இந்திய அஞ்சல் துறை 1854-ல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலகட்டத்தில் இந்திய அஞ்சலகச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தொடங்கப்பட்டது. இன்று இந்திய அஞ்சல் துறை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அதன் கிளைகளில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உலகின் மிகப் பெரிய அஞ்சல் துறையாக வளர்ந்துள்ளது. 1880-ம் ஆண்டு பணப் பரிமாற்ற (money order) திட்டமும் 1882-ல் சேமிப்புத் திட்டமும் தொடங்கப்பட்டு அஞ்சல் துறை சேவையை விரித்துக்கொண்டது.
இந்திய ரிசர்வ் வங்கி, பேமண்ட் பேங்க்ஸ் (Payments banks) என்னும் புதிய வங்கியை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல், பேடிஎம் போன்ற நிறுவனங்கள் பேமண்ட் பேங்க் அனுமதியைப் பெற்றன. 2015-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறைக்கும் பேமண்ட் வங்கிக்கான கொள்கை அளவிலான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கி இந்திய அஞ்சல் துறைக்குப் பேமண்ட் வங்கிக்கான இறுதி உரிமத்தை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் 650 பேமண்ட் பேங் கிளைகளை அஞ்சல் துறை தொடங்கவுள்ளது. பேமண்ட் வங்கிகள் தனிநபரிடமிருந்து ரூ.1 லட்சம் வரை வைப்பு நிதியை வைத்திருக்க முடியும். ஏடிஎம் கார்டுகள், டெபிட் கார்டுகள், இணையப் பரிமாற்றம், மொபைல் வங்கிச் சேவை போன்ற சேவைகளை வழங்க முடியும். ஆனால் கடன், கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை வழங்க முடியாது.
உறிஞ்சும் நட்சத்திரத்தின் படம்
இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் ஆஸ்ட்ரோசாட் (Astrosat) 600 கோடி ஆண்டு வயதான நட்சத்திரத்தைப் படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரம் அழியும் நிலையிலுள்ள பெரிய நட்சத்திரத்திலிருந்து நிறை, ஆற்றல் (mass and energy) போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் இது உறிஞ்சும் நட்சத்திரம் (vampire star) என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரம் அருகிலுள்ள நட்சத்திரத்திலிருந்து ஆற்றலையும் நிறையையும் உறிஞ்சுவதை ஆஸ்ட்ரோசாட் படம் பிடித்துள்ளது. இந்த ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் (PSLV-XL) ராக்கெட் மூலம் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ல் விண்ணில் ஏவப்பட்டது.
நிதிநிலை அறிக்கை 2017-2018
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Budget 2017-2018) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் நான்காவது நிதிநிலை அறிக்கை. இந்திய ரயில்வே துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையும் சேர்த்த முதல் நிதிநிலை அறிக்கை இது. இந்த நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ. 21.47 லட்சம் கோடி. இது விவசாயம், கிராமப்புற மக்கள், இளைஞர், வறுமை, சுகாதார நலன், நிதித்துறை, வரி மேலாண்மை உள்ளிட்ட பத்து அம்சங்களை முக்கியமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அல்லாமல் ரயில்வே துறைக்கு 22 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஐ.ஆர்.சி.டி.சி. (www.irctc.co.in) மூலம் பதிவுசெய்யும் பயணச் சீட்டுகளுக்குச் சேவை வரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 112 பிரிவின் படி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கை ஆர்.கே.சண்முகம் செட்டியார் 1947, நவம்பர் 26-ல் தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
நீட் (National Eligibility and Entrance Test- தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு), தேசிய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வாக நடத்த மத்திய அரசால் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் நீட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மருத்துவக் கழகத்தின் பாடத் திட்டத்துக்கும் மாநிலப் பாடத்திட்டத்துக்கும் பெரும் இடைவெளி இருப்பது இதன் காரணமாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்வுக்குத் தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வைக் கட்டாயமாக்கியது. மேலும் தமிழ், ஆங்கிலம், வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, இந்தி, அஸ்ஸாமி ஆகிய 8 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவித்தது. ஆனால் நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதா தமிழ்நாடு அரசு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தாக்கல் செய்தார்.