இணைப்பிதழ்கள்

ஓவியமே வாழ்க்கைத் துணை

நா.ரேணுகா தேவி

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியின் மதில் சுவரோரம் அந்தத் தாத்தா உட்கார்ந்து வரைந்துகொண்டிருக்கிறார். பாராட்டு, பணம் எதையுமே எதிர்பாராமல் வரைவதில் மூழ்கிக்கிடக்கிறார். வழிப்போக்கர்கள் அவரைக் கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர். ஆனால் பள்ளிக் குழந்தைகள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்.

ஓவியர் தாத்தா மணி வரையும் ஓவியங்கள் வித்தியாசமானவை. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து வரையாமல் தமிழ் வாக்கியங்களைக் கொண்டு கடவுளர்களின் ஓவியங்களை வரைகிறார். அதிலும் பகவத் கீதை, குர்ஆன், விவிலியம் (பைபிள்) ஆகியவற்றிலிருந்து அவருக்குத் தெரிந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வரைகிறார். எம்மதமும் சம்மதமே என்பதை அவருடைய ஓவியங்கள் காட்சிப்படுத்துகின்றன.

தெருவோரத் திறமை

திருநெல்வேலியைச் சேர்ந்த மணி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுபிராயத்திலிருந்தே ஓவியத்தில் நாட்டம். பள்ளிப் படிப்பின்போது வீட்டுப் பாடத்தை விளையாட்டாகச் சுருக்கெழுத்தில் எழுத ஆரம்பித்தார். 10-ம் வகுப்பு வரை படித்தார். ஆனால் அப்பாவின் திடீர் மரணம் மணியையும் ஆவருடைய அம்மாவையும் பிழைப்பு தேடிச் சென்னைக்குத் தள்ளியது. அதிலும் அம்மாவின் உடல் நலக் குறைவால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வேறுவழியின்றித் தெருவோரம் அடைக்கலம் தேடினார் மணி.

இப்போது மணியின் வாழ்க்கைத் துணை அவருடைய ஓவியங்கள் மட்டுமே. வரைவதும் உண்பதும் உறங்குவதும் பள்ளி வளாகத்துக்கு வெளியேதான். “வேடிக்கை பார்க்கும் சிலர் என் படங்களை வாங்கிக்கொண்டு சில்லறை தருவார்கள். அதை வைத்து எதிரில் இருக்கும் டீக்கடையில் ஏதேனும் வாங்கிச் சாப்பிடுவேன்.

ஆனால் பள்ளிக் குழந்தைகள் என் படங்களை விரும்பி வாங்குகிறார்கள். அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நானும் உற்சாகமாக வரைந்து கொடுப்பேன். இந்தக் குழந்தைகள் எனக்கு நெருக்கமாகிவிட்டதால் இந்த இடத்தை விட்டுச் செல்ல மனம் இல்லை. இங்கேயே தங்கிவிட்டேன்” என்கிறார் எளிய மனிதரும் அற்புத ஓவியருமான மணி.

          
SCROLL FOR NEXT