மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் சில புதிய சீர்திருத்தங்களைத் தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டில் (2017-18) பதினோராம் வகுப்பைப் பொதுத் தேர்வாக அறிவித்திருப்பது அதில் முக்கியமான சீர்திருத்தமாகப் பார்க்கப்படுகிறது. பிளஸ் ஒன், பிளஸ் டூ ஆகிய இரண்டு வகுப்புக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் 2019ம் ஆண்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மேல்நிலைக் கல்வியின் பாடத்திட்டத்தைத் திருத்தியமைக்க முடிவெடுத்துள்ளது. ஏழு ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களும் திருத்தி அமைக்கப்படும்.
மாணவர்களின் சுமையைக் குறைக்க, மேல்நிலை வகுப்புகளின் மதிப்பெண்கள் 1200-லிருந்து 600-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் தேர்வு நேரமும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாகக் குறையும். ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைப் பின்பற்றித் தமிழ்நாடு அரசும் தற்போது பதினொன்றாம் வகுப்பைப் பொதுத்தேர்வாக அறிவித்திருக்கிறது.
கால்நடை இறைச்சிக்குப் புதிய கட்டுப்பாடு
கால்நடைச் சந்தைகளில் காளை, பசு, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் மே 26-ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டது. கால்நடை வர்த்தகத்தை நெறிப்படுத்துவதற்காகவும், விலங்குகள் வதையைத் தடுப்பதற்காகவும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்கிறது மத்திய அரசு. இதனால், நாடு முழுவதும் சட்டரீதியாக இயங்கிக்கொண்டிருக்கும் இறைச்சிக் கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் இந்தப் புதிய ‘கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை விதிகள்’ கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி அனைத்துக் கால்நடைச் சந்தைகளும் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் கால்நடைச் சந்தைக் குழுவிடம் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கால்நடைகளுக்கான குறைந்தபட்சக் கட்டமைப்பு வசதிகளைப் பதிவுசெய்யும் சந்தைகள் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், கால்நடைகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் அவை இறைச்சிக்காக வாங்கப்படவில்லை என்பதை எழுத்து மூலமாக உறுதிப்படுத்த வேண்டும்.
புதிய துணைவேந்தர்கள் நியமனம்
தமிழக அரசு சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என இரண்டு பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணை வேந்தர்களை மே 27-ம் தேதி நியமித்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பி. துரைசாமியும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பி.பி. செல்லதுரையும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமனத்தில் செய்திருக்கும் சட்டத் திருத்தம் பற்றியும் விளக்கினார்.
“இந்தப் புதிய சட்டத் திருத்தம் மாநிலத்தில் இருக்கும் பன்னிரண்டு அரசு பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தும். 3-5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவும் புதிய துணைவேந்தர்கள் தேடல் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும். ஓய்வுபெற்ற நீதிபதியோ ஓய்வுபெற்ற துணைவேந்தரோ இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள். துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதம் முன்னர் தேடல் குழு அமைக்கப்படும். நான்கு மாதங்களுக்கு இந்தக் குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும். அப்படி முடியாதபட்சத்தில் அந்தக் குழுவுக்குக் கூடுதல் நேரம் வழங்குவது பற்றியும், குழுவைக் கலைப்பது பற்றியும் ஆளுநர் முடிவெடுப்பார்” என்றார் அன்பழகன். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
3டி-ல் அச்சடிக்கப்பட்ட ஏவுகணை
நியூசிலாந்தைச் சேர்ந்த ‘ராக்கெட் லேப்’ என்ற நிறுவனம், பேட்டரியில் இயங்கும் ‘எலெக்ட்ரான்’ என்ற 3டி-யில் அச்சடிக்கப்பட்ட ஏவுகணையை வடிவமைத்துள்ளது. மே 25-ம் தேதி மஹியா பெனின்சுலாவில் இருந்து இந்த ஏவுகணை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சிலிகான் பள்ளத்தாக்கின் நிதி உதவியோடு செயல்பட்டுவரும் ‘ராக்கெட் லேப்’ விண்கலம் செலுத்தும் நிறுவனத்தின் இந்த முயற்சி குறைவான செலவில் வெற்றிகரமான ஏவுதலைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
இது வருங்காலத்தில் விண்வெளிப் பயணத்துக்கான நிதி, வணிகப் போட்டி உள்ளிட்ட பல்வேறு தடைகளை உடைக்க உதவும். அத்துடன், நியூசிலாந்து குறைந்த செலவில் விண்வெளி மையம் அமைப்பதற்கான இடமாக மாறவிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஒவ்வொரு முறை ஏவுகணைகளை அனுப்பும்போதும் கப்பல், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால், நியூசிலாந்தில் இருந்து அனுப்பும்போது இந்தப் பிரச்சினை இல்லை. ஏனென்றால், நியூசிலாந்தின் தெற்கே அண்டார்ட்டிகா மட்டுமே இருக்கிறது. அதனால் வடக்கிலிருந்து தெற்குப் பாதையில் செயற்கைக்கோள்களை அனுப்ப நியூசிலாந்து பொருத்தமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் இருக்கும் முப்பது சிறிய செயற்கைக்கோள் நிறுவனங்களில் ‘ராக்கெட் லேப்’ நிறுவனமும் ஒன்று. நாசா, ‘பிளானெட்’ (Planet), ‘மூன் எக்ஸ்பிரஸ்’ (Moon Express), ‘ஸ்பைர்’ (Spire) உள்ளிட்டவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
இந்தியாவின் நீளமான பாலம்
இந்தியாவின் நீளமான நதி பாலமான ‘தோலா - சதியா’ பாலத்தை மே 26 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். அசாம் - அருணாசலப் பிரதேசம் மாநிலங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஆறு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக இந்தப் பாலம் குறைக்கும். பிரம்மபுத்திரா நதியின் துணை நதியின்மீது 9.15 கி.மீ. நீளத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பாலத்துக்கு அசாமின் பிரபலப் பாடகரும் கவிஞருமான ‘புபென் ஹஸாரிகா’வின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
“இந்தப் பாலம் இந்தியாவின் முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்று” என்றார் மோடி. அத்துடன், அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ், விவசாய ஆய்வு மையம் ஆகிய இரண்டு திட்டங்களையும் தொடங்கிவைத்தார். அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாலம் ரூ. 2,056 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அசாமின் சதியா நகரையும், அருணாசலப் பிரதேசத்தின் தோலா கிராமத்தையும் இணைக் கிறது. மும்பையில் அமைந் திருக்கும் பாந்த்ரா-வர்லி கடல் இணைப்பைவிட இந்தப் பாலம் 3.55 கி.மீ. நீளமானது.
முதன்முறையாக ஆப்பிரிக்கத் தலைமை
உலக சுகாதார நிறுவனத்துக்கு முதன்முறையாக ஆப்பிரிக்கத் தலைமை கிடைத்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதனோம் கெப்ரிசஸ் (Tedros Adhanom Ghebreyesus) வரும் ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநராகப் பதவியேற்கவிருக்கிறார். இதற்கு முன்பு, எத்தியோப்பிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராகவும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநராக நீடிப்பார். அதிகாரம் செலுத்துதல், திறமையற்ற நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களுக்காகக் கடுமையான விமர்சனங்களை உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே எதிர்கொண்டிருக்கிறது.
அத்துடன், இவருக்கு முன்பாக 10 ஆண்டுகளாகப் பதவி வகித்தவர் மார்கரேட் சன். அவருடைய தலைமை எபோலா தொற்றுநோயை மோசமாகக் கையாண்ட விதத்துக்காகத் தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் சீர்திருத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் இந்நேரத்தில் டெட்ரோஸ் தலைமை ஏற்றிருப்பது பல தரப்பினரையும் கவனிக்க வைத்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் டேவிட் நபாரோவை எதிர்த்துத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார் டெட்ரோஸ்.