இணைப்பிதழ்கள்

ஜெயமுண்டு பயமில்லை - 22 மார்ச் 2014

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

கார் ஓட்டிச் சென்ற ஒருவர் ரோட்டில் இடதுபுறம் சென்ற பாதசாரி மீது மோதிவிட்டார். ஏன் கவனிக்கவில்லை என்றதற்கு, ‘‘நான் வலதுசாரி சிந்தனையுள்ள ஆள். அதனால் இடதுபக்கமுள்ள பாதசாரியைக் கவனிக்கவில்லை’’ என்றாராம். ஒருபக்கமாகவே நம் பார்வை இருப்பது கல்வி விஷயத்திலும் நமக்கு பாதகமாகவே அமையும்.

வலது - இடது என்று மூளையின் இரு பக்கங்களையும் சரியாகப் பயன்படுத்துவதே சிறந்த வழி என்று கூறியிருந் தேன். அதுபற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

மொழி, இலக்கணம், தர்க்கரீதியாக யோசிப்பது போன்றவை இடது பக்க மூளையின் செயல்கள் என்று பார்த்தோம். இடது பக்க மூளையை அதிகம் உபயோகிக்கும் மாணவர்கள் எழுதுவதில் சிறப்பாக இருப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னால் ஒழுங்குபடுத்தி அழகாக வரிசையாக எழுதுவார்கள். சூத்திரங்கள், வேதியியல் சமன்பாடுகள், வாய்ப்பாடு போன்றவற்றைக் கற்பது இவர்களுக்குச் சுலபமாக இருக்கும். காரணம் எதையும் தர்க்கபூர்வமாக ஆராய்வது இடது மூளையின் செயல்பாடு. இவர்கள் பேசுவதிலும் திறமையானவர்கள். வார்த்தைகளை உபயோகித்து சிலேடையாக விளையாடுவது போன்றவை இவர்களுக்குச் சுலபம். கணிதம் கற்பது இவர்களுக்கு இயல்பாக வரும்.

ஆனால், படம் வரைவது இவர்களுக்கு எப்போதுமே சற்று ஒவ்வாத விஷயமாக இருக்கும். காரணம் அது வலது மூளையின் பேட்டை. ஒரு விஷயத்தைக் கற்பனை செய்வதும் வலதுபக்கச் செயல்பாடாகும்.

வலதுமூளைக்காரர்கள் எதையும் மனதில் சித்திரமாகப் பதிந்துகொள்வார்கள். இவர்களுக்கு எழுதுவது வேப்பங்காய்தான். காரணம் வார்த்தைகள், மொழி போன்றவை எதிர்ப் பக்க மூளையின் வேலை. கணிதம் கற்பது இவர்களுக்கு ஆஸ்திரேலிய பிட்ச்சில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவதுபோல கடினமானது. ஆனால் இவர்கள் விளையாட்டில் கில்லியாக இருப்பார்கள். இசை கற்பதிலும் வாசிப்பதிலும் இளைய ராஜாக்களாக இருப்பார்கள்.

மாணவர்கள் எந்தச் செயல்களில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று கவனித்து அதைப் பலப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யவேண்டும். இடது மூளையை அதிகம் பயன்படுத்துபவர்கள் வலதுபக்க மூளையைத் தூண்டும் செயல்களான படம் வரைதல், இசை கேட்டல் போன்றவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும். இடது கையைப் பயன்படுத்தி எழுதுவது, விளையாடுவது போன்றவையும் வலதுபக்க மூளையைத் தூண்டும்.

வலதுமூளைக்காரர்கள் இடதுபக்க மூளையைத் தூண்டும் செயல்களான சுடோகு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றைப் பயிற்சி செய்யலாம். படிக்கும் எதையும் எழுதி வைத்துக்கொள்வது இவர்களுக்குப் பயனளிக்கும். புதிதாக ஒரு மொழியைப் பயிலலாம்.

-மீண்டும் நாளை...

SCROLL FOR NEXT