இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - இஸ்ரேலுடன் அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

இஸ்ரேலுடன் அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம்

இஸ்ரேல் நாட்டுக்குப் பத்தாண்டு கால ராணுவ உதவியை வழங்கும் 38 பில்லியன் டாலர் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா செப்டம்பர் 15-ம் தேதி வாஷிங்டன்னில் கையெழுத்திட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019-ம் ஆண்டு முதல் 2028 வரை நடைமுறையில் இருக்கும். அமெரிக்க நாட்டு அரசாங்கம் மற்ற நாடுகளுடன் இட்ட ஒப்பந்தங்களில் இதுதான் மிகப் பெரிது. இந்தப் பத்தாண்டு ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் இஸ்ரேல் நாட்டுக்கு 3.8 பில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்கும். ஏவுகணைத் தடுப்புத் தளவாடங்களை உருவாக்குவதற்காக 500 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். இந்த 38 பில்லியன் டாலர் ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்குமென்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்கர் ஆப்ரகாம் வர்கீசுக்கு விருது

அமெரிக்க வாழ் இந்தியரான மருத்துவர் மற்றும் நூலாசிரியருமான ஆப்ரகாம் வர்கீஸ், அமெரிக்காவின் கவுரவமிக்க நேஷனல் ஹியூமானிட்டிஸ் பதக்கத்திற்காகச் செப்டம்பர் 15 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மருத்துவத் தொழிலைப் பொருத்தவரை நோயாளிதான் மையம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவருவதற்காக அவருக்கு இந்தக் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. 61 வயதாகும் ஆப்ரகாம் வர்கீசின் பெற்றோர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எத்தியோபியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய போது அங்கே ஆப்ரகாம் வர்கீஸ் பிறந்தார்.

ஸ்டான்ட்ஃபோர்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மருத்துவத் துறையில் நோயாளி மீது மருத்துவர்கள் கொள்ள வேண்டிய பரிவுணர்வை அவர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். அமெரிக்க தேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நோக்கு மற்றும் புரிதலில் ஆழத்தை ஏற்படுத்தும் தனிநபர்களைக் கவுரவிப்பதற்காக வழங்கப்படும் விருது இது. வரலாறு, மொழி, தத்துவம், இலக்கியம் மற்றும் இதர மனிதவியல் (ஹியூமானிட்டிஸ்) துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் இந்தப் பதக்க நிகழ்வு 1997-ல் தொடங்கியது.

நேபாளப் பிரதமரின் பயணம்

நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசன வரைவு வரலாற்று வெற்றி என்று நேபாளத்தின் பிரதமர் பிரசந்தா செப்டம்பர் 16-ம் தேதி புதுடெல்லியில் தெரிவித்தார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த நேபாளப் பிரதமர் புஷ்பக் கமல் தாஹல் பிரசந்தா நேபாளத்தின் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது உட்படச் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராகப் பதவியேற்ற பிரசந்தாவின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது. நேபாளத்தின் அமைதிக்கு ஊக்கசக்தியாக இருப்பவர் பிரசந்தா என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.

ஐ.ஐ.எம்.களில் இடஒதுக்கீடு

ஐ.ஐ.எம்.களில் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடை அறிமுகப்படுத்தும் மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்திருப்பதாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 16-ம் தேதி, அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்.மில் இதைத் தெரிவித்தார். இந்த மசோதா குறித்து விவாதிப்பதற்காக ஐ.ஐ.எம்.களின் தலைவர்களையும் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.மின் இயக்குனர்களையும் டெல்லிக்கு அழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதுள்ள சூழ்நிலையில் ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு முறை இல்லை. ஐ.ஐ.டி. மற்றும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி போன்ற நிலையங்களில் ஆசிரியப் பணிக்கான தேர்வுமுறைகள் குறித்தும் தான் ஆய்வு செய்துவருவதாகத் தெரிவித்தார்.

பாராலிம்பிக்கில் இரண்டாவது தங்கம்

ரியோ டி ஜெனிரோவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஈட்டி எறி வீரர் தேவேந்திர ஜஜாரியா, தங்கம் வென்றார். இந்தியா சார்பாக இந்தப் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் இவர். கடந்த 2004-ம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்ற இவர் 62.15 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்தார். இந்தப் பாராலிம்பிக்கில் 63.97 மீட்டர் தூரம் எறிந்து தன் சாதனையையே முறியடித்தார். 35 வயதான தேவேந்திர ஜஜாரியா, ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், தனது ஒன்பதாவது வயதில் இடது முழங்கையை மின்சார விபத்தில் இழந்தவர்.

SCROLL FOR NEXT