இணைப்பிதழ்கள்

தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்

என்.ராஜேஸ்வரி

வாழ்வுக்கு ஆதாரமான தண்ணீரைப் பல கிரகங்களிலும் விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். இந்தத் தேடுதலில் புதிதாகக் கண்டுபிடித்துள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து கற்பனைக்கெட்டாத அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

உலகில் உள்ள மிகப் பெரிய ஆறுகளில் ஒன்று அமேசான் . இந்த ஆற்றை, இந்த நட்சத்திரத்திலிருந்து ஒரு விநாடியில் பீய்ச்சி அடிக்கப்படும் நீர் நிறைத்து விடுமாம். அந்த அளவுக்கு அந்த நட்சத்திரத்தில் நீர் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது என்கின்றனர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள்.

குழந்தை நட்சத்திரம்

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது ஒரு லட்சம் ஆண்டுகள்தான். அளவில் சூரியனைப் போன்று உள்ள இந்த நட்சத்திரம் இப்போதுதான் உருவாகிக் கொண்டுள்ளது.

இந்த நட்சத்திரம் பெர்சூயஸ் நட்சத்திர மண்டலம் என சொல்லப்படுகிற (constellation perseus) இடத்திலிருக்கிறது. அதிலிருந்து அண்டவெளியில் நீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருக்கிறது. மணிக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் வேகத்தில் இந்த நீர் பாய்கிறது என்கின்றனர்.

இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் ஃபாரன்ஹீட் அளவுக்குச் சூடாகி வாயுவாக மாறுகின்றன. நட்சத்திரத்திலிருந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது.

சூரியனின் கொடையா?

நட்சத்திரத்துக்கு வெளியில் அண்டவெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி, அந்த நீர் அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்குப் பீய்ச்சி அடிக்கப்படு கிறது என்கின்றனர் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) எனும் வானியல் தொலைநோக்கியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியாக நீர் இருக்கிறது. அது பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்துப் பல கருத்துகள் உள்ளன. பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர். இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது அவர்களின் கருத்தை வலுப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க அந்த நட்சத்திரம் தமிழகத்தை நோக்கி நீரைப் பீய்ச்சி அடிக்குமா?

SCROLL FOR NEXT