இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது. மாநில அரசு, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவை ஆகஸ்ட் 14-ம் தேதி கொண்டுவந்தது. அந்தச் சட்ட வரைவைப் பற்றி, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் சட்ட ஆலோசனை செய்தபிறகு, மத்திய சட்ட அமைச்சரவையும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்தன.

இந்நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில், ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கை தீபக் மிஸ்ரா, அமித்வா ராய், ஏ.எம். கான்வில்கர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. “எந்த நிலையிலும் நீட் தேர்வை எழுதி தேர்ச்சிபெற்ற மாணவர்கள் பாதிக்கபடக்கூடாது. நீட் தேர்வு முறையை அழிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காது” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் விவரங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற முடியாத கிராமப்புற மாணவர்கள் என இரண்டு தரப்பு மாணவர்களின் விவரங்களையும் மாநில அரசை சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதுவரை, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

பாஜகவுக்கு 706 கோடி நன்கொடை

அரசியல் கட்சிகள் கடந்த நான்கு நிதியாண்டுகளாகப் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் (Association for Democratic Reforms) ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிட்டிருக்கிறது. இந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-13-ம் நிதியாண்டு முதல் 2015-16 வரை, நாட்டின் ஐந்து தேசிய கட்சிகளுக்கு ரூ. 1,070.68 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நன்கொடை தொகையில், 89 சதவீதம், அதாவது ரூ. 956.77 கோடியை பெருநிறுவனங்களும் வணிக நிறுவனங்களும் அளித்திருக்கின்றன. இதில், அதிகபட்சமாக, 2,987 பெருநிறுவனங்களிடமிருந்து ரூ. 705.81 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கிறது பாஜக.

இது மற்ற நான்கு தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த நன்கொடையைவிட மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவித்திருக்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கம். பாஜகவுக்கு அடுத்த இடத்தில், காங்கிரஸ் கட்சி, 167 நிறுவனங்களிடமிருந்து ரூ. 198.16 கோடியை பெற்றிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், பகுஜன் சமாஜ் கட்சி யாரிடமிருந்தும் ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பதினெட்டு லட்சத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 1.89 கோடியையும் நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. பான் எண், முகவரி இல்லாத நன்கொடைகளில் 99 சதவீதம் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரிவினை அருங்காட்சியகம்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் முதல் பிரிவினை அருங்காட்சியகம் (Partition Museum) எல்லை நகரமான அமிர்தஸரில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டிருக்கிறது. டவுன் ஹால் கட்டிடத்தில் 17,000 சதுர அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகத்தை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் திறந்துவைத்திருக்கிறார். இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பொருட்கள் ‘கிரவுட்சோர்ஸிங்’ மூலம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1.4 கோடி மக்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இது உலக வரலாற்றில் மிகப்பெரிய இடப்பெயர்வாகக் கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அடையாள அட்டைகள், அகதிகள் கொண்டுசென்ற ஆடைகள், டிரங்க் பெட்டிகள், கலைப் படைப்புகள் போன்றவை பதினான்கு கேலரிகளில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத் திட்டத்தை இயக்கியிருக்கும் இந்திய நாவலாசிரியர் கிஷ்வர் தேசாய், “ராட்கிளிஃப்பால் இந்தியாவை ஐந்து வாரங்களில் பிரிக்கமுடிந்தது. ஆனால், இந்த அருங்காட்சியகத்தை அமைக்க எங்களுக்கு வெகுகாலம் ஆகிறது. எங்களுடைய பணி எப்போதும் நடைபெற்று கொண்டிருக்கும் பணியாக இருக்கும்” என்று சொல்கிறார்.

உலகம் சுற்றும் இந்திய மகளிர் கடற்படை

இந்தியாவின் பாய்மரக் கப்பலான ‘ஐஎன்எஸ்வி தாரிணி’யில், உலகைச் சுற்றிவரவிருக்கிறார்கள் இந்தியாவின் மகளிர் கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண்கள். வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், கோவாவிலிருந்து தொடங்கும் இந்தப் பயணம் மார்ச், 2018-ம் ஆண்டு நிறைவடையும். இந்தப் பயணத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆறு பெண்களும் பிரதமர் மோடியை ஆகஸ்ட் 16-ம் தேதி சந்தித்து தங்கள் பயணத்தைப் பற்றி விளக்கினர். இந்தப் பயணம் வெற்றிபெறுவதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறியிருக்கின்றனர் ஐஎன்எஸ்வி தாரிணி குழுவினர்.

இந்தப் பயணம் ‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினர், ஃபிரிமேன்டில் (ஆஸ்திரேலியா), லைடில்டன் (நியூசிலாந்து), போர்ட் ஸ்டான்லி (ஃபால்க்லேண்ட்ஸ்), கேப் டவுண் (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்ட நான்கு துறைமுகத் நிறுத்தங்களைக் கடந்துசெல்வார்கள். ‘ஐஎன்எஸ்வி தாரிணி’ 55 அடியில், இந்த ஆண்டு இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்டிருக்கும் பாய்மரக் கப்பல். இந்தப் பயணத்தை லெப்டினன்ட் கமாண்டர் வர்டிகா ஜோஷி தலைமையில், லெப்டினன்ட் கமாண்டர் பிரதிபா ஜம்வால், லெப்டினன்ட் கமாண்டர் பி. ஸ்வாதி, லெப்டினன்ட் எஸ். விஜயா தேவி, லெப்டினன்ட் பி. ஐஸ்வர்யா, லெப்டினன்ட் பாயல் குப்தா உள்ளிட்டோர் மேற்கொள்கின்றனர்.

இந்தியாவில் 27,312 யானைகள்!

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், முதல் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட அனைத்திந்திய யானைகள் கணக்கெடுப்பின் முடிவுகளை ஆகஸ்ட் 12-ம் தேதி, வெளியிட்டிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகளில், இந்தியாவின் ஆசிய யானைகளின் எண்ணிக்கை 27,312 என்று தெரியவந்திருக்கிறது. மறைமுக சாண-எண்ணிக்கையின் மூலம் கடந்த மூன்று மாதங்களாக யானைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டைவிட குறைவு என்றாலும், முதலில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒருங்கிணைந்தது கிடையாது.

அதனால், அதில் போலி எண்ணிக்கை இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த முடிவுகளல், கர்நாடகாவில் 6,049 யானைகளும், அசாமில் 5,719 யானைகளும், கேரளாவில் 3, 054 யானைகளும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில், இந்தியாவின் 23 மாநில வனத் துறைகள் பங்கெடுத்திருக்கின்றன. 1990களுக்குப் பிறகு, யானைகளின் எண்ணிக்கை இப்போது ஒரளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள் யானை ஆர்வலர்கள்.

பார்சிலோனா தாக்குதலில் 13 பேர் பலி

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில், ஆகஸ்ட் 17-ம் தேதி, பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 13 பேர் பலியாகியிருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். அந்த வேனின் ஓட்நர் தப்பிச்சென்றுவிட்டர்ர். இந்த சம்பவத்தை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அந்நாடு அறிவித்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது. பார்சிலோனாவில் லாஸ் ராம்ப்ளாஸ் என்ற சுற்றுலா பகுதியில், பாதசாரிகள் சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, இந்த வேன் தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மவுசா ஒவ்கபிர் என்ற பதினெட்டு வயது இளைஞரை இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக அறிவித்திருக்கிறது ஸ்பானிய காவல்துறை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையால் ஐந்து சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு பிரதமர் மரியானோ ரஜோய் இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஜிகாத் தாக்குதல் என்று அறிவித்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில், ஸ்பெயினில் நடைபெற்ற மிகமோசமான தாக்குதலாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT