மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பு ரயில்வே தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சென்னையில் 2,500 மாணவர்கள் தேர்வு எழுதினர். 75 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) `ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ் தேர்வு' என்ற சிறப்பு ரயில்வே தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் பிளஸ்-2 மாணவர்கள் ரயில்வே துறையின் இலவச பொறியியல் படிப்புக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
எழுத்துத் தேர்வு, ஆளுமைத் திறன் தேர்வு என 2 கட்டங்களை கொண்டது இந்த தேர்வு. இறுதியாக தேர்வு செய்யப்படும் 42 மாணவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு ரயில்வே பணிமனையில் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ரயில்வே ஸ்பெஷல் கிளாஸ் அப்ரண்டீஸ் தேர்வு ஞாயிற்றுக்கிழமை சென்னை, மதுரை, மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்பட நாடு முழுவதும் 41 முக்கிய நகரங்களில் நடந்தது.
சென்னையில் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி உள்பட 22 மையங்களில் ஏறத்தாழ 2,500 மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் தேர்வு எழுத 10,500 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் வெறும் 2,500 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் வரவில்லை. சூளைமேடு ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப் பள்ளி மையத்தில் 600 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 230 பேர் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர்.
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆளுமைத் திறன் தேர்வு நடத்தப்படும்.