வீட்டில் ஃபியூஸ் கேரியர் பழுதானால், அடிபம்பின் செக்வால்-நட்டை மாற்ற வேண்டுமானால், எலக்ட்ரீஷியனையோ, பிளம்பரையோ தேடி ஓடும் வழக்கம் இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கிடையாது. டெஸ்டர், ஃபீஸ் ஒயர், ஸ்பேனர் செட் எல்லாமே பெரும்பாலும் அன்றைக்கு இருந்தவர்களின் வீட்டில் அத்தியாவசியப் பொருட்களாக இருந்தன. வீட்டின் உறுப்பினர்களே இந்த வேலைகளைச் செய்துகொள்வார்கள்.
இன்னும் சிலர் உட்கார்வதற்கான மனை, டீப்பா, ஸ்டூல் போன்ற எளிய மரச்சாமான்களைச் செய்வதற்கும் திறமையும் பெற்றிருந்தார்கள். இதற்கெல்லாம் பிரதானமான காரணமாக அன்றைக்குப் பள்ளிகளிலேயே நெசவு, தச்சு, எலக்ட்ரீஷியன் போன்ற தொழிற்பயிற்சிகளை வாரத்தில் ஒரு பாடவேளையில் கற்றுக் கொடுத்தனர். ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்னும் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின் வரிகளை நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலித்த காலம் அது. ஆனால் சமையலறையிலிருக்கும் காஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை எப்படிக் கையாள்வது என்பதுகூட இன்று நம்மில் பலருக்குத் தெரியாது!
தடம் மாறும் பருவம்
சுமாராகப் படிப்பவர்கள் முதல் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பவர்கள் வரை எல்லாருக்கும் தொழிற்கல்வி, உயர் கல்வி படிப்பதற்கு ஐ.டி.ஐ. முதல் ஐ.ஐ.டி. வரை பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் 6, 8, 9-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திய சிலர் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது 18 வயதில் நின்றுகொண்டிருப்பார்கள். வேலை கிடைக்காமல், பணத்துக்கு ஆசைப்பட்டுத் தடம் மாறும் வயது இதுதான்.
இப்படிப்பட்டவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, ஆர்வம் இருந்தால் போதும். தையற்கலை பயிற்சி முதல் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி வரை ஏறக்குறைய 22 தொழிற் பயிற்சிகளைத் தருவதற்குத் தயாராக இருக்கிறது மக்கள் கல்வி நிறுவனம். மத்திய அரசின் மனித வள மேம்பாட்டின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் நிறுவனம் இது. தொழிற் பயிற்சியோடு, வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் சொல்லித் தருகிறது.
தேடி வரும் பயிற்சி
தேடிவருபவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு எத்தனையோ கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி இவர்கள் மக்களைத் தேடிப் போய் இலவசமாகவே பயிற்சி அளிக்கிறார்கள். “எங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் இந்தத் தொழிலை நாங்கள் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்னும் உறுதி. பயிற்சியை அளிப்பதற்குத் தேவையான இடம். அது அரசுப் பள்ளியாக இருக்கலாம்.
சமூக நலக் கூடமாக இருக்கலாம். மாநகராட்சித் திருமணக் கூடமாக இருக்கலாம். துறை சார்ந்த பிரமுகர்களை அனுப்பியும், அந்தப் பகுதிகளிலேயே இருக்கும் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு இணைந்தும் பல பயிற்சிகளை அளிக்கிறோம். எங்களின் அலுவலகத்திலேயே வந்து கணினி, அழகு கலை, எம்பிராய்டரி போன்ற பயிற்சிகளைப் பெறுவதற்கு மட்டும் குறைந்த கட்டணம் வசூலிக்கிறோம்” என்கிறார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பி.தங்கவேல்.
கூர்நோக்கு இல்லங்களிலும் சேவை
இதுதவிர, விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் பயிற்சிகளை அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று இலவசமாக வழங்குகிறது இவ்வமைப்பு. பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு மக்கள் கல்வி நிறுவனத்தின் சான்றிதழும் அளிக்கப்படுகிறது.
“இந்தச் சான்றிதழைக் கொண்டு வங்கிகளின் உதவியோடு பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கும் காரணமாக இருக்கிறோம். சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சிறுவர் கூர்நோக்கு இல்லங்களிலும், மகளிர் கூர்நோக்கு இல்லங்களிலும்கூடச் சில தொழிற்பயிற்சிகளை அளிக்கிறோம். இதுதவிரப் பிரதமர் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின்கீழும் பலருக்குப் பயிற்சி அளிக்கிறோம்” என்கிறார் பி.தங்கவேல். மக்கள் கல்வி நிறுவனத்தைத் தொடர்புகொள்ள: 9444939853, (044) 2374 5219, (044) 2374 5953.
எங்கே, எப்படி?
# இந்தியா முழுவதும் 237 மக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 10 மக்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
# ஆண்டுக்குச் சராசரியாக ஆயிரம் பேர் தொழிற்கல்வி பெறுகின்றனர்.
# ஒரு மாதப் பயிற்சி முதல் 6 மாதப் பயிற்சிகள் வரை கற்றுத் தரப்படுகிறது.
# எச்.சி.எல்.(HCL), வாழும் கலை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் பாய்ஸ் கிளப், ஜாகுவார் போன்ற அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து தொழிற்கல்வியை மக்கள் கல்வி நிறுவனம் வழங்குகிறது.
பி.தங்கவேல்