இள வயதில் இருந்தே விசேஷங்கள், சடங்குகள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடு கிடையாது. கூட்டமே பிடிக்காது. தனிமை விரும்பி. நிர்ப்பந்தத்தின் காரணமாகவே கலந்துகொள்வேன். பின்னர் சடங்குகள் குறித்து ஓரளவு புரிதல்வந்ததும் உணர்வுபூர்வமாக அவற்றைத் தவிர்ப்பது வழக்கமாயிற்று. எத்தனையோ விஷயங்கள் நமக்குச் சடங்குகளாகவே இருக்கின்றன. விரும்பவில்லை என்றாலும் சடங்குகளுக்கு உட்படுவதைத் தவிர்க்க இயலாது.
கடும்போட்டி நிலவியது!
புது வீட்டில் நாங்கள் குடியேறியபோது ‘கிரகப்பிரவேச’ சடங்குகள் செய்ய எனக்கு மனமில்லை. ஆனால் எதுவுமே செய்யாமல் எப்படிக் குடிபுகுவது? வழக்கமான சடங்குகளுக்கு மாற்று இருக்குமா என்று யோசித்தேன். சட்டென என் நினைவுக்கு வந்தவர்கள் பழனிக்குமாரும் கார்த்திகேயனும்தான். இருவரும் சகோதரர்கள். பழனிக்குமார் அண்ணன். அவர்தான் முதலில் கல்லூரியில் சேர வந்தார்.
தமிழ் இலக்கியம் படிக்கப் பேரார்வம் கொண்டிருந்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் தமிழ் இலக்கியம் படிக்கக் கடும் போட்டி நிலவியது. அவர் ஆர்வத்தைப் பார்த்து, “யாராவது டி.சி. வாங்கினால் அந்த இடத்தில் சேர்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லியிருந்தேன். ஒருநாள் விட்டு ஒருநாள் என என்னைப் பார்க்க அவர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார். பின்னர் அவர் தந்தையும் வர ஆரம்பித்தார்.
விலகி வாழ்வோரைக் குறித்த ஏளனம்!
இடுப்பில் வெள்ளை வேட்டி, தோளில் போர்த்திய வெள்ளைத் துண்டு ஆகியவையே அவர் தந்தையின் உடை. விசாரித்தபோது குடும்பமே வள்ளலார் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்னும் விவரம் தெரிந்தது. பலமுறை நடந்தும் அவர்களுக்கு உதவ முடியவில்லை. தமிழில் இடம் கிடைக்கவே இல்லை. ஆகவே இளங்கலைப் பொருளியல் படிப்பில் சேர்ந்தார்.
அடுத்த கல்வியாண்டில் அவர் தம்பி கார்த்திகேயன். அவருக்கும் தமிழ் இலக்கியத்தில் சேரவே நாட்டம். தந்தையுடன் நடந்தார். இடம் கிடைக்கவில்லை. எனக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. அவர் தந்தை இடைவிடாமல் கல்லூரிக்கு வருவதும் வருத்தத்துடன் திரும்பிச் செல்வதுமான நிலை. கல்லூரியில் அவரைப் பார்த்ததும் ஏளனமாகச் சிரிக்கவும் உதாசீனப்படுத்தவும் பலர் இருந்தனர். அவருடைய உடை காரணமாக இருக்கலாம். மென்மையும் அன்பும் மிக்க அவர் சொற்களும் அணுகுமுறையும் காரணமாக இருக்கலாம். பொதுவில் இருந்து விலகி வாழ்வோரைக் குறித்த ஏளனம்.
வள்ளலார் கொள்கைகளில் பற்றும் பிடிமானமும் கொண்டு அதை வாழ்க்கை முறையாகவே ஆக்கிய அவர்களுக்கு இந்த ஏளனப் பார்வைகள் துச்சமாகவே பட்டிருக்க வேண்டும். கார்த்திகேயனுக்கு ஒருவழியாகக் கடைசிக் கட்டத்தில் இடம் கிடைத்தது. எனக்கு ஏதோ பெரும்பாரம் இறங்கிய உணர்வு ஏற்பட்டது. அப்போது தொடங்கி அந்த மாணவர்களோடும் அவர்களின் தந்தையோடும் எனக்கு ஒட்டுதல் உருவாயிற்று.
அன்னதானம் செய்யுங்கள்
ஒருமுறை பழனிக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் தந்தைக்கும் அவருக்கும் ஜோதிடத்தில் ஈடுபாடும் பயிற்சியும் இருப்பதை அறிந்தேன். வள்ளலாருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா? தெரியவில்லை. எனினும் வள்ளலார் வழியினர் ஏமாற்ற மாட்டார்கள் என நம்பினேன். ஜோதிடம் உண்மையா இல்லையா என்பதைப் பற்றி எனக்குத் தீர்மானம் எதுவும் இல்லை. எனினும் ஜோதிடம் பார்ப்பதில் விருப்பமில்லை. எதிர்காலத்தை அதன் போக்கில் எதிர்கொள்ளலாம், அதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அவசியமில்லை என்பது என் எண்ணம்.
அவர் கேட்டார், “ஐயா, நம்ம பாப்பாவுக்கும் தம்பிக்கும் ஜாதகம் இருக்குங்களா?” நான் “இல்லை” என்றேன். தான் எழுதித் தருவதாகச் சொல்லி விவரங்கள் கேட்டார். நான் தவிர்த்துவந்தேன். தங்களது ஜோதிட அணுகுமுறை பற்றி அவ்வப்போது அவர் எனக்குச் சொல்லியபடியே இருந்தார். ஒருவழியாக அவர் பேச்சில் கரைந்து விவரங்கள் கொடுத்தேன். என் பிள்ளைகளுக்கு ஜாதகம் கணித்து எழுதிக் கொடுத்தார்.
வீடு குடிபுகுதலின்போது அவர்கள் நினைவு ஏற்பட்டு “வீடு குடிபுகுதலுக்கு வள்ளலார் வழி ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அவர்களின் தந்தை இருக்கிறது என்றார். அவர் கொடுத்த பட்டியல்படி பொருட்களை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் குறிப்பிட்ட நாளில் அவர்கள் வர இயலாதபடி ஒரு துர்ச்சம்பவம். எனக்குத் தொலைபேசியில் அழைத்து, “போற்றித் திருஅகவல் முழுவதையும் குடும்பத்தினர் உட்கார்ந்து வாசியுங்கள். கொஞ்சம் அன்னதானம் செய்யுங்கள்” என்று சொன்னார். அது எனக்கு எளிதாகவே இருந்தது.
தட்சிணையாக எதையும் வாங்குவதில்லை!
விடிகாலை எழுந்து குடும்பத்தினரும் என் மாணவர்கள் சிலருமாகச் சேர்ந்து போற்றித் திருஅகவல் முழுவதையும் வாசித்து முடித்தோம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆயிற்று. ஆதரவற்றோர் இல்லச் சிறுவர் சிறுமியர்க்கு ஒருவேளை உணவுக்கான பொருட்களை வழங்கினோம். மிகக் குறைவான அழைப்பாளர்களின் வருகை. மனநிறைவோடு வீட்டில் குடியேறினோம்.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து வீட்டு மாடியில் அறைகள் கட்டி முடித்தபோதும் வள்ளலார் வழியில் செல்வது என்று முடிவெடுத்தோம். அப்போது கார்த்திகேயனின் தந்தையும் இன்னும் சிலரும் வருகை புரிந்தனர். விடிகாலை மூன்று மணிக்குத் தொடங்கி அவர்கள் போற்றித் திருஅகவலை வாசித்தனர். முடிந்ததும் கொஞ்சம் பணத்தையும் அவர்களுக்கென எடுத்து வைத்திருந்த வெள்ளுடைகளையும் கொடுத்தோம். தட்சிணையாக எதையும் வாங்குவதில்லை என்று சொல்லி மறுத்தனர்.
வெற்றுச் செலவுகளைத் தவிர்த்தது மட்டுமல்ல, மனதுக்கு நிறைவான வழிமுறையாகவும் இது அமைந்தது. அதன் பின் நண்பர்கள் இருவரின் குடிபுகுதலைப் போற்றித் திருஅகவல் வாசித்து நானும் என் மனைவியும் நடத்திவைத்தோம்.
இப்போதும் சடங்குகளுக்கு மாற்று என்று நான் யோசிக்கும்போதெல்லாம் வள்ளலார்தான் உடனே நினைவுக்கு வருவார். அவரிடம் அவ்வப்போது மானசீகமாகப் பேசுவதுமுண்டு. “தப்பேது செயினும் நீ பொறுத்தல் வேண்டும்” என்பதே என் வேண்டுதல். அருட்பெருஞ்சோதியும் தனிப்பெருங் கருணையும் அற்புத மாற்று. அதை எனக்கு உணர்த்தியவர்கள் என் மாணவர்கள்.
பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com