ஏப்ரல் 23 உலக புத்தக தினம்
உலகில் அதிகம் விற்ற புத்தகம் எது என்று கேட்டால், உடனே பெரும்பாலோர் சொல்லும் பதில் ‘பைபிள்’ என்பதாகவே இருக்கும். உலகில் பல மொழிகளில் முதலில் அச்சிடப்பட்ட நூல் என்ற பெருமையும் பைபிளுக்கு உண்டு. இதுவரை 390 கோடிப் பிரதிகள் விற்றுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால், அது மதம் சார்ந்த நூலாக இருப்பதால், அதிகம் விற்ற ‘புத்தகங்களுக்கு’ உருவாக்கப்படும் பல்வேறு பட்டியல்களில் அது இடம்பெறுவதில்லை.
எவற்றுக்கு முதலிடம்?
மொழிகளை அடிப்படையாகக் கொள்ளாமல் அதிகம் விற்ற புத்தகங்களைப் பட்டியலிட்டால், ‘மாசே துங்கின் சிந்தனைகள்’ என்ற புத்தகம் 82 கோடிப் பிரதிகள் விற்றதாகவும், உலகின் முதல் நாவலாகக் கருதப்படும் மிகுவெல் டீ செர்வான்டிஸின் ‘டான் குயிக்ஸாட்’ (ஸ்பானிய மொழி) 50 கோடி பிரதிகள் விற்றதாகவும் கருதப்படுகின்றன.
இவற்றுக்கு அடுத்தபடியாக வரலாற்றில் சிறந்த நாவலாக மதிக்கப்படும் சார்லஸ் டிக்கன்ஸின் ‘எ டேல் ஆஃப் டூ சிட்டீஸ்’ 20 கோடிப் பிரதிகள்; ஜே.ஆர்.ஆர். டோல்கினின் ‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’ (திரைப்படமாக வந்த கதைதான்) 10-15 கோடிப் பிரதிகள்; அந்த்வான் து செந்த் எக்சுபெரி எழுதிய ‘குட்டி இளவரசன்’ (தமிழிலும் வெளியாகியுள்ளது) 14 கோடிப் பிரதிகள் போன்றவை வருகின்றன.
தென்னமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் ‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’; விளாதிமீர் நாபகோவின் ‘லோலிட்டா’ ஆகிய இரண்டும் 5 கோடிப் பிரதிகள்; ஹிட்லரின் நாஜிப் படையால் அனுபவித்த கொடுமைகள் தொடர்பான ‘ஆன் ஃபிராங்கின் டைரிக் குறிப்பு’ 2.7 கோடிப் பிரதிகள் விற்றுள்ளன.
தொகுப்பு நூல்கள்
கடந்த நூற்றாண்டில் வெளியாகி அதிகம் விற்ற பல புத்தகங்கள் உள்ளன என்றபோதும், நெடிய வரலாற்றின் அடிப்படையில் மேற்கண்ட புத்தகங்கள் அதிகம் விற்றதாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன. பழங்காலப் புத்தகங்களுக்கு தற்போது உள்ளதுபோல அதிக விளம்பரமோ, பிரபலப்படுத்துவதற்கான வசதிகளோ இருக்கவில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் விற்ற நூல்கள் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
‘ஸின்ஹுவா அகராதி’ எனப்படும் மாண்டரின் சீன மொழி அகராதி, ‘சாரணர் தந்தை’ ராபர்ட் பேடன் பவலின் ‘சாரணர் களுக்கான கையேடு’, ‘கின்னஸ் சாதனைப் புத்தகம்’, அமெரிக்காவின் ‘வெப்ஸ்டர் அகராதி’ போன்றவையும் உலகில் அதிகம் விற்ற புத்தகங்களில் முதலிடம் பிடித்துள்ளன. என்றாலும், இவற்றைப் படைப்பாக்கங்கள் என்று வகைப்படுத்த முடியாது.