இணைப்பிதழ்கள்

எல்லாம் சாத்தியம்: ஓடிக்கொண்டிருக்கும் நூலகம்

ஆதி வள்ளியப்பன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்த ஒருவர் எந்த மாதிரியான வேலையைப் பார்க்க முடியும்? ஏதாவது ஒரு பன்னாட்டு கம்பெனியிலோ, இல்லையென்றால் உள்நாட்டு கம்பெனியிலோ நிர்வாகப் பணியில் இருப்பார். ஆனால், கும்பகோணத்தைச் சேர்ந்த முருகராஜ் கிராமங்களில் நூலகம் நடத்திக் கொண்டிருக்கிறார், அதுவும் நடமாடும் நூலகம்.

தமிழக இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தவர் முருகராஜ். 2005-ல் எம்.பி.ஏ. முடித்த கையோடு, சென்னையில் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வேலையில் அவரால் சௌகரியமாக உணர முடியவில்லை. திரும்பத் திரும்ப ஒரே வேலையைப் பார்ப்பது சலிப்பூட்டுவதாக இருந்தது. ஒரு வருஷத்துக்குப் பிறகு வேலையைத் துறந்து சொந்த ஊரான கும்பகோணத்துக்கே திரும்பினார்.

"நீயே தனியாக ஏதாவது தொழில் செய் என்று என் அப்பா சொன்னதால், கும்பகோணத்தில் உள்ள நிறுவனங்களுக்கு விளம்பரம் செய்யும் சிறிய விளம்பர நிறுவனத்தைத் தொடங்கினேன். அதேநேரம், எப்போதுமே வாசிப்பதை நான் நேசித்து வந்திருக்கிறேன். அது என்னுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. இந்தப் பழக்கத்தை எனது சொந்தக் கிராமத்திலும் பரவலாக்க வேண்டுமென நினைத்தேன். கிராம மக்களிடம் வாசிப்பை அதிகரிக்க ஒரு நூலகத்தை உருவாக்கத் திட்டமிட்டேன். ஏனென்றால், அவர்களால் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியாதே.

என் கிராமத்தையும் சுற்றியுள்ள கிராமங்களையும் ஆராய்ந்த பிறகு, தீவிர வாசகர்கள் இல்லாமல் இருப்பதால்தான் நூலகங்கள் காத்தாடுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். அது மட்டுமில்லாமல், கட்டடம் கட்டும் காசுக்கும் புத்தகம் வாங்கலாம் என்று நினைத்தேன்.

இதனால் ஒரு நடமாடும் நூலகத்தைத் தொடங்கி, வாசகர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்களைக் கொடுக்கத் திட்டமிட்டேன். 2011-ம் ஆண்டு செப்டம்பரில் 183 புத்தகங்களுடன் வள்ளலார் நூலகத்தைத் தொடங்கினேன். இந்த நூலகத்துடன் ஒரு வாசகரின் பந்தத்தை நிரந்தரமாக்கக் குறைந்தபட்சமாக ரூ. 300 மட்டும் வாழ்நாள் கட்டணமாகப் பெற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதலில் ஒரு ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து, புத்தகங்களைக் காட்சிப்படுத்திக் கும்பகோணம், சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றோம். மற்ற நாட்களில் சைக்கிளில் சென்று புத்தகங்களை விநியோகிக்கிறேன். இப்போது அந்தப் பகுதி மக்களிடம் வாசிப்பு ஆர்வம் அதிகரித்திருக்கிறது" என்கிறார் முருகராஜ்.

நீண்ட காலத்துக்கு அவர் மட்டுமே நூலக வேலைகளைத் தனியாளாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்போது சென்னையில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால், வாரக்கடைசி நாட்களில் கும்பகோணம் சென்று புத்தங்களை விநியோகிக்கிறார். குகன், யோகேஷ் ஆகிய நண்பர்களும் புத்தகங்களை விநியோகிப்பதில் அவருக்கு உதவுகிறார்கள்.

இப்போது இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 1,300. இலக்கியம், சிறுகதை, கட்டுரை, குழந்தைகள் நூல், ஆங்கில நூல் என 13 தலைப்புகளில் நூல்கள் உள்ளன. பிரபலமான புத்தகங்களைத் தேடித் தேடி வாங்குகிறார்.

"பணம் கிடைக்கும்போது ஒன்று, ரெண்டு புத்தகங்களாக வாங்கி வாங்கிச் சேர்க்கிறேன். பெரிய பிரச்சினை புத்தகங்களை வாங்கவும், எடுத்துச்செல்லவும் தேவைப்படும் பணம்தான். புத்தகங்களைப் பராமரிப்பது பெரும் செலவு பிடிக்கிறது.

அதற்காக எனது முயற்சிகளை நான் நிறுத்தப் போவதில்லை. குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க முயற்சி எடுக்கிறேன். மே மாதத்தில் இருந்து குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சிகளைத் தொடங்கப் போகிறேன். பார்வையற்றவர்களுக்கான ஒலிப்புத்தகங்களையும் நூலகத்தில் சேர்க்க ஆசைப்படுகிறேன்" என்று தன் கனவுகளை விவரிக்கிறார் முருகராஜ்.

ஆனால், அவரது குடும்பத்தினரோ ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் அவர் வேலை பார்ப்பதையே விரும்புகிறார்கள். எல்லோரும் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கான வேலைகளில் யார்தான் ஈடுபடுவார்கள் என்று அர்த்தமுள்ள கேள்வியுடன் புன்னகைக்கிறார் முருகராஜ்.

தொடர்புக்கு: ஜி.முருகராஜ் - 9524111188, vallalarlibrary@gmail.com

SCROLL FOR NEXT