அறியப்பட்டார்.

மத்திய ஆசியாவில், அதாவது இன்றைய இரானில் உள்ள கீவா என்ற ஊரில் கி.பி. 973-ல் அல் பெருனி பிறந்தார். அவர் ஒரு தலைசிறந்த அறிவியல், வரலாற்று அறிஞர். 40 வயதுக்குள் அறிவியல், கணிதம், வானியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த அராபிய நூல்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்.

அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பம் காரணமாகவே, அவர் இந்தியாவுக்கு வந்தார். இல்லையென்றால், தன் ஊரிலேயே தங்கி ஆராய்ச்சிகளில் மூழ்கியிருப்பார்.

நாடு கடந்து...

பேரரசர் முகமது கஜினி, கீவா நகரம் மீது படையெடுத்தார். 11-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்டுதோறும் இந்தியா மீது படையெடுத்த, அதே கஜினிதான் இவர். அப்போது கீவாவை வென்று, அந்நாட்டில் இருந்த தலைவர்கள், அல் பெருனி உள்ளிட்ட அறிஞர்களை அவர் சிறைபிடித்தார். அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். அப்படி இந்தியாவுக்கு வந்தார் அல் பெருனி.

நாடு கடத்தப்பட்டதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், அல் பெருனி இந்தியா வந்த பிறகு சமஸ்கிருத இலக்கியத்தைப் படித்தார். வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்த அவர் 150 படைப்புகள் வரை சொந்தமாகவும், மொழிபெயர்த்தும் எழுதி இருக்கிறார்.

அவற்றில் 70 வானியல் பற்றியவை. 20 கணிதம் பற்றியவை. 18 இலக்கியப் படைப்புகள் என அவரது சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார். அவற்றில் 27 தான் கிடைத்துள்ளதாக யுனெஸ்கோ கூரியர் இதழ் கூறுகிறது. இவற்றுள் இந்தியாவைப் பற்றி அவர் எழுதியது சிறந்த நூல்களில் ஒன்று.

இந்தியாவில் உள்ள மதங்கள், இலக்கியம், அறிவியல் பாரம்பரியங்களை விவரிப்பதே அந்த நூலின் நோக்கம். இந்த நூலில் மக்களின் பண்புகள், பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகளைப் பற்றி பல தகவல்களை அளித்துள்ளார்.

வட இந்தியாவின் தோற்றம்

அதேநேரம் அல் பெருனி தென்னிந்தியப் பகுதிக்கு வரவில்லை. வடஇந்தியாவையே முழுமையான இந்தியா என்று நம்பினார். அப்பகுதி முற்காலத்தில் கடலாக இருந்தது என்றும், மாபெரும் இமயமலையில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய நதிகள் அந்நிலத்தில் பல நூற்றாண்டுகளாக வண்டல் மண்ணைக் கொண்டு வந்து குவித்ததால், அப்பகுதி (வட இந்தியா) தோன்றியது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதே கருத்தைத் தற்கால விஞ்ஞானிகளும் உறுதி செய்கின்றனர். ஆனால், அவருக்கு முன் இந்தியாவுக்கு யாத்திரை வந்தவர்கள் யாரும் இதைக் கூறவில்லை.

இந்தியாவின் முக்கிய மலைகள், நதிகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயிரினங்களைப் பற்றி கூறுமிடத்தில் வடஇந்திய ஆறுகளில் முதலைகள் நிறைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். பல பகுதிகளில் காண்டாமிருகங்களும் காணப்பட்டனவாம்.

SCROLL FOR NEXT