இணைப்பிதழ்கள்

ஜெயமுண்டு பயமில்லை - 14/03/14

செய்திப்பிரிவு

நடிகர் விஜயன் நடித்த ஒரு திரைப்படத்தின் பெயர் ஒருமுறை எனக்கு திடீரென்று மறந்துவிட்டது. எவ்வளவு நினைவுபடுத்தியும் ஞாபகம் வரவில்லை. வெகு நாள் கழித்து, ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்ற பாடல் வரியைக் கேட்டதும் உடனே ‘நிறம் மாறாத பூக்கள்’ என்று அந்தத் திரைப்படத்தின் பெயர் நினைவுக்கு வந்துவிட்டது.

இதை ஆங்கிலத்தில் Context Dependent Memory என்கிறார்கள். அதாவது சூழ்நிலையோடு பிணைக்கப்பட்ட நினைவுத்திறன். நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ எந்தச் சூழ்நிலை நம்மைச் சுற்றி இருக்கிறதோ அவற்றையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்கிறோம். இது பெரும்பாலும் நாம் முயற்சி செய்யாமலேயே நம் அடிமனதில் பதிந்து விடுகிறது.

பின்பு நாம் படித்த, பார்த்த விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவரும்போது அந்த சூழலும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது. அது மட்டுமில்லாமல், அந்த சூழலை நினைத்தால் படித்தது நினைவுக்கு வந்துவிடுகிறது. பாடலைக் கேட்டவுடன் திரைப்படப் பெயர் நினைவுக்கு வருவதுபோல.

இது எவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம். நாம் ஒரு விஷயத்தை நினைவில் பதிந்துகொள்ளும்போது நம்மை அறியாமலேயே ஐம்புலன்களாலும் அந்த விஷயத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறோம். திரையரங்கில் ஒரு திரைப்படத்தைக் கண்களால் பார்க்கும்போதே பாடல்வரிகளைக் கேட்டு, பாப்கார்னின் ருசியை உணர்ந்து, இருக்கையின் இதத்தை உணர்ந்து, அருகில் உள்ளவரிடம் இருந்து வரும் சிகரெட் வாசனையை முகர்வது என ஒரே நேரத்தில் அத்தனை விஷயங்களையும் நம் புலன்கள் பதிவு செய்கின்றன.

இதையே நாம் பாடங்களைப் படிப்பதற்கும் நினை வுத் திறனை வளர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். பாடங் களைப் படிக்கும்போதே, அந்தப் பக்கத்தில் இருக்கும் படங்களை, எழுத்துகளின் அமைப்பை மனத்திரையில் பிம்பங்களாகப் பதிந்துகொள்ள வேண்டும். அதே நேரம் பாடங்களை உரக்க வாசிக்கலாம். இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சியை இதற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை வாசித்துப் பதிவு செய்து ஹெட்ஃபோனில் கேட்கலாம்.

முக்கிய சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றைப் பவர்பாயின்ட்டாக (Power Point) மாற்றி கணினியில் அடிக்கடிச் சித்திரமாகப் பார்க்கலாம். இதுபோல ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களை பாடம் படிப்பதற்கு ஈடுபடுத்தினால் ஒருவேளை நாம் படித்தது மறந்துவிட்டால்கூட எந்தச் சூழ்நிலையில் படித்தோம் என்று நினைத்துப் பார்த்தால் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். சிலசமயம் நாம் படிக்கும்போது பெற்றோர் போட்டுக்கொண்ட சண்டையை நினைத்துப் பார்ப்பதுகூட உபயோகமாக இருக்கும்.

-மீண்டும் நாளை...

SCROLL FOR NEXT