2016-2017 நிதியாண்டில் இந்தியா முதன்முறையாகப் பெரிய மின்சார ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா 579.8 கோடி யூனிட்டுகளை பங்களாதேஷ், மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. பூட்டான் 558.5 யூனிட்டுகளை ஏற்றுமதிசெய்துள்ளது. இந்தியா அதைவிட 21.3 கோடி யூனிட்டுகளை ஏற்றுமதிசெய்து பெரும் ஏற்றுமதியாளர் ஆகியுள்ளது. 1980-களில் எல்லை தாண்டிய மின்சாரம் ஏற்றுமதி தொடங்கியது. இந்தியா, பூட்டானிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
பி.எஸ். 3 இருசக்கர வாகனங்களுக்குத் தடை
பி.எஸ். 3 (Bharat Stage III BS III) தொழில்நுட்பம் கொண்ட இருசக்கர வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் மதன் பி. லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது இருசக்கர வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்தும் விதத்தை இந்தியாவில் பி.எஸ். I, II, III என்று வகைப்படுத்துகிறார்கள். இதில் பி.எஸ். III தரக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம் மட்டும்தான் இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவின்படி இனி பி.எஸ். IV தரக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் ஆகிறது. இந்தச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. 8.24 லட்சம் பி.எஸ். 3 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள் இப்போது சந்தையில் இருக்கின்றன.
சந்தோஷ் கோப்பை: வென்றது மேற்கு வங்க அணி
கோவாவில் நடைபெற்றுவந்த சந்தோஷ் கோப்பை கால்பந்துத் தொடரை மேற்கு வங்க அணி வென்றது. கோவா அணியுடன் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்க அணி வெற்றிவாகை சூடியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மேற்கு வங்க அணி வீரர் மன்வீர் சிங் அடித்த கோல் இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது. 71-வது சந்தோஷ் கோப்பைக்கான போட்டி மார்ச் 12-ம் தேதி தொடங்கியது. இந்த சந்தோஷ் கோப்பையை மேற்கு வங்க அணி இதுவரை 32 முறை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அதிக முறை சந்தோஷ் கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற புதிய சாதனையும் படைத்துள்ளது. கடைசியாக 2011-ல் வென்றது. கோவா அணி கடைசியாக 2009-ல் கோப்பையைக் கைப்பற்றியது. 1941-லிருந்து இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.
உலகின் பிரம்மாண்டமான செயற்கைச் சூரியன்
உலகின் மிகப் பெரிய செயற்கைச் சூரியனை ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தேன் தட்டு போன்ற அமைப்பில் 149 ஸ்பாட் விளக்குகளைக் கொண்டு இந்தச் செயற்கைச் சூரியன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை சினிமாக்களில் இரவு நேர படப்பிடிப்பின்போது பகல்போல் காண்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஸ்பாட் விளக்குகள். இந்தச் செயற்கைச் சூரியனுக்கு சைன்லைட் (Synlight) எனப் பெயரிட்டுள்ளனர். இந்த விளக்குகளின் முக்கிய நோக்கம் ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பதுதான். பூமியில் ஹைட்ரஜன் மிக அரிதான பொருளாக உள்ளது. நீரில் இருந்துதான் ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைச் சூரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மனித வள மேம்பாட்டில் 131வது இடம்
ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகள் மனித வள மேம்பாட்டில் எடுத்துக்கொள்ளும் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. 188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 131-ம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. சார்க் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.
மாலத்தீவும் இந்தியாவும் அடுத்த இரு இடங்களில் உள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. ரஷ்யா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் நாடுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இந்தியா பெற்றுள்ள புள்ளிகள் 0.624. இது இந்தியா 1990-ம் ஆண்டின் மனித வளம் மேம்பாட்டுப் புள்ளிகளை (0.428) விட அதிகம். இந்தியர் இறப்பு விகிதம் 68 வயதிலிருந்து 68.3 ஆக அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி துணை சட்ட வரைவுகள் நிறைவேறின
மக்களவையின் ஜி.எஸ்.டி. சட்டத்தின் துணை சட்ட வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருகிறது. மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (The Central Goods and Service Tax Bill), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (The Integrated Goods and Service Tax Bill), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (The Union Territory Goods and Service Tax Bill) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா (Goods and Service Tax Bill – Compensation to the states) என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.