இணைப்பிதழ்கள்

பணி வாழ்க்கை: என் வேலை என்னவாகும்?

ம.சுசித்ரா

பணப் பரிமாற்றம் முதற்கொண்டு அனைத்தையும் டிஜிட்டல் மையமாக்கும் நிலைக்கு இன்றைய இந்தியா உந்தி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் ஒரு புறம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிற உத்தரவாதம் தரப்படுகிறது. ஆனால் ‘டிஜிட்டல் யுகத்தின்’ அங்கமான தானியக்கம் (automation) பலரின் தற்போதைய வேலையைப் பறித்துவிடும் எனச் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு உட்படப் பல அமைப்புகளும் சமூக-பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

நான்காம் தொழில் புரட்சியா?

“தொழில் புரட்சியின் ஆரம்பக் காலகட்டத்தில் மனிதர்கள் எந்திரங்களை இயக்கி அதன் மூலம் வேலைப் பளுவை குறைத்துக்கொண்டனர். ஆனால், இன்றோ மனிதர்களின் இடத்தை எந்திரங்கள் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன” என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணரும் தற்போது ஐ.சி.எஃப்.ஏ.ஐ. உயர் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான சி.ரங்கராஜன் கடந்த வாரம் ஹைதராபாத்தில் ஒரு கூட்டத்தில் பேசினார்.

இவருடைய கூற்றை உறுதிப் படுத்தும் விதமாகக் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாடு 2016-ன் அறிக்கை வெளியானது. “நாம் நான்காவது தொழில் புரட்சியை எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம். அதனால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள்” என அது எச்சரித்தது. இன்று ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைக்கும் குழந்தைகளில் 65 சதவீதத்தினர் பணிக்குச் செல்லும் வயதை எட்டும்போது அவர்கள் செய்யப்போகிற வேலையின் தன்மை முற்றிலும் புதிதாக இருக்கும் எனவும் அது அறிவித்தது. கடந்த ஆண்டு உலகப் பொருளாதார மாநாட்டில் அடிக்கப்பட்ட அபாய மணியின் ஓசை இப்போது நமது இந்தியக் காதுகளில் ஒலிக்கிறது. பணிச் சூழலிலும் பணியாளர்களின் நிலையிலும் ஊகிக்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் நான்காம் தொழில் புரட்சி நெருங்கிவிட்டது.

கடந்த ஆண்டு வேலை தேடிய 18-29 வயது வரம்பைச் சேர்ந்தவர்களில் 38 சதவீதத்தினருக்கு விவசாயம், வனவியல், மீன்வளம் ஆகிய துறைகள் வேலை அளித்தன. அதற்கு அடுத்தபடியாக சில்லறை வர்த்தகம் மற்றும் மொத்த வியாபாரம், மோட்டார் வாகன பழுதுபார்த்தல், போக்குவரத்து, உணவு சேவைகள், தகவல் தொடர்பு ஆகிய துறைகள் 19.4 சதவீதத்தினரைப் பணியில் அமர்த்தின. ஆனால், தகுதி இருந்தும் 13.2%-தினருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை என்கிறது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு. ஏன் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை? இனிவரும் காலங்களில் என்னவாகும்? எந்தெந்த துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஆபத்து?

கால் சென்டர் ஊழியர்கள்

20 மொழிகள் பேசக்கூடிய செயற்கை அறிவில் இயங்கும் அமீலியா (Amelia) என்னும் புதிய கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கால் சென்டர் ஒன்றில் இதைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் ஊழியர்களைக் கவனித்துத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு 30 சதவீத ஃபோன் கால்களை அமீலியா கையாண்டதாம். இதுபோன்ற மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களால் 2025-ம் ஆண்டு வாக்கில் உலகெங்கிலும் உள்ள இத்துறை சார்ந்த பணியாளர்களில் 25 கோடி பேரின் வேலை பறிபோகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள்

இன்றும் இந்தியாவின் 50 சதவீதத்தினர் வேளாண்மையைத்தான் ஆதார வாழ்க்கைப் பணியாக கொண்டுள்ளனர். ஆனால், நிலம், எந்திரங்கள், ரசாயன உரம், விதைகள் ஆகியவற்றின் விலைவாசி பன்மடங்காக அதிகரித்துக்கொண்டேபோகிறது. அதேபோல விவசாயத் தொழிலாளர் களின் இடத்தைத் தொழில்நுட்ப எந்திரங்கள் பிடித்துக்கொள்கின்றன. இதனால் நில உரிமையாளர்களும் தனியார் அமைப்புகளுமே வேளாண்மையை ஆட்கொள்ளும் காலம் வரக்கூடும்.

தொழிற்சாலை ஊழியர்கள்

ஜப்பானின் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் ஆறு ஊழியர்களுக்கு ஒரு ரோபோட் என்கிற வீதம் வந்துவிட்டது. அதிவேகமாகவும், திறம்படவும் செயல்படுவது மட்டுமல்லாமல் அவற்றின் விலையும் நாளுக்குநாள் மலிவாகிக் கொண்டேபோகிறது. இவை வெறும் ரோபோட்கள் அல்ல, எந்திர ஊழியர்கள்!

செய்தி நிருபர்கள்

செய்திகளைச் சேகரித்துத் தரும் மென்பொருள் தளமான வர்ட்ஸ்மித்தைக் (Wordsmith) கொண்டு அசோசியேட் பிரஸ் என்கிற அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஏற்கெனவே இயங்கிவருகிறது. ஆக, முக்கியச் செய்திகளைச் சேகரிக்கும் வேலையை மென்பொருள்களே செய்துவிடும். ஆழமான, அலசல் கட்டுரைகளைப் பிரசவிக்கும் செய்தியாளர்களைத்தான் இனிப் பிரசுரங்கள் தேடும்.

வரவேற்பாளர்கள்

ரோபோட்களை வரவேற்பு ஊழியர்களாக (Hospitality workers) முதன்முதலாக நியமனம் செய்துள்ளது ஜப்பான் நாகசாகியில் உள்ள ‘தி ஹென்னா’ ஹோட்டல். இதேபோல தொடு திரை (Touch screen) கணினிகளை உணவு மேஜையிலேயே பொறுத்துவது, ரோபோட் வெய்ட்டர் அல்லது தானாக உணவு பரிமாறிக்கொள்ளும் முறை போன்ற பல சோதனை முயற்சிகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் ரிஸப்ஷனிஸ்ட் என்கிற வேலை காணாமல்போகும்.

இதே போன்று காசாளர், வாகன ஓட்டுநர், கணக்காளர், ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கை குறைந்துபோகும் அபாயம் உள்ளது.

அப்படியானால் எங்கே நமது எதிர்காலம்? இனி வரும் காலத்தில் பாதுகாப்பு- விமானப் போக்குவரத்து- விண்வெளி ஆராய்ச்சி, இயற்கை எரிசக்தி, ஆரோக்கியம்- மருந்து-உயிரித் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகள்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் எனப் பன்னாட்டு நிறுவனமான காக்னிஸண்ட்டின் துணைத் தலைவர் லக்ஷ்மி நாராயணன் சுட்டிக்காட்டியுள்ளார். இது சரியான கணிப்பாகக்கூட இருக்கலாம்.

ஆனால் எதுவாக இருந்தாலும், மனிதனுடைய இடத்தை எந்திரங்கள் பறித்துக்கொள்வது அபாயகரமானது. காந்தியடிகள் சொன்னதுபோல, “மேம்படுத்தப்பட்ட கலப்பை சிறப்பானதுதான். ஆனால் ஒரு தொழில்நுட்பக் கலப்பையாது ஒட்டுமொத்த இந்திய விளைநிலங்களையும் உழுது விடுமானால், ஆயிரக்கணக்கானோர் வேலை இன்றி தவித்து, கடைசியில் பட்டினியால் செத்து மடிவார்கள்”.

SCROLL FOR NEXT