பி.காம். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு சிறந்த மாற்றாக பி.ஏ. பொருளாதாரம், பி.பி.ஏ., பி.பி.எம். பட்டப்படிப்புகள் விளங்குகின்றன. பி.ஏ. பொருளாதார படிப்புக்கு உலக அளவில் நல்ல மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி, தனியார் வங்கிகளிலும் பொருளாதாரம் படித்த 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
பி.ஏ. பொருளாதாரத்தில் பணம், வங்கி செயல்பாடு, மதிப்பீடு செய்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. கணிதவியல், விற்பனை, சர்வதேச பொருளாதாரம், துல்லிய பொருளாதாரம், புள்ளியியல், ஃபைனான்ஷியல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுவதால், பொருளாதாரம் படித்தவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. நல்ல கல்லூரியைத் தேர்வு செய்து படிப்பவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணி வாய்ப்பு பெற்றுச் செல்கின்றனர்.
கோல்கத்தா, பெங்களூருவில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு காத்திருக்கிறது. அறிவியல், கணிதம் படித்தவர்களும் பி.ஏ. பொருளாதாரத்தை எடுத்துப் படிக்கலாம். பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட எம்.ஏ. பொருளாதாரம் படிக்கலாம். இதன்மூலம் உலக வங்கியிலும் சர்வதேச அளவிலான நிதி நிறுவனங்களிலும் பணிக்குச் செல்ல முடியும்.
வெளிநாடுகளில் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். பொருளாதாரத் துறையில் திறமை, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமின்றி, உலக அளவில் தேவை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு படித்தால் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்.
இதற்கு அடுத்ததாக பி.பி.ஏ., பி.பி.எம். பட்டப்படிப்புகளைக் கூறலாம். ஒன்றிரண்டு பாடப் பிரிவுகள் தவிர, இந்த இரு படிப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
எம்.பி.ஏ. படிப்புக்கு அடித்தளமாக பி.பி.ஏ. விளங்குவதால், இதில் தொழில் சட்டம், மேலாண்மை கணிதவியல், விற்பனை, மேலாண்மை உற்பத்தி, உபகரண மேலாண்மை, நிதி மேலாண்மை, நேரடி, மறைமுக வரிகள், தொழில்முறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு மேலாண்மை உள்ளிட்ட பாடத் திட்டங்கள் உள்ளன. பி.பி.எம். பாடப்பிரிவில் மேலாண்மை தொடர்பான பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
சிறந்த கல்லூரியில் பி.பி.ஏ., பி.பி.எம். படிப்புகளைப் படித்தால் எம்.பி.ஏ. படிப்புக்கு இடம் கிடைப்பது எளிதாக இருக்கும். கவனமாகப் படித்து, அனுபவ அறிவையும் வளர்த்துக் கொண்டால் பி.ஏ. பொருளாதாரம், பி.பி.ஏ., பி.பி.எம். ஆகிய படிப்புகள் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.