இணைப்பிதழ்கள்

வாசு கோல் போடுவானா?

மித்ரா

மைதானம் முழுவதும் பரபரக்கிறது. பந்து வாசுவுடம் செல்லும்போது கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எதிரணியினர் பதற்றமாகிறார்கள். ஆவேசமாகப் பாய்ந்து வரும் ஆட்டக்காரர்களிடமிருந்து பந்தை விலக்கி எடுத்துக்கொண்டு போகிறான் வாசு. மிக லாவகமாகப் பந்தைத் தட்டிக்கொண்டு போகிறான். எதிரணியினர் விடவில்லை. அவனைச் சுற்றிலும் வியூகம் அமைத்துப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் தாண்டிப் பந்தைத் தன் வசம் கொண்டுவந்துவிட்டான் வாசு. இப்போது அவனுக்கும் கோல் கம்பத்திற்கும் நடுவே கோல்கீப்பரைத் தவிர யாரும் இல்லை.

வாசு கோல் போடுவானா? அவன் அணி கோப்பையை வெல்லுமா?

வாசுவின் உடல் அழகாக நகர்கிறது. அவன் தசைநார்கள் முறுக்கேறுகின்றன. பார்வை தெளிவடைகிறது. மனம் முழு கவனத்துடன் இருக்கிறது. அந்த நொடி உலகில் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. எதையும் அவன் மனம் நினைக்கவில்லை. அவன் மனம், புலன்கள் எல்லாமே அவன் கால் பாதமாக மாறியிருந்தன.

ஓங்கி ஒரு உதை. பந்து கோலுக்குள் சென்று தஞ்சமடைகிறது.

வாசுவின் உடலசைவுகள் கவிதைபோல இருக்கின்றன. சொற்களால் எழுதப்பட்ட கவிதை அல்ல. இது உடல் எழுதிய கவிதை. உடல் மொழியின் கவிதை.

அது நடந்து 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. வாசு என்கிற கே. வாசுதேவனுக்கு இப்போது 40 வயது. அவர் கம்ப்யூட்டர் புரோகிராமர். விளையாட்டைப் பற்றி அவரிடம் பேசிப் பாருங்கள். கண்களில் ஏக்கம் படரும். மெல்லிய சோகம் ததும்பும். "என் தொழில் பரவாயில்லை" என்கிறார். அவர் குரலில் முழு திருப்தி இல்லை. மேலும் துருவி கேட்டால் இப்படிப் பதில் வருகிறது: "இதைச் செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன்."

வேறு எதைச் செய்ய விருப்பமாம்?

வாசுதேவன் பெருமூச்சு விடுகிறார். "என் உடல். என் உடல் எனக்குக் கிடைத்த வரம். என் தசைகள். நான் செயல்படும் வேகம், அதெல்லாம் எனக்குத் திரும்பவும் கிடைத்தால்...? உடலுக்குச் சவாலான இருக்கும் ஏதாவது ஒன்றை நான் செய்வேன்" என்கிறார் இந்த முன்னாள் கால்பந்து வீரர்.

உடல் திறன் என்பது என்ன?

உடலின் இயந்திர ரீதியான திறமை. இதைத்தான் வாசுதேவன் குறிப்பிடுகிறார். இந்தத் திறமை, உடலின் இயக்கம், உடல் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் ஆகியவற்றில் உள்ள தேர்ச்சியுடன் தொடர்புகொண்டது. ஒரு இலக்கை அடைவதற்காக உடலை இயக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான திறமை.

உடலின் இயந்திரரீதியான திறமை பல விதங்களில் வெளிப்படும். போர் விமானத்தின் பைலட்டிற்கு விரைவாகப் பதிலடி தரும் திறமை தேவை. அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவரிடம் கண்ணுக்கும் கைக்கும் இடையிலான அபாரமான ஒருங்கிணைப்பு இருக்கும். நிதானம் தவறாத அவர் கைகளில் இது வெளிப்படும்.

சரிந்து விழும் ஒரு மரத்தின் வேதனையை ஒரு நாட்டியக் கலைஞர் நமக்குக் காட்டுகிறார். ஒரு நாடக நடிகை தன் உடலை இயக்கும் விதத்திலிருந்து, அவர் எதையோ பார்த்து மிரண்டு போயிருப்பது தெரிகிறது. இவர்கள் இருவரும் தமது உணர்ச்சிகளை, மனநிலையை, செய்தியைச் சொல்லத் தமது உடல்களைப் பயன்படுத்துகிறார்கள்.

உடல் வலிமையும் உடல்ரீதியாகத் தாக்கு பிடிக்கும் திறமையும் தேவைப்படும் தொழில்கள் நிறைய உள்ளன. இவற்றுக்கும் உடலின் இயந்திரரீதியான திறமை தேவை. விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கும் இந்தத் திறமை அதிகம் தேவை. இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை இயக்குவதற்கும் இது தேவை.

இயந்திரங்களின் செயல்முறைகளை நன்கு புரிந்துகொண்டு கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் இயல்பான திறமை கொண்ட பலர் இருக்கிறார்கள். இயந்திரங்கள், பல விதமான கருவிகள் ஆகியவற்றை இயக்கும் பணியில் இருக்கும் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் உடலின் இயந்திர ரீதியான திறமையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

வாசுவுக்கு அதெல்லாம் "திரும்பவும் கிடைத்தால் . . ." அவர் செய்யக்கூடிய தொழில்கள் என்னென்ன?

பாதுகாப்புப் பணிகள்: இந்தப் பணிகளுக்கு மிகச் சிறந்த உடல் திறன் தேவை. முப்படைகள் அடங்கிய ராணுவத் துறை இந்தப் பிரிவில் அடங்கும். துணை ராணுவப் படைகள், காவல் துறை ஆகியவையும் இந்தப் பிரிவுக்குள் வரும்.

புலனாய்வு மற்றும் பாதுகாப்பு: ஊழல் முதலான குற்றங்களைக் கையாளும் துறைகள் இவை. மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் துறை (RAW) போன்றவை இப்பிரிவில் வரும். தொழில் வளாகங்கள், அலுவலகங்கள் முதலானவற்றில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.

நிகழ்த்து கலைகள்: இவற்றுக்கும் சிறந்த உடல் திறன் தேவை. தேசிய நாடகப் பள்ளி (புதுதில்லி), நிருத்தியகிராம் (பெங்களூர்) போன்ற அமைப்புகள் பல்வேறு நிகழ்த்துகலைகளில் பயிற்சி அளிக்கின்றன. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நாட்டிய - நாடகத் துறை உள்ளது. பல்வேறு கலைகளில் பட்டப் படிப்பும் உள்ளது.

பிற: உடற்பயிற்சிகள் மூலம் சில விதமான நோய்களைக் குணப்படுத்தும் கின்ஸியாலஜி என்னும் துறை. வனவிலங்குகளைப் பாதுகாத்தல், வனங்களைப் பாதுகாத்தல் முதலான துறைகளுக்குச் சிறந்த உடல் திறன் கொண்ட இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்த்தல், ஃபிட்டிங், டர்னிங், வெல்டிங், மின் இணைப்பு, மருத்துவ ஆய்வுக்கூடப் பணியாளர்கள், கைவினைஞர்கள், தச்சு வேலை முதலான பணிகளில் தேர்ச்சி கொண்ட பலர் தேவைப்படுகிறார்கள். தொழில் பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் இவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக நம் சமுதாயத்தில் இதுபோன்ற வேலைகளுக்கு மரியாதை இல்லை. ஆனால், இதுபோன்ற தொழில்களுக்குத் தேவைப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

உடலின் இயந்திரரீதியான திறமை தேவைப்படும் தொழில்களுக்கு உடல் உழைப்பு வேண்டும். நீங்கள் உடல் உழைப்பை விரும்பக்கூடியவர் என்றால், மேற்கண்ட துறைகளில் சிறந்த வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளன.

நல்ல தொழில் என்பது அதில் எவ்வளவு ‘வாய்ப்பு’ உள்ளது, அதில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, எவ்வளவு சலுகைகள் கிடைக்கின்றன என்பதை வைத்து வரையறுக்கப்படுவதில்லை. ஒரு தொழில் உங்களுக்கேற்ற தொழில்தானா என்பதைத் தீர்மானிப்பவை உங்கள் ஆர்வமும் திறமையும்தான்.

அறிவியல் சமன்பாடுகளையும் கணிதச் சூத்திரங்களையும் கற்றால்தான் வாழ்க்கை என்பதல்ல. உடலை நன்றாக வைத்திருப்பவர்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், கலைகள், கைத்தொழில்கள் ஆகியவற்றில் தேர்ச்சி கொண்டவர்கள் இந்தத் திறமைகளை வைத்தே நிறைய சம்பாதிக்கலாம்.

SCROLL FOR NEXT