தொழிலாளர்களுக்கான ஊதியத் தொகையைக் காசோலை மூலமாகவோ வங்கிக் கணக்கிலோ செலுத்த வழிவகை செய்யும் ஊதியம் வழங்கல் அவசரச் சட்டத்தில் (2016) திருத்தம் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அரசாணை, டிசம்பர் 28-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தின்படி, கூலி வழங்கல் சட்டத்தின் ஆறாவது பிரிவு திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, தொழிலாளரின் ஒப்புதலின்றியே, அவரது ஊதியத்தை காசோலையாகவோ, வங்கிக் கணக்கிலோ இப்போது வேலை வழங்குபவர் செலுத்தலாம்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு முன்புவரை, ஊதியப் பணத்தை நாணயங்களாகவோ ரூபாய் நோட்டுகளாகவோதான் வழங்க வேண்டும். காசோலையாகவோ, வங்கிக் கணக்கிலோ செலுத்த தொழிலாளியிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று இருந்தது. 18 ஆயிரம் ரூபாய் வரை மாதச் சம்பளம் வாங்கும் தொழில் பிரிவுகளுக்கு இந்த விதி பொருந்தும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஊதியம் வழங்கல் சட்டத் திருத்த மசோதா (2016) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசியல் சாசனத்தின் 123-வது பிரிவின் கீழ், இந்த சட்டத் திருத்தத்தை ஜனாதிபதி அமல்படுத்தினார்.
உ.பி. யில் குழப்பம்
உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு டிசம்பர் 30 அன்று நீக்கப்பட்டு அடுத்த நாளே மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவரது தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவை நீக்கினார்.
உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 325 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி டிசம்பர் 28-ல் வெளியிட்டது. கட்சித் தலைவர் முலாயம் சிங் வெளியிட்ட அப்பட்டியலில், அவருடைய மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்.
இந்நிலையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாலும், கட்சி விரோதப் போக்கை கடைபிடித்ததாலும் 6 வருடங்கள் அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார் முலாயம் சிங் யாதவ். மேலும், அவரது சகோதரரான ராம்கோபால் யாதவையும் 6 வருடங்கள் இடைநீக்கம் செய்தார். எனினும் அந்த முடிவை அடுத்த தினமே திரும்பப் பெற்றுக்கொண்டார்.
நிலக்கரிச் சுரங்கத்தில் 10 பேர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் கொடா மாவட்டத்தில் டிசம்பர் 29-ம் தேதி இரவு நடந்த சுரங்கச் சரிவில் பத்துக்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான ராஜ்மஹால் ஓபன்காஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் சுரங்கத்தில் இந்த விபத்து நேர்ந்தது. இருட்டினாலும் பனியினாலும் வேகமாக மீட்புப் பணிகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் டிசம்பர் 30-ம் தேதி காலையில்தான் மீட்புப் பணிகள் தொடங்கின. ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக அறிவித்தார்.
பழைய நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2017 மார்ச் 31-ம் தேதிக்கு மேல் கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து 15.4 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக ஆகின. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற டிசம்பர் 30 வரை கெடு கொடுக்கப்பட்டிருந்தது. இச்சூழ்நிலையில் தகுந்த காரணங்களைச் சொல்லி, பழைய நோட்டுகளை வங்கியில் கொடுப்பதற்கான விதிமுறைகளும் 2017 மார்ச் 31-ம் தேதி வரை கெடுவும் நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்கு மேல் பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் தொகையைப் போல ஐந்து மடங்கு தொகை அல்லது குறைந்தபட்சம் பத்தாயிரம் அபராதமாக விதிக்கப்படும். பத்து நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படும்.
புதிய பொதுச் செயலாளர் சசிகலா
அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா டிசம்பர் 29-ம் தேதி அக்கட்சியின் பொதுக் குழுவால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் முறையான உட்கட்சித் தேர்தல் நடைபெறும் வரை, பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் அவர் வகிப்பார் என்றும் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி டிசம்பர் 31 அன்று அவர் பெறுப்பேற்றார்.