இணைப்பிதழ்கள்

கேள்வி மூலை 19: விண்வெளியில் எப்படித் தூங்குவார்கள்?

ஆதி

விண்வெளியில் புவியீர்ப்பு விசை சுத்தமாக இருக்காது. இதனால் விண்வெளி வீரர்-வீராங்கனைகளால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. தேவதூதர்களைப்போல எப்போதுமே காற்றில் மிதக்கவே செய்வார்கள். நம் பண்டைக் கால ஓவியர்கள், சிற்பிகளுக்கு இந்த விஷயம் அப்போதே தெரிந்திருக்குமோ என்னவோ. அதனால்தான் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் தேவதூதர்கள், கிங்கரர்கள் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கிறார்கள் போலும்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலும் விண்கலங்களிலும் ஈர்ப்பு விசை சுத்தமாக இருக்காது (Microgravity). இதனால் அங்கே வாழும் விண்வெளி வீரர்-வீராங்கனைகள் தினசரி தூங்க வேண்டுமென நினைத்தால் உறங்கும் பைகளில் (Sleeping bag) உள்ளே நுழைந்து, தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தூக்கத்திலும் அவர்கள் அலைபாய்ந்துகொண்டே இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் பூமியில் உறங்குவதைப் போல, விண்வெளியில் இடைத் தொந்தரவு இல்லாமல் தொடர்ச்சியாக உறங்குவது சாத்தியமில்லை.

இதற்கு ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பது முதன்மைக் காரணமாக இருக்கலாம். அல்லது எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் இயந்திரங்களின் ஓசை, மனம் கிளர்ச்சியடைந்த நிலை, மன அழுத்தம், காலக் குழப்பம் (Space lag) போன்றவை காரணமாக இருக்கலாம். ஏனென்றால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒவ்வொரு நாளும் 15 சூரிய உதயம், 15 சூரிய மறைவு நிகழும். விண்ணில் அதிகபட்சமாக ஆறு மணி நேரம்தான் ஒருவரால் தூங்க முடிந்திருக்கிறது. அதேநேரம் இந்தத் தூக்கமே ஒருவருடைய உடல்நிலைக்குப் போதும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், ஈர்ப்பு விசை இல்லாமல் இருப்பதால் உடல் அதிகக் களைப்பை உணராது.

SCROLL FOR NEXT