இணைப்பிதழ்கள்

சீனுவாசனின் ‘322 ஆலகோ’ மந்திரம்

குள.சண்முகசுந்தரம்

கணக்குப் பாடத்தைப் பாட்டாகப் பாடிப் புரியவைக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஆசிரியர் கே.சீனுவாசன்.

விழுப்புரம் மாவட்டம் சாலை அகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் சீனுவாசன். இவர் உருவாக்கிய எளிய முறையில் கணிதம் படிக்கும் வீடியோக்கள் யூடியூபில் லைக்குகளை அள்ளுகின்றன.

322 ஆலகோ மந்திரம்

அதிக இலக்கங்கள் கொண்ட எண்களை வாசிப்பதற்கே மாணவர்கள் தட்டுத்தடுமாறுவார்கள். ஆனால், இவரது ‘322 ஆலகோ’ மந்திரம் மூலம் எத்தனை இலக்க எண்ணையும் மாணவர்களை எளிதாக வாசிக்க வைக்கிறார் சீனுவாசன். உதாரணத்துக்கு 7401329383 என்ற பத்து இலக்க எண்ணை எடுத்துக்கொள்வோம். இதன் கடைசி மூன்று இலக்கங்களை ஒதுக்கிவிட வேண்டும். இப்போது இடமிருந்து வலமாக முதல் மூன்று எண்களை அடுத்து ஒரு ‘கமா’வும் அடுத்த இரண்டு இலக்கங்களுக்குப் பக்கத்தில் ஒரு ‘கமா’வும் அடுத்த இரண்டு இலக்கங்களுக்குப் பக்கத்தில் ஒரு ‘கமா’வும் (740,13,29,383) போட்டுப் பிரிக்க வேண்டும் (இப்படிப் பிரிப்பதுதான் 322).

அடுத்து ‘ஆலகோ’ - 322 என்று பிரிக்கப்பட்ட எண்ணை வலமிருந்து இடமாக முதல் இரண்டு இலக்கங்களுக்கு மேல் ஆ(யிரம்) அடுத்த இரண்டு இலக்கங்களுக்கு மேல் ல(ட்சம்), அடுத்த மூன்று இலக்கங்களுக்கு மேல் கோ(டி) இப்படி எழுதிவிட்டால் அந்தப் பத்து இலக்க எண்ணை 740 கோடியே 13 லட்சத்து 29 ஆயிரத்து 383 என்று மாணவர்கள் எளிதாக வாசித்துவிடுவார்கள்.

எளியமுறை கணிதம்

இதேபோல் கழித்தலுக்கும் ஒரு புதுமையான வழியைச் சொல்கிறார் சீனுவாசன். பதினெட்டிலிருந்து ஒன்பதைக் கழிக்க வேண்டுமானால் மாணவர்களுக்கு விரல்விட்டு எண்ணுவதற்குக் கை, கால் விரல்கள் போதாது. அதற்குப் பதிலாக பத்திலிருந்து பதினெட்டு வரும் வரை விரல்களை விட்டுக்கொண்டே போக வேண்டும். 18 வரும்போது எத்தனை விரல்கள் விடப்பட்டுள்ளதோ அதுதான் கணக்கின் விடை.

வகுத்தலுக்கும் புதுமை வைத்திருக்கும் இந்தக் கணக்கு ஆசிரியர், பெருக்கலுக்கு மட்டும் ஆறு முறைகளைக் கைவசம் வைத்திருக்கிறார். எளிதில் கணிதம் கற்கும் 50 வழிமுறைகளை ‘கே.சீனுவாசன்’ என்ற தனது யூடியூப் பதிவில் வைத்திருக்கிறார். சீனுவாசன் பக்கங்கள் என்ற இவரது பிளாக் ஸ்பாட் (www.vasanseenu.blogspot.com) பக்கத்தில் இன்னும் ஏராளமான தகவல்கள் நிரம்பி வழிகின்றன. இது மாத்திரமல்ல. எளிய முறை கணிதம் படிக்க இருபது பாடல்களை உருவாக்கியிருக்கும் சீனுவாசன், அதில் எட்டுப் பாடல்களை இசையுடன் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

பாட்டாலே கணிதம் சொன்னால்

“பாலையும் தண்ணீரையும் பிரித்தால் அன்னம்.

முழுப் பொருளைச் சமமாகப் பிரிப்பதுதான் பின்னம்.

தலையினிலே தொகுதி வரும்

பாதத்திலே பகுதி வரும்.

இடையில் வரும் கோட்டுத்துண்டு பின்னத்தின் சின்னம்.

தலைபாரம் குறைவானால் தாங்கும் பின்னம்.

தலைபாரம் அதிகமானால் தாங்காப் பின்னம்; அது தகாப் பின்னம்.

தாங்காத பாரத்தை முழு எண்ணாய் கீழிறக்கித்

தாங்கும்படி கலந்து நிற்கும் பின்னமே கலப்புப் பின்னம்”

பின்னத்துக்காக சீனுவாசன் எழுதி இசைத்திருக்கும் பாடல் இது. பாடங்களுக்கு மட்டுமில்லாமல், மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பாடல்களையும் எழுதிப் பாடவைத்திருக்கிறார் இவர்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கிரண் பிர் சேத்தி (Kiran Bir Sethi) என்பவர் கல்வி கற்பிக்கும் முறையில் புதிய ஆராய்ச்சிகள் நடத்த ‘ரிவர்சைடு ஸ்கூல்’ என்கிற மையத்தை 2001-ல் உருவாக்கினார். அதில் ஆண்டுதோறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இந்தப் போட்டியில் தேர்வுக்கு வைக்கப்படும். சீனுவாசன் தனது பள்ளி மாணவர்களின் எட்டுக் கண்டுபிடிப்புகளை இந்தப் போட்டிக்கு அனுப்பினார். அதில் இந்தப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு சமர்ப்பித்த சாக்பீஸ் துகள்கள் வெளியில் சிந்தாத, ‘மாதிரி டஸ்டருக்கு’ பரிசு கிடைத்தது.

இதையெல்லாம் எப்படிச் சாதிக்க முடிந்தது என்று கேட்டால், “அரசுப் பள்ளியின் பிள்ளைகள் மீது ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால், இங்கேயும் ஆற்றல்மிக்க மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்காக நான் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெடுகிறேன்; அதற்கான பலனையும் கண்கூடாகப் பார்க்கிறேன் அவ்வளவுதான்” என்று அடக்கமாகப் பதில் சொல்கிறார் சீனுவாசன்.

தொடர்புக்கு: 8608670365

SCROLL FOR NEXT