மக்கள் கிளர்ச்சிகளால் உருவான பாதுகாப்புப் பிரச்சினைகளை மட்டுமே 1990-கள் வரை வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், திரிபுரா, சிக்கிம் ஆகியவை எதிர்கொண்டுவந்தன. அதன் பிறகு அப்பகுதிகளைத் தனது கிழக்கு நோக்கிய கொள்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு பயன்படுத்தத் தொடங்கியது. மியான்மர் வழியாகத் தெற்காசியப் பகுதிகளில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகியவற்றில் தொடங்கிச் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுடன் வணிகரீதியான உறவை வலுப்படுத்தும் கொள்கை தீட்டப்பட்டது.
இந்தக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமெனில் இப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி மையங்களை உருவாக்குவது, அதற்கான மின்வசதி, போக்குவரத்து ஆகிய கட்டமைப்புகளை வலுப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய உற்பத்தி மையங்களால் இப்பகுதியில் அதிக அளவிலான வேலைகளை உருவாக்கி, இளைஞர்களைப் பயங்கரவாதச் செயல்களி லிருந்து விலக்கி, அமைதியை நிலைநாட்ட முடியும் எனவும் நம்பப்படுகிறது.
வளமும் வசதிகளும்
இம்மாநிலங்களில் இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற கனிமங்கள், மூலிகைகள், பல்வகைப் பழங்கள், மூங்கில் போன்றவை நிறைந்துள்ளன. இங்குள்ள பருவநிலையும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி முழுவதுமுள்ள பெரும் நதிகளை ஆற்றுப்படுத்தி மிகக் குறைந்த செலவிலான நீர்வழிப் போக்குவரத்தை நிறுவுவதன் மூலம் உற்பத்திப் பொருட்களை வங்கதேசம் வழியாகத் தெற்காசியாவுக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும். தற்போது உள்நாட்டு சிக்கல்கள் எதுவுமின்றி, வங்கதேசத்துடன் மிகச் சுமூகமான அணுகு முறையுடன் செயல்பட்டு வருகிறது திரிபுரா. அம்மாநிலத்தில் உள்ள கொமிலா எல்லை வழியாக வங்கத் தேசத்தின் துறைமுகமான சிட்டகாங்கை எளிதாக அடைய முடியும்.
தரைவழிப் போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மியான்மருடன் எல்லையைக் கொண்டுள்ள நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகியவற்றின் மூலம் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும். எனினும் இதற்குச் சாலை, ரயில் போக்குவரத்து வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்பட வேண்டும்.
ஈர்க்கும் விதத்தில்
வடகிழக்குப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் உள்ள பழங்குடிகளின் வாழ்க்கையோடு இசையும் நடனமும் இரண்டறக் கலந்தவை. இங்குள்ள ஒவ்வொரு பழங்குடி இனமும் ஆண்டு முழுவதும் எண்ணற்ற திருவிழாக்களை நடத்துகின்றன. இந்தப் பண்பாட்டு மையங்களைப் பரவலாக அறிமுகப் படுத்துவதன் மூலம் மேற்கு நாடுகளில் இருந்து கணிசமான சுற்றுலா பயணிகளைக் கவர முடியும். பாரம்பரியமான இந்து, கிறிஸ்தவ, புத்த, இஸ்லாமிய மையங்கள் இப்பகுதி முழுவதும் பரவிக் கிடக்கின்றன. குறிப்பாக அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள புத்த மடாலயங்கள் சீனா, ஜப்பான் போன்ற புத்தமதத்தைப் பின்பற்றுவோரைக் கவர்ந்திழுக்கக் கூடியவை. இயற்கையாகவே சுற்றுலாத் துறை வேறெந்தத் துறையையும்விட அதிகமான மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது. இதற்கான தேவை முறையான போக்குவரத்து வசதிகள் மட்டுமே.
ஆண்டுக்குச் சுமார் 2 கோடி டன் மூங்கிலை உற்பத்தி செய்யும் இப்பகுதியைப் பயன்படுத்திக் கணிசமான அளவில் காகித உற்பத்தியைப் பெருக்க முடியும். கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியும் இதன் மூலம் சாத்தியமாகும். அதைப் போன்றே இங்குக் காணப்படும் அரிய வகை மூலிகைகளைப் பயன்படுத்தி உயிர்காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான வசதிகளையும் உருவாக்க முடியும். தற்போது திரிபுராவில் ரப்பர் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ற பருவநிலையும் இப்பகுதியில் உள்ளதால் இவற்றைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வளங்களைப் பாதுகாத்து வளர்வோம்!
எனினும் நாட்டின் மற்றப் பகுதிகளில் நடப்பதைப் போல் இப்பகுதியின் இயற்கை வளங்களை முற்றிலுமாகச் சூறையாடாது உரிய பாதுகாப்பு, மறுசுழற்சி ஏற்பாடுகளுடன் இந்த உற்பத்தி முயற்சிகள் செயல்பட வேண்டியதும் அவசியமாகும். அவ்வகையில் ஏற்றுமதிக்கான உற்பத்தி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் அரசுத் துறையில் உருவாவதே பொருத்தமானதாக இருக்கும்.
இதற்கான திட்ட முன்வடிவுகள் அங்குள்ள மக்களின் ஆலோசனையோடு, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரியப் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதாகவும் இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். குறிப்பாக இப்பகுதியில் பரவியுள்ள பழங்குடிகளின் சுயாட்சி அமைப்புகளைக் கொண்டே இவற்றை மேற்கொள்வது அவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளில் அவர்களும் இணைய வழிவகுக்கும்.
தற்போது வங்காள விரிகுடா பகுதியைச் சேர்ந்த நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் அமைப்பு என்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. வங்கதேசம், நேபாளம், பூட்டான், மியான்மர் ஆகிய வடகிழக்குப் பகுதியின் எல்லை நாடுகள் இதில் அங்கம் வகிக்கும் நிலையில் இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த முயற்சி சிறப்பாக உதவும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஏனைய இந்தியப் பாரம்பரியத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத இப்பகுதி மக்களின் செயல்பாடுகளோடு அவர்கள் கலாச்சார, மொழிரீதியாக நெருங்கிய உறவு கொண்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களுடன் இணைப்பது மிகவும் எளிதான ஒன்று என்ற நிலையில், இப்பகுதியின் முன்னேற்றத்தையும் அதனோடு இணைப்பது பொருத்தமானதாகவே அமையும். மத்திய அரசின் கிழக்கு நோக்கிய கொள்கை, வடகிழக்கு தொலைநோக்கு 2020, பிம்ஸ்டெக் போன்ற பல திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு இப்பகுதியின் பன்முனை வளர்ச்சியே அடித்தளமாக அமையும்.