எந்தப் பிரிவைச் சேர்ந்த பொறியியல் பட்டப்படிப்பை படித்தாலும் பெரும்பாலான பொறியாளர்கள் கடைசியில் வேலைக்குச் செல்வது கணினித் துறைக்குத்தான். 90-களில் தகவல் தொழில்நுட்பம் புதிய துறையாக அறிமுகமானபோது, அத்துறைக்கு அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்பட்டார்கள். அதனால் கைநிறையச் சம்பளத்துடன் பலருக்கு வேலை எளிதாகக் கிடைத்தது. ஆனால் எல்லோரும் அங்குப் படையெடுத்துச் சென்றதால், இப்போது தேவையும் குறைந்துவிட்டது, சம்பளமும் குறைந்துவிட்டது.
செயல்திறன் மிக்க குழாய்கள்
கடந்த இருபதாண்டுகளாக, பெரும்பாலான பொறியாளர்கள் கணினித் துறைக்குச் சென்றதால், அடிப்படைப் பொறியியல் துறைகளான மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிகல் துறைகளில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் கணினித் துறையினர்கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம் அங்கே வழங்கப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலை மற்றும் அதைச் சார்ந்த ரசாயன ஆலைகள் இன்னமும் அதிக லாபம் ஈட்டுபவையாக உள்ளன. இத்துறையின் உயிர்நாடி பைப்பிங் இன்ஜினீயரிங் (Piping Engineering) ஆகும். திரவ வடிவில் உள்ள ரசாயனத்தைப் பல்வேறு உபகரணங்களுக்கு இடையே குழாய்களின் வழியாக கடத்துவதுதான் இந்தத் தொழிற்சாலையின் மிக முக்கியமான செயல்பாடு. அதற்குச் செயல்திறன் மிக்க குழாய்களை வடிவமைக்கவேண்டும்.
செயல்திறன் மிக்க குழாய்களை உருவாக்க, பல்வேறு பொறியியல் முறைகள் பற்றிய முறையான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. ஆகையால் பொறியியல் அறிவியலில் ‘பைப்பிங்’ அமைப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் குழாய் அமைப்பை வடிவமைக்கப் பயிற்சி பெற்ற பைப்பிங் பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கூடுதல் பொறுப்பு
பைப்பிங் பொறியாளர்களை லே -அவுட் (layout) பொறியாளர், ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். லே -அவுட் (layout) பொறியாளரின் முக்கியப் பணி இடத்தின் அளவு, சுற்றுச்சூழல் மற்றும் காற்றின் திசைக்கு ஏற்றபடி, பெரிய உபகரணங்களைத் தகுந்த இடத்தில் நிறுவுவது. பின்னர் அவற்றை இணைக்கும் பைப்பிங் அமைப்பை எலெக்ட்ரிகல் மற்றும் சிவில் துறைக்கு இடையூறின்றி வடிவமைக்கவேண்டும்.
ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர்களின் முக்கியப் பணி பைப்பின் விட்டம், தடிமன், வளைவின் ஆரம், பைப் சப்போர்ட் (pipe support) வகைகளைத் தீர்மானிப்பது போன்றவையாகும். இந்த ஆலைகளில் உள்ள குழாய்களில் உயர் அழுத்த திரவம் மிக அதிக வெப்பத்தில் செலுத்தப்படும். அப்போது குழாய்களின் இயல்பான விரிவுத்தன்மையால் விபத்துகள் நேரிட அதிக வாய்ப்பு உண்டு. எனவே ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர்களுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவமும், சம்பளமும் உண்டு.
மெக்கானிக்கல் பொறியியல் படித்த பின்னர் PDS, PDMS, Catia, Autoplant முதலிய மென்பொருள்களை படிப்பது லே-அவுட் (Layout) பொறியாளர் ஆக அவசியம். CAESAR II, Autopipe, CAEPIPE முதலிய மென்பொருள்களைப் படிப்பது ஸ்ட்ரெஸ் (Stress) பொறியாளர் ஆக தேவை.
புரிந்து படித்தால் வெல்லலாம்!
மும்பை ஐ.ஐ.டி.யின் பைப்பிங் பொறியியல் பிரிவு, 15 நாட்களில் பைப்பிங் பொறியியலில் தரமானப் பயற்சி அளித்து அதற்குச் சான்றிதழும் வழங்குகிறது. பயிற்சி முடியும் நாளில் IOCL, BPCL, HPCL, ONGC, Oil India, Gail, GSPL, EIL, Jacobs, Toyo, Worley-parson, Technip, Saipem, Petrofac, Dove Chemicals British Petroleum முதலிய பெருநிறுவனங்கள் ஐ.ஐ.டி.யில் வளாக நேர்காணல் நடத்துகின்றன. இந்தப் பெரு நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையில் உள்ளன. இது தவிர இந்தச் சான்றிதழுக்கு உலக அளவில் மதிப்பும் உண்டு. இது தவிர மும்பையில் உள்ள சுவித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Suvidya Institute of Technology (SIT)) இதில் பிரத்யேகப் பயிற்சி அளிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக சென்னையில் டிராஃப்டெக் (Draftetech) நிறுவனம் மூலமாக பைபிங் பொறியியலில் பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்துவருகிறார் வேணுகோபால். 1975-ல் கெமிக்கல் பொறியியலில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவர் இவர். இவர் பைப்பிங் பொறியியல் பற்றிக் கூறுகையில், “பைப்பிங் இன்ஜினியரிங் ஒன்றும் கடினமான துறை இல்லை. கொஞ்சம் பொறுமையாக, நல்ல பயிலகத்தில், நன்கு புரிந்து படித்து, அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டால் சிறப்பான வேலைவாய்ப்பு உள்ளது.
1988-ல் டிராஃப்டெக் நிறுவனத்தை மெக்கானிக்கல் வரைபடம் (Drafting) வரைந்து கொடுப்பதற்கு தொடங்கினோம். இன்று திறமைவாய்ந்த பைப்பிங் பொறியாளர்களை உருவாக்கும் பட்டறையாக இது திகழ்கிறது. இந்தத் துறையினருக்கு இந்தியாவில் மட்டுமல்ல, அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தேவை உள்ளது” என்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:http://www.cadc.iitb.ac.in/BroCourse_CCPE.htm#coverage