பொதிகை தொலைக்காட்சி மற்றும் ‘தி இந்து’ இணைந்து வழங்கும் இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு விழா கட்டுரைப் போட்டி முடிவுகள்
எம். எஸ்.சுப்புலட்சுமிக்கு இசை பக்தியால் ஏற்றம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். இவர் 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு, வங்க மொழி, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். பல நாடுகளில் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
இசையுலகில் காலடி
சுப்புலட்சுமிக்கு அவரது தாயாரே முதலில் குருவானார். 8 வயதில், ‘மரகத வடிவம்’ என்ற பாடலை இவர் பாடினார். செம்மங்குடி சீனுவாச ஐயர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற இசையுலக முன்னோடிகளின் இசையால் ஈர்க்கப்பட்டார். இவரின் முதலாவது இசைத்தட்டு 1926-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திபிள்ளையின் மணிவிழாவில் பாடியபோது சுப்புலட்சுமியின் திறனை வெளி யுலகம் அறிந்தது. அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் இவர் கச்சேரி செய்தார்.
சினிமாவினுள் பிரவேசம்
அந்தக் காலத்தில் பாடகிகள்தான் நடிகைகளாக நடித்தார்கள். இவரின் இனிமையான குரலால் ‘சேவாதனம்’ படத்தின் நாயகியாக நடிக்க வைத்தனர். அப்போது அவர் பாடியதில் ‘ஆதரவற்றவர்க்கெல்லாம்’, ‘இஹபரமெனுமிரு’ ஆகிய பாடல்கள் மிகப் பிரபலமானவை.
அதனைத் தொடர்ந்து ‘சகுந்தலை’ படத்தில் ‘மிகக் குதூகலிப்பதும் ஏனோ’, ‘எங்கும் நிறைந்த நாதப் பிரம்மம்’, ‘பிரேமையில் யாவும் மறந்தேனே’ போன்ற பாடல்கள் புகழ் பெற்றவை. இப்படத்தில் ‘கோகிலகான இசைவாணி’ என விளம்பரம் செய்யப்பட்டார்.
1945-ம் ஆண்டு வெளியான ‘பக்த மீரா’ திரைப்படத்தில், ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’ போன்ற பாடல்கள் பிரபலமானவை.1944-ல் நான்கு இசை நிரகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இசையால் சாதனை நிகழ்த்தினார் எம்.எஸ்.
- எஸ்.திக்விஜய் ஒன்பதாம் வகுப்பு,
லயன்ஸ் மெட்ரி மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி.
எம். எஸ்.சுப்புலட்சுமிக்கு தேச பக்தியால் ஏற்றம்
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணி வாக்கிற்கிணங்க கர்னாடக இசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரவச் செய்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்பு லட்சுமி. பத்து வயதில் அவருடைய குரலைக் கேட்ட ‘டுவின்’ இசைத்தட்டு நிறுவனம் இவரது பெயரில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்’ என்ற இசைத்தட்டை வெளியிட்டது.
தேசப்பற்று
இவர் முதல்முறையாக 1938-ம் ஆண்டு கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் ‘சேவாதசதனம்’ என்ற படத்தில் நடித்தார். அப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு பிராமணரின் பூணூலை அறுத்து எறியும் காட்சி இருந்தது. அதைக் கண்டதால் பெரும் பரபரப்பு மக்களிடம் ஏற்பட்டது. அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பதற்காக 1924-ம் ஆண்டு மதுரையில் ‘சகோதரிகள் சங்கம்’ உருவானது. அது கதர் உற்பத்தியை பெருக்குவதற்காக சுப்புலட்சுமி மற்றும் பலரால் உருவாக்கப்பட்டது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி தேசப் பற்றைப் பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார். இவரது ‘பாரத தேசமென்று’, ‘வந்தே மாதரம்’ போன்ற பாடல்களைக் கேட்கும்போது தேசபக்தி ஊற்றெடுக்கும். ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றும் ‘கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்றும் தேச ஒற்றுமையை மிக அழகாகப் பாடியுள்ளார்.
பத்மபூஷன், சங்கீத கலாநிதி, பாரத ரத்னா முதலான பல விருதுகளைப் பெற்ற இவர் மண்ணை விட்டு மறைந்தாலும், நம் மனதை விட்டு மறையவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அவரிடம் வெளிப்பட்ட தேச பக்தியே!
- பா.மயில்சங்கர், எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயர்வுக்குக் காரணம் இறை பக்தியே
‘இசையின் ராணி’ என்று பலரின் புகழாரத்திற்கு உரியவர் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி. கல்லும் கனியும் தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரரான இவர் பாடிய திரைப்பாடல்கள் மற்றும் தேசபக்திப் பாடல்கள் இவரது முன்னேற்றத்துக்குத் துணை செய்தபோதிலும், அவர் கடவுளுக்குச் செய்த சேவையே அவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது. அதற்கான சான்றுகள் சிலவற்றைப் பின்வருமாறு காணலாம்.
அயல்நாட்டில் அரங்கேற்றம்
1977-ல் பிட்ஸ்பர்க்கில் இருக்கும் திருமலையான் கோவிலுக்கும், நியூயார்க்கில் இருக்கும் கோயிலுக்கும் நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவில் அவர் அரங்கேற்றம் செய்தார். நிகழ்ச்சி நிறைவுபெற்றதும் இறை பக்தி நிறைந்த அவரது இன்னிசைக்கும் கிடைத்த பெருமையும், புகழும் வேறு எதிலும் பெற்றிருக்க முடியாது.
மீராவுக்கு கண்ணனின் அருள்
1945-ல் ‘பக்த மீரா’ திரைப்படத்தில் கிருஷ்ண பக்தை மீராவாக எம்.எஸ்.நடித்தார். இப்படத்தில் இடம்பெறும் பக்திப் பாடல்களான, ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘கிரிதர கோபாலா’, ‘பிருந்தாவனத்தில் கண்ணன்’ இன்றும் அனைவரின் செவிகளிலும் ஒலிக்கின்றன. தனது மெல்லிய குரலில், ‘காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் காற்றினிலே வரும் கீதம்’ என்று அழகாகப் பாடியிருப்பார்.
இந்தி மொழியில் ‘மீரா’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு வடநாட்டில் அறிமுகம் செய்தபோது, அன்றைய பிரதமர் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபு தம்பதியினர், கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவரது பக்தி நிறைந்த இசையைக் கேட்ட நேரு, “இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர்தானே” என்று புகழ்ந்து சிறப்பித்தார். பின் எம்.எஸ். குரலில் பதிவு செய்யப்பட்டு வெளிவந்த ‘மீரா பஜன்கள்’ இந்தியாவில் உள்ள அனைவரின் மனதிலும் எம்.எஸ். அவர்களுக்கு உயர்ந்த அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
மகாத்மா எம்.எஸ்.ஸிடம் வேண்டியது
காந்தியடிகள் தனக்குப் பிடித்த கீர்த்தனைகளுள் ஒன்றான ‘ஹரி தும் ஹரோ’வைப் பாடிப் பதிவு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். மேலும் ‘குறையொன்றும் இல்லை’ என அவர் பாடியது இன்றும் பலரது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பெருமாள் மீது கொண்ட பக்தி
கல்கி நாளிதழை நடத்திவந்த எம்.எஸ். அம்மையாரின் கணவர் சதாசிவத்துக்கு ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அவர்கள் வாழ்ந்து வந்த கல்கி எஸ்டேட்டை விற்க நேர்ந்தது. அப்போது வள்ளுவர் கோட்டத்தில் வாடகை வீட்டில் குடியிருந்த அவர்களிடம் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகளைப் பாடித் தருமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டது.
இந்த நிகழ்வு எம்.எஸ். அவர்களின் வாழ்வை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. இவரது இறை பக்தியைப் பறைசாற்றும் வகையில் திருப்பதியில் அவருக்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- ஜெ.செளமியா, பிகாம் இரண்டாம் ஆண்டு,
ஏ.வி.பி. கலை அறிவியல் கல்லூரி, திருப்பூர்.