பட்டப்பெயர் ஒருவரின் மனத்தைப் புண்படுத்தக் கூடுமானால் அதைத் தவிர்ப்பதுதான் நல்லது. புண்படுத்தக் கூடும் என்னும் பட்டப்பெயர் ரகசியமாகச் சிலருக்குள் மட்டும் புழங்குவதுண்டு. பெரும்பாலும் அதிகாரம் செலுத்துபவர்கள் மேல் நமக்கிருக்கும் கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு ரகசியப் பட்டப்பெயரைப் பயன்படுத்துகிறோம். மன இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ள இவ்வாறு பட்டப்பெயர் சூட்டுவது உதவும்.
அன்றுதான் காரணம் தெரிந்தது
சம்பந்தப்பட்டவரின் இறுக்கத்தைத் தளர்த்தவும் பட்டப்பெயர் பயன்படுவதுண்டு. அதை ஒருமுறை இயல்பாகப் பரீட்சித்துப் பார்த்திருக்கிறேன். கிராமத்துக் கல்லூரிக்கு இன்னும் சைக்கிளில் வரும் மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். அரசு வழங்கும் இலவசப் பொருட்களில் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் சைக்கிள் நன்றாகப் பயன்படுகிறது. கொஞ்சம் பணம் செலவு,செய்து வேலை பார்த்துக்கொள்ள வேண்டும்.
இக்காலத்தில் கூடுதலான பேருந்து வசதியும் இலவசப் பேருந்துப் பயண அட்டையும் இருப்பதால் கல்லூரி மாணவர்கள் சைக்கிளைப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. அப்போது சுரேந்திரன் என்னும் மாணவர் தினமும் சைக்கிளில்தான் வருவார். முதல் வகுப்பு தொடங்குவதற்குள் வந்துவிடுவார். சில நாள் தாமதமாகிவிடும். அப்போது வேர்வையில் சட்டை முழுக்க நனைந்திருக்க அவசரமாக வகுப்புக்குள் நுழைவார். ஒருமுறை அவருக்குச் சிறு விபத்து ஏற்பட்டுவிட்டது என அறிந்து நானும் என்னுடன் பணியாற்றிய பேராசிரியர் க.அன்பழகனும் இருசக்கர வாகனத்தில் அவரைப் பார்க்கச் சென்றோம்.
அப்போதுதான் பேருந்தைப் பயன்படுத்தாமல் அவர் தினமும் சைக்கிளில் வருவதற்கான காரணம் தெரிந்தது. அவருக்குத் தந்தை இல்லை. அவரும் அவர் தாயும் கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டு பண்ணையக்காரர் ஒதுக்கிக் கொடுத்த சிறுவீட்டில் வசித்துவந்தனர். பேருந்துச் சத்தம்கூடக் கேட்காத பகுதியில் வெகுதொலைவில் உள்ளொடுங்கி இருந்தது பண்ணை. அங்கிருந்து கல்லூரிக்கு வரப் பத்து, திரும்பிச் செல்லப் பத்து எனத் தினமும் இருபது கல் தொலைவு அவர் சைக்கிளில் பயணிக்கிறார்.
சும்மா இருக்க மாட்டார்
சிறுவயது முதலே கடுமையான உடல் உழைப்புடையவர். அதனால் சைக்கிள் மிதிப்பது அவருக்குக் கடினமாகத் தெரியவில்லை. விடுமுறை நாட்களில் காட்டு வேலைக்குச் செல்வார். பிற நாட்களில் பகுதி நேரமாகக் கோழிப்பண்ணை வேலை செய்வார். தாய் சொல்லைத் தட்டாதவர். கல்லூரிக்குச் செல்லும் தடம் மட்டும்தான் தெரியும். பக்கத்து நகரத்துக்குப் போவது என்றால்கூடப் பதற்றமாகிவிடுவார். அவர் வீட்டுக்குப் போய் நேரில் உடல்நலம் விசாரித்து வந்த பிறகு, அவரைப் பற்றி இவ்வளவும் தெரிந்துகொண்டேன்.
அதன் பின் என்னிடம் கொஞ்சம் நெருங்கி வந்தார். கோழிகளைப் பிடித்துவிட்டுப் புதிய குஞ்சுகளைப் பண்ணையில் விடவில்லை. ஆகவே, இடையில் கொஞ்ச நாட்கள் அவருக்குப் பகுதிநேர வேலை இல்லாமல் போயிற்று. அப்போது என் நூலகத்தில் அலமாரிகளைத் துடைத்துப் புத்தகங்களை முறைப்படி அடுக்கி வைக்கும் வேலை கொடுத்தேன். வேலையில் அவ்வளவு நேர்த்தி. ஒரு நிமிடம்கூடச் சும்மா இருக்க மாட்டார். என்னிடம் ஏதாவது வேலை கேட்டுக்கொண்டே இருப்பார். வாங்கும் ஊதியத்துக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்னும் எண்ணம். ‘கொஞ்ச நேரம் சும்மா உக்காருப்பா’ என்று வற்புறுத்திச் சொல்வேன்.
எங்கள் வீட்டில் ஏதாவது கொடுத்தால் சாப்பிடத் தயங்குவார். அவர் வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவைத் தவிர எதையும் சாப்பிடுவதில்லை. நாங்கள் சாப்பிடும்போது அவர் உணவையும் எங்கள் உணவையும் பகிர்ந்து எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம் என்றால் கேட்க மாட்டார். சிரிப்பதுகூட அபூர்வம்தான். கேலி செய்தாலோ கிண்டல் அடித்தாலோ சட்டெனப் புரிந்து எதிர்வினை காட்டமாட்டார். ‘சுரேந்தர்’ என்று அழைத்தால் ‘சுரேந்திரன்னு கூப்பிடுங்க’ என்று கோபப்படுவார். செய்த வேலைக்குப் பத்து ரூபாய் சேர்த்துக் கொடுத்தால் மறுத்துத் திருப்பிக் கொடுத்துவிடுவார். கணக்கும் கவனமும் நிறைந்தவர்.
சூசையும் சிரிப்பும்
எதற்கு இப்படி இறுக்கமாக ரோபோ போல இருக்கிறார் என்று தோன்றும். என்னால் இப்படியானவர்களைச் சகித்துக்கொள்வது கடினம். உழைப்பும் குணமும் கொண்ட நல்ல பையன். இவரை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. அவருடைய சைக்கிள் எங்கள் வீட்டில் நிற்பதைப் பார்த்த என் மகன் “யாருதுப்பா சைக்கிள்?” என்றான். அவனிடம் “நம்ம வீட்டுல புத்தகமெல்லாம் அடுக்கறதுக்கு சைக்கிள் சூசை ஒருத்தர் வர்றாரே உனக்குத் தெரியாதா?” என்றேன்.
நடிகர் வடிவேலு பயில்வானாகப் பந்தா விடும் ‘கோவில்’ படத்தில் அவரை எதிர்க்க ரவுடி ஒருவர் வருவார். படத்தில் அவர் பெயர் ‘சைக்கிள் சூசை.’ “எம் பேரு சூச…” என்று அவர் பேசும் வசனம் பிரபலம். இப்பெயர் எப்படியோ அந்தச் சமயத்தில் என் நாவில் வந்துவிட்டது. அங்கே இருந்த சுரேந்திரன் “என்னங்கய்யா இப்பிடிச் சொல்றீங்க?” என்றார் வருத்தத்தோடு. “இன்னமே உம்பேரு சைக்கிள் சூசைதாம்பா” என்று சொல்லிவிட்டேன். அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பிலும் இந்தப் பெயரைச் சொல்லிப் பரப்பிவிட்டேன்.
- சுரேந்திரன்
நான் அவரை அழைப்பதே ‘சூசை’ என்றுதான். வகுப்பில் கேட்டாலும் “சூச எங்கப்பா” என்பேன். முதலில் முகத்தில் வருத்தம் காட்டிய சுரேந்திரன் இந்தப் பெயரால் முகத்தில் சிரிப்பைக் காட்ட ஆரம்பித்தார். சூசையும் சிரிப்பும் இணையத் தொடங்கிப் பெருகின. இப்போது சுரேந்திரன், அல்ல அல்ல, சுரேந்தர் எங்களோடு சேர்ந்து பேசுகிறார், சிரிக்கிறார், சாப்பிடுகிறார், கேலியைப் புரிந்துகொள்கிறார், அவரும் கேலி செய்கிறார், கவிதை வேறு எழுதுகிறார். நகரத் தெருக்களுக்குத் தைரியமாகப் போய் வருகிறார். இன்னும் தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கவில்லை. அழைத்துப் போக எனக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அதுவும் நடந்துவிடும். எல்லாம் சூசையில் தொடங்கிய மாற்றம்!
பெருமாள் முருகன், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com