தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காகக் குரூப்-4, குரூப்-3, குரூப்-2, குரூப்-1 எனப் பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
கல்வித் தகுதியும் பணி வாய்ப்பும்
அந்த வகையில், தற்போது குரூப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம், சட்டப்பேரவை செயலகம் ஆகியவற்றில் உதவியாளர்கள், கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கணக்கர் மற்றும் நேர்முக எழுத்தர் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை உதவியாளர் பணிக்குப் பி.எல். பட்டமும், அதேபோல், நிதித்துறையில் உதவியாளர் பணிக்குப் பி.ஏ. பொருளாதாரம் பி.காம். அல்லது புள்ளியியல் பட்டமும் அவசியம். மற்றப் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு போதும்.
என்ன, எப்படிக் கேட்பார்கள்?
எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். குரூப்-2 ஏ பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் (75 வினாக்கள் பொது அறிவு, 25 வினாக்கள் திறனறிதல் (Mental Ability and Aptitude), பொது ஆங்கிலம் அல்லது பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவுப் பகுதியானது, பட்டப் படிப்பில் தரத்தில் அமைந்திருக்கும். திறனறிதல் மற்றும் பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் பகுதிகள் 10-ம் வகுப்பு தரத்திலும் இருக்கும். பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் - இதில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பகுதியைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இது பற்றி விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட்டுவிட வேண்டும்.
தகுதியுள்ள பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி மே 26-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை, துறைவாரியான காலியிடங்கள், சம்பள முறை, தேர்வுக்கான பாடத்திட்டம் முதலியவற்றை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.
> வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30. இதர வகுப்பினருக்கு அதாவது, எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., பி.சி. (முஸ்லிம்) வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கணவரை இழந்தவர்களுக்கு (ஓ.சி. வகுப்பு) வயது வரம்பு ஏதும் இல்லை.
வரப்போகும் தேர்வு விவரம்
# டி.என்.பி.எஸ்.சி. குரு 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1,953 பணியிடங்கள்.
# பட்டப்படிப்பு கல்வித் தகுதி.
# சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் 200 கேள்விகள்.
# 100 கேள்விகள் மொழிப்பாடத்தில் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும்.
# 75 கேள்விகள் பொது அறிவு.
# 25 கேள்விகள் முடிவெடுக்கும் திறனைச் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
# எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
# நேர்முகத் தேர்வு இல்லை.
# தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பணி வாய்ப்பு.