இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - தென்கொரியாவின் புதிய அதிபர்

செய்திப்பிரிவு

தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மூன் ஜேயின் (64) 41.08 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண் அதிபர் பார்க் குன் ஹை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிப் பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் கொரிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன் ஜேயின், கொரிய விடுதலை கட்சியைச் சேர்ந்த, ஹாங்ஜியூன் பியோ உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மனித உரிமை வழக்கறிஞரான மூன் ஜேயின், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார். எளிமையாக நடந்த பதவியேற்பு விழாவில் அவர் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். வட கொரியாவுக்கு இணக்கமான கொள்கைகள் கொண்ட இவர், சரியான நேரம் வரும்போது வடகொரியாவுக்கும் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் இளம் அதிபர்

பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸ்வா ஒல்லான் பதவிக் காலம் முடிவதால் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஒல்லான், வலதுசாரித் தலைவர் மரின் லெ பென், விடுதலைக் கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மெக்ரான், இடதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜான்லிக் மெலான்ச்சான் ஆகிய நால்வர் போட்டியிட்டனர். முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடந்தது. இதில் குறைந்த வாக்குகள் பெற்ற ஃபிரான்ஸ்வா ஃபீயன் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டார். முதல் கட்ட வாக்குப் பதிவில் 23.7 சதவீதம் வாக்குகளைப் பெற்ற வலதுசாரி தலைவரும், பெண் வேட்பாளருமான மரின் லெ பென் 21.7 சதவீதம் வாக்குப் பெற்ற இமானுவேல் மெக்ரானும் இரண்டாவது கட்டத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மெக்ரான் 65.3 சதவீத ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 39 வயதான மெக்ரான் இந்த வெற்றி மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் எனும் பெருமையையும் தட்டிச் சென்றார்.

மகளிர் கிரிக்கெட்டில் ஜூலன் கோஸ்வாமி சாதனை

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப் பந்து வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஜிம்பாவே, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இந்தியா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீராங்கனை காத்ரின் பிட்ஸ்பாட்ரிக் சாதனையை முறியடித்துள்ளார் ஜூலன். 34 வயதான இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி, 153 போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி வீரர் ரைசிபி டொசாக்கேயை வீழ்த்தியதன் மூலம் அவர் 181-வது விக்கெட்டைப் பெற்றார். 2002-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.

சீனா வடிவமைத்த பயணிகள் விமானம்

முழுவதும் சீனாவிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதலாவது பயணிகள் விமானச் சோதனை ஓட்டம் கடந்த வாரம் வெற்றிபெற்றது. சி 919 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பயணிகள் விமானத்தைச் சீன வர்த்தக விமான நிறுவனம் (Commercial Aircraft Corporation of China- COMAC) தயாரித்துள்ளது. ‘Made in China 2025’ என்னும் உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் பழமையான பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனம், 100 ஆண்டுகள் பழமையான அமெரிக்கப் போயிங் நிறுவனம் ஆகியவற்றுக்கு மாற்றாகச் சர்வதேச விமானச் சந்தையில் நுழைவதற்கான சீனாவின் குறிக்கோளின் ஒரு கட்டம் என இந்த விமானத் தயாரிப்பு பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சீனா பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தது. 168 பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆற்றல் படைத்த இந்த விமானம், 5,555 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து செல்லக்கூடியது. போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தின் 737 விமானம், ஏர் பஸ் நிறுவனத்தின் ஏ 320 விமானம் ஆகியவற்றுக்கு இந்த சி 919 விமானம் நேரடியான போட்டியாக இருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

முதல் உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை

இந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தொடங்கப்பட்டது. மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இதைத் தொடங்கிவைத்தார். எத்தனால் (Ethanol) தயாரிப்பதற்காக இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது. நெல், கோதுமை வைக்கோல், பருத்திச் செடி, சர்க்கரை ஆலைக் கழிவு போன்ற பல விதமான பொருள்களைக் கொண்டு எத்தனால் தயாரிக்கப்படுகிறது. 10 சதவீதம் எத்தனாலை பெரும்பாலான மாநிலங்களில் முடிந்த அளவு சேர்க்கும்படி எண்ணெய் விநியோக நிறுவனங்களிடம் 2015-ல் மத்திய அரசுகேட்டுக்கொண்டது. உலக அளவில் பல நாடுகள் பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்திவருகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.

பதக்கம் வென்றார் ஹர்பிரீத் சிங்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் ஈரான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்திய வீரர்கள் குர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 80 கிலோ எடைப்பிரிவில் ஹர்பிரீத் சிங், கொரியாவின் ஜூன்-ஹூயங் கிம்மை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறினார். அதன் பிறகு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் நா ஜன்ஜியுவை எதிர்கொண்டார்.

நா ஐஞியுவை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ஹர்பிரீத் வீழ்த்திப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ரவீந்தர், ஹர்தீப், நவீன் ஆகிய இந்திய வீரர்கள் 66,98,130 ஆகிய எடைப் பிரிவுகளில் பதக்கத்தைத் தவறவிட்டனர்.

SCROLL FOR NEXT