டிஜிட்டல் வழியாக அத்தனை தேவைகளையும் சேவைகளையும் செய்தாக வேண்டும் என்கிற முழக்கம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புதிய பார்வையை முன்வைத்திருக்கிறார் மொபைல் வர்த்தக ஜாம்பவான் லீ ஜன்.
கடந்த வாரம் புது டெல்லியில் நடைபெற்ற இ.டி. குளோபல் பிசினஸ் சமிட் 2017-ல் ஜியோமியின் நிறுவனர் லீ ஜன் கலந்துகொண்டார். அப்போது பேசியவர், “சமீபத்தில் ஜியோமிக்கு முக்கியமான சந்தையாக இந்தியா மாறியுள்ளது. அதனாலேயே அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 ஆயிரம் பணியிடங்களை இந்தியர்களுக்கு ஜியோமி உருவாக்கித் தரத் திட்டமிடுகிறது” என்றார்.
100 கோடி வருமானம்
ஆன்லைன் வர்த்தகத்தில் பிரம்மாண்ட வெற்றி கண்டிருக்கும் இந்நிறுவனம் தற்போது ஆஃப்லைன் (Offline) விற்பனையிலும் கவனம் செலுத்துகிறது. அதாவது நேரடியாகக் கடைகளில் ஜியோமி சாதனங்களை விற்பனை செய்ய 50 சதவீதம் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கவிருப்பதாக லீ ஜன் தெரிவிக்கிறார்.
இதுவரை 8,500 விநியோக மையங்களை இந்நிறுவனம் இந்தியாவில் அமைத்துள்ளது. இந்தியாவில் முதல் ஜியோமி தயாரிப்புத் தொழிற்சாலையை ஆகஸ்ட் 2015-ல் நிறுவியது. இதில்தான் கிட்டத்தட்ட 75 சதவீதம் ஜியோமி போன்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 95 சதவீதம் இந்தியாவிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இந்நிலையில் ஜியோமியின் இரண்டாவது தொழிற்சாலையும் ஆந்திராவில் கூடியவிரைவில் நிறுவப்படும் எனக் கடந்த வாரம் லீ ஜன் அறிவித்திருக்கிறார்.
2014 ஜூலையில் இந்தியாவில் அடியெடுத்து வைத்த இந்நிறுவனத்தின் இரண்டரை ஆண்டு வருமானம் 100 கோடி டாலர்கள். 90 சதவீதம் ஆன்லைன் மூலமாக மட்டுமே தனது சாதனங்களை இந்தியாவில் வெற்றிகரமாக விற்றிருக்கிறது இந்த பெறுநிறுவனம். பிறகு எதற்காக நேரடி விற்பனைக்கும் மிகப் பெரிய முக்கியத்துவம் அளிக்கிறது என்கிற கேள்வி எழுகிறதல்லவா?
நேரடி விற்பனை எதற்கு?
இதற்கான பதில் அவர் கூறிய இரு வார்த்தைகளான `இண்டர்நெட் பிளஸ்’-ல் (Internet Plus) அடங்கியுள்ளது. 2025-ல் உலகை ஆளப்போவது இந்தத் திட்டம் எனச் சொல்லப்படுகிறது. கணினி, மொபைல் ஃபோன் தாண்டி வெவ்வேறு பொருட்களோடு இணையத்தை இணைப்பதே இதன் அடிநாதம். ஆராய்ச்சி கட்டத்தில் இருக்கும் இதனை வளர்த்தெடுப்பதில் முன்னோடியாக ஜியோமி திகழ்கிறது.
மொபைல் இணையம், கிளவுட் கம்பியூட்டிங், இண்டர்நெட் ஆஃப் திங்கஸ் (internet of Things) எனச் சொல்லப்படும் வெவ்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை நமது பாரம்பரியமான தொழிற்சாலைகளில் அமல்படுத்தும் திட்டம் இது. இணையம் பிளஸ் என்னும் போது இணையம் + ‘தயாரிப்பு தொழிற்சாலை’, இணையம் + ‘வணிகம்’, இணையம் + ‘மருத்துவம்’, இணையம் + ‘அரசாங்கம்’, இணையம் + ‘வேளாண்மை’ இப்படி இதன் கிளைகள் விரிந்துகொண்டே போகின்றன.
இணைய உற்பத்தி
கார்களில், ஃபிரிட்ஜ்- வாஷிங் மிஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களில் ஹார்ட்வேர், ஸாஃப்ட் வேர்களைப் பொருத்தி ரிமோட் கண்ட்ரோல் போல எங்கிருந்தும் அவற்றை இயக்குவது.
இணைய மருத்துவம்
நோயாளி பற்றிய அத்தனை மருத்துவத் தகவல்களும் இணையம் மூலமாக ஒன்றிணைக்கப்படும். ஒட்டுமொத்த மருத்துவ மேலாண்மையை ஒரு புள்ளியில் கொண்டு வரும் திட்டம் இது.
இணைய அரசாங்கம்
டிஜிட்டல் தொடர்பு வழியாக மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நேரடி தொடர்பு இதன் மூலம் உண்டாக்கப்படும். மக்களோடு மட்டுமல்லாமல், அரசு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்படும்.
இணைய வேளாண்மை
வானிலை அறிக்கையைத் தெரிந்துகொள்வது முதல் விளைச்சலுக்கு விலை நிர்ணயம் செய்வதுவரை, அத்தனையும் விவசாயிகளே இணையம் மூலமாக நேரடியாகச் செய்வதற்கான திட்டம் இது.
இப்படி ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய `இணையம் பிளஸ்’ திட்டமானது 2015-லேயே சீனாவில் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த முதல் கட்டமாகத் தன்னுடைய சாதனங்களை மேல் தட்டு, நடுத்தர மக்களைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் விற்கத் திட்டமிட்டுள்ளது ஜியோமி. அதற்காகத்தான் முழுவீச்சில் ஆஃப்லைன் விற்பனையும், புதிய தொழிற்சாலையும். ஆனால் இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. இப்போதைக்கு, 7,500 வேலைகளை இந்தியர்களுக்கு ஜியோமி தந்துவருகிறது. அடுத்த கட்டமாக 20 ஆயிரம் பணிகளை உண்டாக்கும் என்பது தொழில்நுட்பத் துறை வித்தகர்களுக்கு நல்ல சமிக்ஞையே!
ஸ்மார்ட்ஃபோன்
தயாரிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்திலும் சீனாவின் ‘நம்பர் 1’ நிறுவனமாகவும் ஜொலிக்கிறது ஜியோமி. இன்றுவரை தன்னை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகச் சொல்லிக்கொள்ளும் இது, தொடங்கி இரண்டே ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருக்கிறது.