இணைப்பிதழ்கள்

இப்படியும் பார்க்கலாம்: ஸ்பைடர்மேனாக ஆகத்தான் வேண்டுமா?

ஷங்கர்பாபு

அசாதாரண ஆற்றல் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? சூப்பர்மேன், அயர்ன்மேன், ஹல்க் போன்ற சினிமா நாயகர்களைப் பற்றிக் கேட்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அன்றாட வாழ்க்கையின் சற்றே அசாதாரணர்கள். மேடையில் ஏறிய உடன் எவ்விதக் குறிப்புகளுமின்றி பேச்சு மழை பொழிகிறவர்கள்; நான்கைந்து மொழிகளில் உரையாடுகிறவர்கள்; தங்கள் உடல் சார்ந்த வசீகரத்தினால் (உயரம்/பலம்) அவை இல்லாதவருக்கு சற்றே தாழ்வு மனப்பான்மை அளிப்பவர்கள்…

ஆனால் நடைமுறையில் கூச்சம் காரணமாகக் கடைசி பெஞ்சில் உட்காரவே வருகிறவர்கள், தூண் நடுவில் அமர்ந்து முகத்தை மறைத்துக்கொள்கிறவர்கள், தங்கள் உயரம், நிறம் காரணமாக தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

இவர்கள் என்ன செய்யலாம்? வியத்தகு ஆற்றல் படைத்தோரின் சாதனைகளுக்குக் கை தட்ட வேண்டியதுதானா? சராசரிகளும் தாழ்வு மனம் இல்லாமல் வாழ்வில் வெற்றி பெற ஏதேனும் ஆற்றல்கள் தேவைப்படுமானால், அவை என்ன?

வெட்கமாக இல்லையா?

என் வக்கீல் நண்பர் பற்றி சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. சட்டம் படித்திருந்தாலும் வக்கீல் தொழிலை நடத்தும் தகுதி தனக்கு இருப்பதாக நம்பவே இல்லை. அப்போது நீதிமன்றங்களில் சிங்கமாய் கர்ஜிக்கும் ஒருவர் இருந்தார். அவர் மாதிரி தன்னால் ஆக முடியவில்லையே என்ற ஏக்கம் நண்பருக்கு இருந்தது.

இதை ஒரு பெரியவரிடம் பகிர்ந்துகொண்டபோது, “நீங்கள் சொல்லும் அசாதாரண ஆற்றல் கொண்ட நபரைப் போல எல்லோராலும் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் மிகவும் அபூர்வமாகவே இருப்பார்கள். தவிர, சாதாரண வக்கீலாக இருப்பதற்கு அசாதாரண ஆற்றல் அவசியமே இல்லை. பொதுவான யோக்கியத்தன்மையும், உழைப்பும் இருந்தாலே போதும்” என அறிவுரை கூறினார்.

நண்பரின் சொற்பமான பொது அறிவும் அவருக்கு ஏமாற்றத்தைத் தரவும், “இப்படி பொது அறிவில் தட்டுத் தடுமாறினால் எப்படி? வக்கீல்னா ஒருவருடைய முகத்தைப் பார்த்தே எப்படிப்பட்டவர் எனச் சொல்லும் அறிவை வளர்த்துக் கொள்ளணுமே” என்று சில ஆலோசனைகளைச் சொல்லி அனுப்புகிறார்.

நண்பர் வழக்குகள் எதிர்பார்த்து ஒரு ஊரில் தங்கினார். எதுவும் வந்த பாடில்லை. என்றாலும் தினமும் உயர் நீதிமன்றத்துக்குப் போக ஆரம்பித்தார். அப்பவும் சட்ட ஞானமோ, வழக்குகளின் நடைமுறையோ பிடிபடவே இல்லை. கோர்ட்டில் எவ்வளவு நேரம்தான் சும்மாவே இருக்க முடியும்? அங்கேயே தூங்குவது வழக்கமானது.

“வெட்கமாக இல்லையா?” என்றேன்.

“ஆரம்பத்தில் வெட்கமாகத்தான் இருந்துச்சு. ஆனால் அங்கே எனக்குக் கூட்டாளிகள் கிடைத்தார்கள். நாளடைவில் கோர்ட்டில் தூங்குவதே நாகரிகம் என்று நினைக்கவே சுத்தமாக வெட்கம் போய்விட்டது.”

எங்குமே இடம் இல்லை

இந்நிலையில் ஒரு வழக்குக் கிடைத்தது. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எழுந்தபோது, நண்பருக்கு பயத்தில் தலை சுற்றியது. நீதிபதியும், சக வழக்கறிஞர்களும் சிரிக்க, நண்பர் அவமானம் தாங்க முடியாமல் நீதிமன்றத்தைவிட்டே கிளம்பிவிட்டார்.

நகரத்தில் தங்கி வாய்ப்பு தேடுவது என்றால் சும்மாவா? செலவு அதிகரித்தது. வருமானத்துக்காக “ஆங்கில ஆசிரியர் தேவை” என்ற விளம்பரத்தைப் பார்த்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலையில் சேரலாம் என்று போனால் அங்கும் தோல்வி. தாக்குப்பிடிக்க முடியாமல் நகரத்தைக் காலி செய்து சகோதரர் வீட்டுக்கு சென்று அங்கு வழக்குகளுக்கு மனு தயாரிப்பது, விண்ணப்பங்கள் தயாரித்துக் கொடுப்பது போன்ற சில ஏனோதானோ வேலைகள்.

திருப்தி இல்லாத சூழல், அதிகரித்து வரும் மனச்சோர்வுக்கு மத்தியில் வெளிநாட்டு வாய்ப்பு ஒன்று வந்தது. நண்பருக்கு அப்போது திருமணமாகி குழந்தையும் இருந்தது. பிரிவு ஆற்றாமையில் “எப்படியும் ஒரே வருடத்தில் வந்து விடுகிறேன்” என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லிக் கிளம்புகிறார் நண்பர்.

இந்தச் சூழலில் மனைவி ஒரு ஓரமாய் நின்று கண்ணீர் வடித்திருப்பார்; நண்பர் தன் குழந்தைக்கு ஆசையாய் முத்தம் கொடுத்து, சோகமாய்ப் பிரிந்திருப்பார் இதுதான் இயல்பாக நடந்திருக்கும்.

நம்ப முடிகிறதா?

குடும்பத்தினரும் “உடம்பைப் பாத்துக்கப்பா... குடும்பம் இருக்குற நிலை உனக்குத் தெரியும்” என்றுதான் பிரியாவிடை கொடுத்திருப்பார்களே தவிர, “கவலைப்படாமப் போ...வீட்டை நினைச்சு ஃபீல் பண்ணாத... ஏன்னா, நீ எதிர்காலத்துல ‘மகாத்மா காந்தி’யா மார்றதுக்கு அடிப்படையான விஷயங்கள் தென்னாப்பிரிக்காலதான் நடக்கப் போவுது. சாதா ஆத்மாவா போற நீ, மகா ஆத்மாவா திரும்பி வரத்தான் போற” என்று வாழ்த்தி அனுப்பியிருக்க வாய்ப்பே இல்லை!

காந்திக்கு அறிவுரை கூறிய பெரியவர் தாதாபாய் நெளரோஜி, “வாழ்வில் வெற்றி பெற யோக்கியமாய் இருப்பதும், உழைப்பும் போதும்” என்கிறார்.

காந்தியடிகள், “இவ்விரு குணங்களும் என்னிடம் ஓரளவுக்கு இருந்ததால் நான் ஒருவாறு தைரியம் கொண்டேன்!” என்கிறார்.

உள்ளூரில் தாக்குப் பிடிக்க முடியாமல் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஒருவர் கடனை அடைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டில் என்ன நடக்கும் என்று தெரியாது. புதிய சூழல், ஜனங்கள் பிடிக்காமல் போனால் உடனே திரும்பவும் முடியாது. இந்தப் பின்னணியில் நாட்டை விட்டு வெளியேறுகிற சராசரியான ஒருவர் பிற்காலத்தில் ஒரு தேசத்தையே வசீகரித்து, வழிகாட்டும் குரலாய் மாறியதற்கு இந்தக் குணங்கள்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்!

சராசரித்தனமான ஒருவரின் பேராசை, எண்ணங்கள், கூச்ச சுபாவம், தனது பலவீனங்களுடன் போராடுதல்…காந்தியடிகள் தனது சாதா ஆத்மாவை எந்த இடத்திலும் மறைக்கவே இல்லை!

தான் நம்பும் கொள்கையில் நேர்மையும், உழைப்பும் இருந்தால் மகாத்மா ஆகிறோமோ இல்லையோ, நிச்சயமாய் அற்ப ஆத்மாவாக இருக்க மாட்டோம்! அசாதாரண ஆற்றல்கள் எதுவும் வேண்டுமா என்பதற்கான பதிலும் இதுவே!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

SCROLL FOR NEXT